மெய்யான மாற்றம்
தெற்கு லண்டனின் கூட்டநெரிசலான பகுதியில் பிறந்து வளர்ந்த கிளாட், தன்னுடைய 15ஆம் வயதில் மரிஜூவானா என்னும் போதைப்பொருளையும், 25ஆம் வயதில் ஹெராயீனையும் விற்கும் அளவிற்கு வாழ்ந்தான். அவனுடைய அந்த தொழிலுக்கு ஆதரவாக, இளைஞர்களுக்கு ஆலோசனை கூறும் நபராய் சமுதாயத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். அவனுடைய மேலாளர் மூலமாய் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டான். இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். கிறிஸ்தவ விசுவாசத்தைப் போதிக்கும் வேதபாட வகுப்பைப் படித்து, கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வருவதைக் குறித்துப் பயந்தான். அவன் சொல்லும்போது, “அவருடைய மகிமையான பிரசன்னத்தை உணர்ந்தேன். மக்கள் என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கண்டனர். இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான போதைப் பொருள் தொழிலாளி நான்தான்” என்று கூறினான்.
இயேசு அத்துடன் நிறுத்தவில்லை. கிளாட், கொக்கென் என்னும் போதைப் பொருள்கள் நிரம்பிய பையை நிறுத்துப்பார்க்கும்போது, இது முட்டாள்தனம் என்பதையும் தான் மக்களுக்கு விஷத்தைக் கொடுப்பதாகவும் உணர்ந்தான். போதைப் பொருட்கள் விற்பதை நிறுத்திக் கொண்டு, வேறு வேலை தேடிப் பிழைத்துக்கொள்ளத் தீர்மானித்தான். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு அவனுடைய மொபைல் போனை அணைத்துவிட்டான். திரும்பவும் அந்த தொழிலுக்குப் போகவில்லை.
இந்த வகையான மாற்றத்தையே எபேசு சபைக்கு பவுல் நிருபம் எழுதும்போது குறிப்பிடுகிறார். “மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு…மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசியர் 4:22-24) என்று ஆலோசனை கூறுகிறார். இதற்கு பவுல் பயன்படுத்தும் வினைச்சொல்லானது, நாம் புதிய சாயலை அன்றாடம் தரித்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கிளாடுடைய வாழக்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்ததுபோல, நம்முடைய புதிய சாயலைத் தரித்து கிறிஸ்துவைப் போல் மாறுவதற்கு அவர் விரும்புகிறார்.
கோபமான இருதயம்
“குயர்நிகா” என்பது பிக்காசோவின் தலைசிறந்த அரசியல் ஓவியம். 1937ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பானிய பட்டணத்தின் வரைபடம். இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஸ்பானிய புரட்சியின்போது, நாசிச ஜெர்மானிய விமானங்கள் தங்கள் குண்டுகளை இந்த பட்டணத்தில் பரிசோதித்துப் பார்க்க ஸ்பானிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்கை பல உயிர்களைப் பலிவாங்கியது. இந்த அநாகரீகமான யுத்த பயிற்சி உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிக்காசோவின் இந்த ஓவியம், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகத்தைக் கற்பனையாகச் சித்தரித்து, ஒருவர் மற்றவர்களை அழிக்கும் அநாகரீகமான செயல்களைப் பேச்சுப் பொருளாய் மாற்றியது.
அநியாயமாய் இரத்தஞ்சிந்துதல் நடைபெறவில்லை என்று எண்ணுகிறவர்கள், இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூரவேண்டியுள்ளது. “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும்... தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத்தேயு 5:21-22). நிஜத்தில் கொலைசெய்யப்படவில்லை என்றாலும் இருதயத்தில் மற்றவர்களை கொலைசெய்வது சாத்தியம்.
மற்றவர்களை அழிக்கும் அளவிற்கான கோபம் நமக்கு ஏற்படுமானால், நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலும், கட்டுப்பாடும் அத்தியாவசிய தேவை என்பதை உணரவேண்டும். மாம்சீக எண்ணங்கள் ஆவியின் கனிகளால் மாற்றப்படவேண்டும் (கலாத்தியர் 5:19-23). அதன் பின்பு அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நம்முடைய உறவுகளில் வெளிப்படும்.
