நான் காபி பிரியனில்லை, ஆனால் காபிக்கொட்டையின் வாசனை எனக்கு ஆறுதலையும், ஆசையையும் உண்டாக்கியது. எனது வாலிபமகள் மெலிசா தன் படுக்கை அறையை அலங்கரிக்கையில், ஒரு கிண்ணத்தில் காபிக்கொட்டைகளை நிரப்பி அதின் இதமான வாசனை அறையெங்கும் வீசும்படி செய்வாள்.

அவள் பதினேழு வயதில் ஒரு சாலை விபத்தில் மரித்து, சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் அந்த காபிக்கொட்டை கிண்ணம் எங்களிடம் உள்ளது. எங்களுடன் மெலிசாவின் வாழ்க்கையை நினைவூட்டும் நறுமணமாக இன்றும் தொடர்கிறது.

நறுமணத்தை ஞாபகக்குறியாக வேதமும் பயன்படுத்துகிறது. உன்னதப்பாட்டில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்க நறுமணம் அடையாளமாய் உள்ளது (பார்க்கவும் 1:3; 4:11, 16). ஓசியாவின் புத்தகத்தில், இஸ்ரவேலை தேவன் மன்னிப்பது, “லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்” (ஓசியா 14:6) என்றுள்ளது. இயேசுவின் பாதத்தை மரியாள் நளதத்தால் பூசுகையில், மரியாளும் அவள் உடன்பிறந்தவர்களும் வாழ்ந்த அந்த வீடு முழுவதும் “தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது” (யோவான் 12:3), இது இயேசுவை அடக்கம்பண்ணுதலுக்கு ஏதுவாய் இருந்தது (பார்க்கவும். வ.7)

பரிமளவாசனை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நமக்கிருக்கும் சாட்சியை நினைப்பூட்டுகிறது. இதைப் பவுல், “இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்” (2 கொரிந்தியர் 2:15) என்று நமக்கு விளக்குகிறார்.

காபிக்கொட்டையின் வாசனை எனக்கு மெலிசாவை நினைப்பூட்டுவதுபோல, இயேசுவையும் அவரது அன்பையும் நமது வாழ்க்கை வெளிப்படுத்தி, அனைவருக்கும் அவர் தேவை என்பதைப் பிறருக்கு நினைப்பூட்டும்படி வாழ்வோம்.