யோபு புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு உரையாடலும், இவ்வுலகில் ஏன் வேதனைகள் வருகின்றன என்பதைக் குறித்தேயிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த உரையாடல்கள் எவ்விதத்திலும் யோபுவிற்கு உதவவில்லை. யோபு இருந்தது சந்தேக நெருக்கடியிலல்ல, அது உறவின் நெருக்கடி. அவனால், தேவன் மீது நம்பிக்கையாயிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக யோபுவின் தேவை ஒன்றே, தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய இந்த பரிதாப நிலைக்கு காரணமென்ன என்பதை விளக்குமாறு கேட்கின்றான். தேவனை முகமுகமாய் சந்திக்க விரும்பினான்.

இறுதியாக யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. யோபுவின் நண்பன் எலிகூ, தேவன் யோபுவைச் சந்திக்க அவனுக்கு எந்தத் தகுதியுமில்லை என விளக்கமளித்த போது, அதற்கு மாறாக தேவன் யோபுவிற்கு தரிசனமாகிறார் (யோ. 38:1).

தேவன் கேட்பவற்றிற்குப் பதிலளிக்க யோபுவோ, அவனுடைய நண்பர்களோ, வேறு எவருமே தயாராக இல்லை. யோபு தேவனிடம் கேட்கும்படி ஒரு பெரிய பட்டியல் நிறைய கேள்விகளை வைத்திருந்தான். ஆனால் யோபு அல்ல தேவனே கேள்விகளைக் கேட்கின்றார். “இப்போதும் புருஷனைப் போல், இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு” (வச. 3) என ஆரம்பிக்கின்றார். யோபுவின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் குறித்த உரையாடலைக் கொண்டிருந்த முப்பத்தைந்து அதிகாரங்களையும் தள்ளிவிட்ட, கர்த்தர் அற்புதமான இவ்வுலகைக் குறித்த ஒரு கெம்பீரமான கவிதைக்குள் வழிநடத்துகின்றார்.

அனைத்தையும் படைத்த தேவனுக்கும் குறுகிப்போன யோபுவைப் போன்ற மனிதனுக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, தேவனுடைய வார்த்தைகள் வரையறுக்கின்றன. என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க யாரேனும் உளரோ? என்ற யோபுவின் மிகப் பெரிய கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை தேவனுடைய பிரசன்னம் தருகிறது. யோபுவே பதிலளிக்கின்றான், “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என்கின்றான் (42:3)