நீங்கள் இணைந்து வாழ விரும்பாத ஒரு நபரோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைதான் “சமுதாயம்” என்று ஹென்ரி நவ்வென் கூறுகிறார். பொதுவாக நாம் நமக்குப் பிடித்தமான மக்கள் மத்தியில்தான் வாழ விரும்புகிறோம். அது சமுதாயமல்ல; அது ஒரு பொழுதுபோக்கு குழுவாக இருக்கலாம். அல்லது பிறருடன் சேர விரும்பாத சுயநலக் குழுவாக இருக்கலாம். ஒரு பொழுதுபோக்குக் குழுவை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த பண்பும், ஒருவரோடொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் தன்மையும், கடின உழைப்பும் தேவையாக உள்ளன.

சரித்திரத்திலேயே பலதரப்பட்ட மக்களை முதன் முதலாக ஒன்றாக இணைத்த நிறுவனம் கிறிஸ்தவ திருச்சபையாகும். ஆதித்திருச்சபையில் யூதர்களும், புறஜாதிகளும், ஆண்களும், பெண்களும்; அடிமைகளும், சுயாதீனர்களும் ஒரே சமமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்துப் பவுல் “தேவனுக்குள்ளே ஆதி காலமுதல் மறைந்திருந்த இரகசியம்” என்று வெகு தெளிவாக விளக்கியுள்ளார். திருச்சபையில் பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம், உலகத்தையும் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் ஈர்க்கத்தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று பவுல் கூறியுள்ளார் (எபே. 3:9-10).

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றயத் திருச்சபை இச்செயலை செய்ய தவறிவிட்டது. ஆனாலும், நான் செல்லும் பல இடங்களில் திருச்சபையானது பல தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது. குழந்தைகளைக் கரங்களில் ஏந்தியுள்ள தாய்மார்கள், வேண்டாத நேரங்களில் புழுப்போல நெளிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சிறார்கள், எல்லா நேரங்களிலும் பொறுப்போடு நடக்கக்கூடிய பெரியவர்கள், போதகரது பிரசங்கம் நீண்டதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தால் உறக்கத்தில் ஆழ்ந்துபோகும் மக்கள் என்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதுதான் திருச்சபை.

தேவன் நமக்கு அருளுகிற சமுதாய அனுபவத்தை நாம் பெற விரும்பினால், “நம்முடைய தரத்திற்கு ஒத்துவராத மக்களையும்”, நமது திருச்சபையிலே அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளும் மனமுடையவர்களாக இருக்க வேண்டும்.