Archives: செப்டம்பர் 2022

எங்கே திரும்புவது?

அந்தப் பள்ளியில் அஷோக்கின் விளையாட்டு திறமையையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத அமைதியையும் பாராட்டாதவரே இல்லை. விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு அலாதி சந்தோஷம்.

தன் வீட்டினருகே இருந்த ஒரு சபைக்குச் சென்றதால் அவன் இயேசுவைப் பின்பற்ற முடிவுசெய்தான். அதுவரைக்கும், அவன் அநேக குடும்ப நெருக்கடிகளைச் சந்தித்தான், அதற்கு ஆறுதலாகப் போதைப் பொருட்களையும் பழகிக்கொண்டான். அவனுடைய மனமாற்றத்திற்குப்பின் சிலகாலம் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சிலவருடங்கள் கழிந்து மீண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினான். முறையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால், போதைப் பழக்கம் எல்லை தாண்டவே அவன் மரித்தான்.

நெருக்கடியின்போது நாம் பழைய பாவத்திற்குத் திரும்புவது சுலபம். இஸ்ரவேலர்கள் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த அசீரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிக்க, உதவிக்காக தங்கள் பழைய எஜமானர்களான எகிப்தியர்களிடம் திரும்பினர் (ஏசாயா 30:1–5). இது அழிவுக்கேதுவானது என்று தேவன் முன்னறிவித்திருந்தாலும், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், அவர்களுக்காகத் தொடர்ந்து அக்கறை கொள்கிறார். தேவனின் இதயத்தை ஏசாயா, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்" (வ.18). என்று வெளிப்படுத்தினார்.

நமது வேதனைக்கு வேறெங்கிலும் ஆறுதலைத் தேட நாம் முயலுகையில், தேவன் இப்படியே நம்மையும் அணுகுகிறார். நமக்கு உதவ விரும்புகிறார். நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களால் நம்மை நாமே காயப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. சில பொருட்களும், பழக்கங்களும் நமக்கு உடனடி தீர்வை தருமென்று நாம் ஈர்க்கப்படலாம். ஆனால் தம்மோடு நெருக்கமாக நடக்கையில் உண்டாகும், அதிகாரப்பூர்வமான நிரந்தர தீர்வை நமக்குத் தரவே, தேவன் விரும்புகிறார்.

காபிக்கொட்டை கிண்ணம்

நான் காபி பிரியனில்லை, ஆனால் காபிக்கொட்டையின் வாசனை எனக்கு ஆறுதலையும், ஆசையையும் உண்டாக்கியது. எனது வாலிபமகள் மெலிசா தன் படுக்கை அறையை அலங்கரிக்கையில், ஒரு கிண்ணத்தில் காபிக்கொட்டைகளை நிரப்பி அதின் இதமான வாசனை அறையெங்கும் வீசும்படி செய்வாள்.

அவள் பதினேழு வயதில் ஒரு சாலை விபத்தில் மரித்து, சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் அந்த காபிக்கொட்டை கிண்ணம் எங்களிடம் உள்ளது. எங்களுடன் மெலிசாவின் வாழ்க்கையை நினைவூட்டும் நறுமணமாக இன்றும் தொடர்கிறது.

நறுமணத்தை ஞாபகக்குறியாக வேதமும் பயன்படுத்துகிறது. உன்னதப்பாட்டில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்க நறுமணம் அடையாளமாய் உள்ளது (பார்க்கவும் 1:3; 4:11, 16). ஓசியாவின் புத்தகத்தில், இஸ்ரவேலை தேவன் மன்னிப்பது, "லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6) என்றுள்ளது. இயேசுவின் பாதத்தை மரியாள் நளதத்தால் பூசுகையில், மரியாளும் அவள் உடன்பிறந்தவர்களும் வாழ்ந்த அந்த வீடு முழுவதும் "தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" (யோவான் 12:3), இது இயேசுவை அடக்கம்பண்ணுதலுக்கு ஏதுவாய் இருந்தது (பார்க்கவும். வ.7)

பரிமளவாசனை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நமக்கிருக்கும் சாட்சியை நினைப்பூட்டுகிறது. இதைப் பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15) என்று நமக்கு விளக்குகிறார்.

காபிக்கொட்டையின் வாசனை எனக்கு மெலிசாவை நினைப்பூட்டுவதுபோல, இயேசுவையும் அவரது அன்பையும் நமது வாழ்க்கை வெளிப்படுத்தி, அனைவருக்கும் அவர் தேவை என்பதைப் பிறருக்கு நினைப்பூட்டும்படி வாழ்வோம்.

