“குயர்நிகா” என்பது பிக்காசோவின் தலைசிறந்த அரசியல் ஓவியம். 1937ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பானிய பட்டணத்தின் வரைபடம். இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஸ்பானிய புரட்சியின்போது, நாசிச ஜெர்மானிய விமானங்கள் தங்கள் குண்டுகளை இந்த பட்டணத்தில் பரிசோதித்துப் பார்க்க ஸ்பானிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்கை பல உயிர்களைப் பலிவாங்கியது. இந்த அநாகரீகமான யுத்த பயிற்சி உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிக்காசோவின் இந்த ஓவியம், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகத்தைக் கற்பனையாகச் சித்தரித்து, ஒருவர் மற்றவர்களை அழிக்கும் அநாகரீகமான செயல்களைப் பேச்சுப் பொருளாய் மாற்றியது.
அநியாயமாய் இரத்தஞ்சிந்துதல் நடைபெறவில்லை என்று எண்ணுகிறவர்கள், இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூரவேண்டியுள்ளது. “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும்… தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத்தேயு 5:21-22). நிஜத்தில் கொலைசெய்யப்படவில்லை என்றாலும் இருதயத்தில் மற்றவர்களை கொலைசெய்வது சாத்தியம்.
மற்றவர்களை அழிக்கும் அளவிற்கான கோபம் நமக்கு ஏற்படுமானால், நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலும், கட்டுப்பாடும் அத்தியாவசிய தேவை என்பதை உணரவேண்டும். மாம்சீக எண்ணங்கள் ஆவியின் கனிகளால் மாற்றப்படவேண்டும் (கலாத்தியர் 5:19-23). அதன் பின்பு அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நம்முடைய உறவுகளில் வெளிப்படும்.