இரக்கத்தை தெரிந்தெடுத்தல்
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பனிக்கட்டிகளால் ஏற்படும் துர்ச்சம்பவங்களை நகைச்சுவைக்காக ஒளிபரப்பும் 5 நிமிட நிகழ்ச்சி மிக முக்கியமானதாய் கருதப்பட்டது. அதில் தங்கள் வீடுகள் மேலிருக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் மக்கள், வீட்டுக் கூரையின் மேல் ஏறுவதும், வழுக்கி விழுவதுமான காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் இடம்பெறும். அந்த நிகழ்வு காண்போருக்குச் சிரிப்பை வரவழைத்தது. மக்கள் தங்களுடைய மதியீனமான செய்கைகளை அதில் வெளிப்படுத்தியபோது, சிரிப்பு சத்தம் அதிகமாகியது.
இதுபோன்ற நகைச்சுவையான வீட்டுச் சம்பவங்களின் காணொலிகளைப் பார்ப்பது தவறல்ல. ஆனால் அது மற்றவர்களுடைய வேதனையிலும் வலியிலும் வேதனைப்படுகிறவர்களாய் அல்லாமல், நம்மைச் சிரிக்கக்கூடியவர்களாய் மாற்றிவிடுகிறது. இஸ்ரவேல் மற்றும் ஏதோம் ஆகிய இரு தேசங்களுக்கு இடையே நிகழ்ந்த அப்படியொரு சம்பவம் ஒபதியா புத்தகத்தில் பதிவாகியுள்ளது. தேவன் இஸ்ரவேலை தண்டிக்கும்போது, அதைக் கண்டு ஏதோம் மகிழ்ந்திருந்தது. அவர்கள் அதைச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரவேல் தேசத்தை சூறையாடி, அவர்களை தப்பவிடாமல் காட்டிக்கொடுத்து, அவர்களின் எதிரி தேசங்களுக்கு ஆதரவாய் செயல்பட்டனர் (ஒபதியா 1:13-14). “உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும்... இருக்கவேண்டியதாயிருந்தது. எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது” (வச.12,15) என்று ஏதோமுக்கு விரோதமான எச்சரிப்பு செய்தியை ஒபதியா அறிவிக்கிறார்.
மற்றவர்கள் வேதனை அனுபவிக்கும்போது, அது அவர்களுடைய செய்கைக்கு உகந்தது என்று தோன்றினாலும், நம்முடைய இறுமாப்புக்குப் பதிலாய் இரக்கத்தையே நாம் தேர்வுசெய்யவேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் நமக்கில்லை. தேவனே அதைச் செய்ய முடியும். இவ்வுலக ராஜ்யம் அவருக்குச் சொந்தமானது (வச.21). இரக்கம் மற்றும் நீதி செய்யும் அதிகாரம் அவருக்கே உரியது.
அனைத்தும் அறிந்த தேவன்
ராகுலுக்கும் நிஷாவிற்கும் அந்த வாரம் கடினமானதாயிருந்தது. ராகுல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்தொற்று பாதிப்பின் நாட்களில், வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருந்து அவருடைய நான்கு பிள்ளைகளும் சோர்ந்துபோயிருந்தனர். அத்துடன் மிஞ்சியிருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு நல்ல ஆகாரத்தை நிஷாவினால் சமைக்க முடியவில்லை. அந்த தருணத்தில், கேரட் சாப்பிடவேண்டும் என்று அவள் ஏங்கினாள்.
சரியாய் ஒருமணி நேரம் கழித்து, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அவருடைய சினேகிதி அனிதாவும் அபிஷேக்கும் அவர்களுக்காய் நேர்த்தியான உணவைச் சமைத்துக்கொண்டு வந்திருந்தனர். அதில் கேரட்டும் இடம்பெற்றிருந்தது.