மனதிலிருந்து

“செயல்படும் நோவா பேழை” என்ற பெயர் விலங்குப் பிரியர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றியது. பெரும் சத்தம் மற்றும் துர்நாற்றம் ஒரு அறையிலிருந்து வந்தது என்ற புகாரின் அடிப்படையில், அமெரிக்க விலங்குகள் நலச்சங்கத்தினர் வந்து பார்வையிட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் “செயல்படும் நோவா பேழை” குழுவினர்  புறக்கணிக்கப்பட்ட விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தனர் (பின்னர் வெளியேற்றப்பட்டது). புறக்கணிக்கப்பட்ட சுமார் நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டு மீட்டனர்.

துர்நாற்றம் வீசும் நூற்றுக்கணக்கான விலங்குகள் நம்மிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நம் மனதில் பாவம் நிறைந்த எண்ணங்களும், செய்கைகளும் பேணி வளர்க்கப் படாமல், அவற்றைக் களைந்தெறிய வேண்டும் என இயேசு கூறினார்.

ஒரு மனிதனைச் சுத்தமுள்ளவனாகவும் தீட்டுள்ளவனாகவும் மாற்றுவதைக் குறித்து இயேசு தம் சீஷர்களிடம் போதிக்கையில், அழுக்கான கரங்களோ அல்லது "வாய்க்குள்ளே போகிறதோ" மனிதனை தீட்டுப்படுத்தாது, மாறாகத் தீய இதயமே அவனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:17–19) என்றார். நமது மனதிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், நமது வாழ்க்கையே. பின்னர் இயேசு, நம் மனதிலிருந்து வெளியேறும் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்கிறார் (வ.19). வெளிப்பிரகாரமாக நாம் எவ்வளவுதான் சமய சடங்குகளையும், மதம்சார்ந்த செயல்களையும் செய்தாலும் நம் மனதை அவை சுத்தப்படுத்தாது. நம் இதயம் மாற நமக்குத் தேவனே தேவை.

துர்நாற்றம் வீசும் வாழ்வின் அழுக்குகளை அவரே சுத்தம் செய்ய நம்மை அனுமதிப்போம். நம் மனதில் புதைந்துள்ளவற்றைக் கிறிஸ்து வெளிக்கொணர்ந்து, நமது வார்த்தைகளும் செயல்களும் அவரது விருப்பத்தின்படி அவர் மாற்றுகையில், அவரைப் பிரியப்படுத்தும் நறுமணமாக நாமும் மாறுவோம்.

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

பிரமிப்பிற்கான ஜன்னல்

புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.

அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த  அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப்  பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.

கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).

அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, ​​உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.

உண்மை ஒருபோதும் மாறாது

என் மகன் சேவியர் சிறுவனாக இருந்தபோது, நானும் அவனும் ஒரு கற்பனையான சிறுவர் கதையைப் படித்தோம். அதில் ஒரு சிறுவன் தனது ஆசிரியருக்கு எதிராக, பேனாவிற்கு தானே சொந்தமாக ஒரு மாற்றுப் பெயரை வைக்கிறான். அவன் தனது சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பேனாக்களுக்குத் தான் உருவாக்கிய புதிய பெயரைப் பயன்படுத்தச் சொல்கிறான். சிறுவனின் இந்த மாற்றுப் பெயர் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. இறுதியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பேனாக்களைக் குறிப்பிடும் முறையை மாற்றிக்கொண்டனர், காரணம் எல்லோரும் ஒரு சிறுவன் ஏற்படுத்திய மாற்றுப் பெயரை உலகளாவிய உண்மையாக ஏற்றுக்கொண்டனர்.

சரித்திரம் முழுவதும், குறையுள்ள மனிதர்கள் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும் நிஜத்தின் பரிமாணங்கள் அல்லது தங்களுக்குச் சவுகரியமான யதார்த்தங்களை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தழுவிக்கொண்டனர். இருப்பினும், வேதகமாம் ஒரே சத்தியத்தையும், ஒரே மெய் தேவனையும், இரட்சிப்புக்கான ஒரே வழியையும் சுட்டிக்காட்டுகிறது. அது கிறிஸ்துவே. அவர் மூலமே "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்" (ஏசாயா 40:5). சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் போலவே மனிதர்களும் தற்காலிகமானவர்கள், தவறிழைக்கக்கூடியவர்கள் மற்றும் நம்பத்தகாதவர்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார் (வ.6-7). அவர், "புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்" (வ.8) என்றார்.

வரப்போகும் கிறிஸ்துவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம்பகமான அடித்தளத்தையும், பாதுகாப்பான புகலிடத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருப்பதால் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பலாம் (யோவான் 1:1). இயேசுவே என்றும் மாறாத உண்மை.