படகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.

நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).

கடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.