பிசாசுக்கு எல்லாம் தெரியுமா? இல்லை. தேவனுக்கு எல்லாம் தெரியும் என்பதைப் பிரதிபலிக்கும் ஆச்சரியமான ஒரு யூத கதை உள்ளது. பார்வோன், “பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிட... கட்டளையிட்டான்” (யாத்திராகமம் 1:22). அந்த படுகொலைச் சம்பவம் அதி உன்னதமான ஒரு காரியத்தை நிகழ்த்தியது. மோசேயின் தாயும் தன் பிள்ளையைப் பாதுகாப்பாய் நதியில் மிதக்க விடுகிறாள். அந்த நைல் நதியிலிருந்து தேவ ஜனத்தை பின் நாட்களில் மீட்கப்போகும் குழந்தையை பார்வோன் குமாரத்தி மீட்டெடுக்கிறாள். அந்த குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை அவனுடைய தாயிடத்திலேயே ஒப்படைத்ததே ஆச்சரியம் (2:9).
இந்த யூத தேசத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட ஒரு பிள்ளை உதிக்கும். அதனுடைய வாழ்க்கை ஆச்சரியம் நிறைந்ததாயும் தெய்வீக தொடுதல் நிரம்பியதாயிருக்கும். அனைத்திற்கும் மேலாக, நம்முடைய பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இயேசு நம்மை மீட்டெடுக்கும் பாதையை நமக்குக் காட்டுவார்.
கடினமான சூழ்நிலைகளும் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. “தேவன் எனக்கு கேரட் கொடுத்தார்” என்று நிஷா பெருமிதம் கொள்ளுகிறாள்.
மகிழ்ந்திருக்க காரணங்கள்
கிளென்டா திருச்சபையின் வளாகத்திற்குள் நுழையும்போதே அவளுக்குள்ளிருந்த மகிழ்ச்சி அந்த அறையையே நிரப்பிற்று. அவர் கடினமான மருத்துவச் சிகிச்சை பெற்று, மீண்டு வந்திருக்கிறார். ஆலய ஆராதனை முடிந்து, நாங்கள் வழக்கமாய் சந்திக்கும்போது, அவர் என்னோடு சேர்ந்து கண்ணீர் சிந்திய கடினமான தருணங்களுக்காகவும், அவருடைய மென்மையான கடிந்துகொள்ளுதலுக்காகவும் என்னை உற்சாகப்படுத்தியதற்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். சூழ்நிலை எதுவாயினும், என்னுடைய பிரச்சனைகளை வெளிப்படையாய் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்து, தேவனுக்கு நன்றி சொல்லும் காரணங்களை எனக்கு அவர் நினைப்பூட்டுவார்.
அவர்களை “கிளென்டா அம்மா” என்று அன்போடு அழைக்க அனுமதித்த அவர்கள், என்னை கட்டித் தழுவினார். “மகளே” என்று அணைத்துக்கொண்டார். நாங்கள் சிறிதுநேரம் பேசி ஜெபித்தோம். அதற்குப் பின், மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும் பொருட்டு, பாடிக்கொண்டே என்னை விட்டு நகர்ந்தார்.
சங்கீதம் 64இல், தன்னுடைய குற்றச்சாட்டுகளுடன் தாவீது தேவனை அணுகுகிறான் (வச.1). தன்னைச் சுற்றி பெருகும் அக்கிரமத்திற்கு விரோதமாய் தேவனிடத்தில் முறையிடுகிறான் (வச.2-6). ஆனால் தேவனுடைய வல்லமையின் மீதும் வாக்குத்தத்தத்தின் மீதான நம்பிக்கையை அவன் இன்னும் இழக்கவில்லை (வச.7-9). மேலும், “நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்” (சங்கீதம் 64:10) என்பதை நன்கு அறிந்திருந்தார்.
இயேசுவின் வருகைக்காய் காத்திருக்கும் தருணங்களில் நாம் கடினமான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனாலும், தேவன் படைத்த ஒவ்வொரு நாளிலும் மகிழ்ந்திருக்கும் காரணங்கள் எப்போதும் நமக்கு இருக்கும்.