எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.