உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் “அனுதாப இடைவெளி” எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, “வாழ்நாளெல்லாம்” (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.