செப்டம்பர், 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2022

எங்கே திரும்புவது?

அந்தப் பள்ளியில் அஷோக்கின் விளையாட்டு திறமையையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத அமைதியையும் பாராட்டாதவரே இல்லை. விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு அலாதி சந்தோஷம்.

தன் வீட்டினருகே இருந்த ஒரு சபைக்குச் சென்றதால் அவன் இயேசுவைப் பின்பற்ற முடிவுசெய்தான். அதுவரைக்கும், அவன் அநேக குடும்ப நெருக்கடிகளைச் சந்தித்தான், அதற்கு ஆறுதலாகப் போதைப் பொருட்களையும் பழகிக்கொண்டான். அவனுடைய மனமாற்றத்திற்குப்பின் சிலகாலம் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சிலவருடங்கள் கழிந்து மீண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினான். முறையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால், போதைப் பழக்கம் எல்லை தாண்டவே அவன் மரித்தான்.

நெருக்கடியின்போது நாம் பழைய பாவத்திற்குத் திரும்புவது சுலபம். இஸ்ரவேலர்கள் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த அசீரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிக்க, உதவிக்காக தங்கள் பழைய எஜமானர்களான எகிப்தியர்களிடம் திரும்பினர் (ஏசாயா 30:1–5). இது அழிவுக்கேதுவானது என்று தேவன் முன்னறிவித்திருந்தாலும், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், அவர்களுக்காகத் தொடர்ந்து அக்கறை கொள்கிறார். தேவனின் இதயத்தை ஏசாயா, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்" (வ.18). என்று வெளிப்படுத்தினார்.

நமது வேதனைக்கு வேறெங்கிலும் ஆறுதலைத் தேட நாம் முயலுகையில், தேவன் இப்படியே நம்மையும் அணுகுகிறார். நமக்கு உதவ விரும்புகிறார். நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களால் நம்மை நாமே காயப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. சில பொருட்களும், பழக்கங்களும் நமக்கு உடனடி தீர்வை தருமென்று நாம் ஈர்க்கப்படலாம். ஆனால் தம்மோடு நெருக்கமாக நடக்கையில் உண்டாகும், அதிகாரப்பூர்வமான நிரந்தர தீர்வை நமக்குத் தரவே, தேவன் விரும்புகிறார்.

காபிக்கொட்டை கிண்ணம்

நான் காபி பிரியனில்லை, ஆனால் காபிக்கொட்டையின் வாசனை எனக்கு ஆறுதலையும், ஆசையையும் உண்டாக்கியது. எனது வாலிபமகள் மெலிசா தன் படுக்கை அறையை அலங்கரிக்கையில், ஒரு கிண்ணத்தில் காபிக்கொட்டைகளை நிரப்பி அதின் இதமான வாசனை அறையெங்கும் வீசும்படி செய்வாள்.

அவள் பதினேழு வயதில் ஒரு சாலை விபத்தில் மரித்து, சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் அந்த காபிக்கொட்டை கிண்ணம் எங்களிடம் உள்ளது. எங்களுடன் மெலிசாவின் வாழ்க்கையை நினைவூட்டும் நறுமணமாக இன்றும் தொடர்கிறது.

நறுமணத்தை ஞாபகக்குறியாக வேதமும் பயன்படுத்துகிறது. உன்னதப்பாட்டில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்க நறுமணம் அடையாளமாய் உள்ளது (பார்க்கவும் 1:3; 4:11, 16). ஓசியாவின் புத்தகத்தில், இஸ்ரவேலை தேவன் மன்னிப்பது, "லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6) என்றுள்ளது. இயேசுவின் பாதத்தை மரியாள் நளதத்தால் பூசுகையில், மரியாளும் அவள் உடன்பிறந்தவர்களும் வாழ்ந்த அந்த வீடு முழுவதும் "தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" (யோவான் 12:3), இது இயேசுவை அடக்கம்பண்ணுதலுக்கு ஏதுவாய் இருந்தது (பார்க்கவும். வ.7)

பரிமளவாசனை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நமக்கிருக்கும் சாட்சியை நினைப்பூட்டுகிறது. இதைப் பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15) என்று நமக்கு விளக்குகிறார்.

காபிக்கொட்டையின் வாசனை எனக்கு மெலிசாவை நினைப்பூட்டுவதுபோல, இயேசுவையும் அவரது அன்பையும் நமது வாழ்க்கை வெளிப்படுத்தி, அனைவருக்கும் அவர் தேவை என்பதைப் பிறருக்கு நினைப்பூட்டும்படி வாழ்வோம்.

மனதிலிருந்து

“செயல்படும் நோவா பேழை” என்ற பெயர் விலங்குப் பிரியர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றியது. பெரும் சத்தம் மற்றும் துர்நாற்றம் ஒரு அறையிலிருந்து வந்தது என்ற புகாரின் அடிப்படையில், அமெரிக்க விலங்குகள் நலச்சங்கத்தினர் வந்து பார்வையிட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் “செயல்படும் நோவா பேழை” குழுவினர்  புறக்கணிக்கப்பட்ட விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தனர் (பின்னர் வெளியேற்றப்பட்டது). புறக்கணிக்கப்பட்ட சுமார் நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டு மீட்டனர்.

துர்நாற்றம் வீசும் நூற்றுக்கணக்கான விலங்குகள் நம்மிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நம் மனதில் பாவம் நிறைந்த எண்ணங்களும், செய்கைகளும் பேணி வளர்க்கப் படாமல், அவற்றைக் களைந்தெறிய வேண்டும் என இயேசு கூறினார்.

ஒரு மனிதனைச் சுத்தமுள்ளவனாகவும் தீட்டுள்ளவனாகவும் மாற்றுவதைக் குறித்து இயேசு தம் சீஷர்களிடம் போதிக்கையில், அழுக்கான கரங்களோ அல்லது "வாய்க்குள்ளே போகிறதோ" மனிதனை தீட்டுப்படுத்தாது, மாறாகத் தீய இதயமே அவனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:17–19) என்றார். நமது மனதிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், நமது வாழ்க்கையே. பின்னர் இயேசு, நம் மனதிலிருந்து வெளியேறும் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்கிறார் (வ.19). வெளிப்பிரகாரமாக நாம் எவ்வளவுதான் சமய சடங்குகளையும், மதம்சார்ந்த செயல்களையும் செய்தாலும் நம் மனதை அவை சுத்தப்படுத்தாது. நம் இதயம் மாற நமக்குத் தேவனே தேவை.

துர்நாற்றம் வீசும் வாழ்வின் அழுக்குகளை அவரே சுத்தம் செய்ய நம்மை அனுமதிப்போம். நம் மனதில் புதைந்துள்ளவற்றைக் கிறிஸ்து வெளிக்கொணர்ந்து, நமது வார்த்தைகளும் செயல்களும் அவரது விருப்பத்தின்படி அவர் மாற்றுகையில், அவரைப் பிரியப்படுத்தும் நறுமணமாக நாமும் மாறுவோம்.

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம். 

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9).