ஸ்னாப்டீல் நகர்
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் தங்களுக்கு உதவிய இனைய நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் “ஸ்னாப்டீல் டாட் காம் நகர்” என பெயர் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது. 2011க்கு முன், கிராம மக்கள் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் இனைய நிறுவனத்திற்கு நன்றி, அவர்கள் இப்போது கைப்பம்புகள் மூலம் எளிதில் கிடைக்கக்கூடிய சுத்தமான தண்ணீரை பெறுகின்றனர். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஊழியரால் இது சாத்தியமானது என்று தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால் கூறினார். இந்த ஊழியர் கிராம மக்களின் துயரத்தை மாநகராட்சியுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் அவரது எளிய செய்தி நூற்றுக்கணக்கான வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரு தீர்க்கதரிசியின் புரட்சிகரமான செயல்களை வேதாகமம் பதிவு செய்கிறது. இந்த தீர்க்கதரிசி கொடூரமான ராஜா ஆகாபிடம் தேவனின் செய்தியைத் தைரியமாகத் தெரிவித்தார். ராஜாவுக்கு அவர் சொன்ன செய்தி இனிமையானதல்ல, ஆனால் அது சத்தியம் மற்றும் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அதைப் பேசினார்(வ.42). அதே காலகட்டத்தில் வாழ்ந்து தீர்க்கதரிசனம் உரைத்த எலியா போன்ற பிற தீர்க்கதரிசிகளும் உள்ளனர். அவர்களின் பெயர்களும் செயல்களும் நன்கு அறியப்பட்டாலும், இந்த தீர்க்கதரிசி பெயரிடப்படவில்லை. அப்படியிருந்தும், தேவன் தனக்குக் கொடுத்த பணியை அவர் நிறைவேற்றினார்.
ஸ்னாப்டீல் நகரைச் சேர்ந்த ஊழியரைப் போலவே, இந்த பெயர் தெரியாத தீர்க்கதரிசிக்குச் சூழ்நிலை சவாலாக இருந்தபோதும் உண்மையைப் பேசினார். அங்கீகாரம் கோருவது சாதாரணமாக இருக்கும் ஒரு உலகில், அமைதியாகவும் அடக்கமாகவும் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முயல்வோம். தேவனின் பிள்ளைகளாகிய நாம் நமது உறவுகள், பேச்சு மற்றும் செயல்கள் மூலம் அவருடைய செய்தியைத் தெரிவிக்கும்போது, நாமும் மாற்றத்தின் கருவியாக இருக்க முடியும். பெயர் இல்லாவிட்டாலும் நாம் அறியப்படாதவர்கள் அல்ல. ஏனென்றால், தேவன் நம் செயல்களைப் பார்க்கிறார், எவரும் அறியாதபோதும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிவார் (எபிரெயர் 6:10).
கொடியின் முக்கியத்துவம்
பிங்கலி வெங்கையா இந்தியத் தேசியக் கொடியின் அசல் வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார். ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அதை ஒரு சுதந்திர நாடாகக் கண்டார், மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குறிக்கும் கொடியைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் இந்தியாவுக்கான தேசியக் கொடி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார், அதில் அவர் பரிசீலனைக்கு 24 வடிவமைப்புகளை வழங்கியிருந்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் மகாத்மா காந்தியைச் சந்தித்து சுதந்திரம் விடிவதற்கு முன்பே தேசியக் கொடியின் அவசியத்தை வலியுறுத்தினார். அவரது விடாமுயற்சியின் காரணமாக, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே காந்தி பரிந்துரைத்த சில திருத்தங்களுடன் கொடி இறுதி செய்யப்பட்டது.
இயேசு மற்றொரு நபரின் விடாமுயற்சியைப் பற்றிப் பேசுகிறார்,அவர் ஒரு விதவை. லூக்கா 18:1-8 இல் உள்ள உவமையில், ஒரு விதவையின் விடாமுயற்சி ஒரு அநீதியான நியாயாதிபதியைப் பணியச் செய்தது, உண்மையில் அவருக்கு நியாயமாக நடந்துகொள்ள மனமில்லை (வ.5). இந்த உவமையில் உள்ள விதவை, இயேசுவின் சீடர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவர்கள் விரைவில் அதிக உபாத்திரப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார் (வ.1). நியாயாதிபதியிடம் விதவை செய்ததைப் போல, நம்பிக்கையை விட்டுவிடாமல், இத்தகைய துன்பங்களை எதிர்கொண்டாலும் விடாமுயற்சியுடன் ஜெபிக்கும்படி கிறிஸ்து அவர்களை ஊக்குவித்தார் (வ.6). ஊக்கமான மற்றும் சோர்ந்துபோகாத ஜெபமும் அயராத கிரியை செயல்படும் இடத்தில், தேவனின் உண்மைத்தன்மை நீதியை நிலைப்படுத்தும் (வ.8). பாடுகளும் அநீதியும் நம் உலகில் பெருகுகிறது. வன்முறை, வெறுப்பு மற்றும் சீர்கேடுகளுக்கு மத்தியில், நாம் தொடர்ந்து ஜெபத்தில் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஏனென்றால், நாம் விடாப்பிடியாக இருக்கும்போது, நம்முடைய பரலோக நியாயாதிபதி நமக்கு நீதி வழங்குவதாக வாக்களிக்கிறார். இயேசு நமக்குக் கற்பித்தபடி, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிப்போம். அவர் திரும்பி வரும்போது நாம் ஜெபத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக (லூக்கா 18:8).
ஒரு வைர தாட்கட்டை
"ஜேக்கப் டயமண்ட்" உலகின் ஐந்தாவது பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிறமற்ற வைரம், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் தனது மறைந்த தந்தையின் காலணியில் அதைக் கண்டுபிடிக்கும் வரை பல ஆண்டுகளாக இந்த விலைமதிப்பற்ற கல் தொலைந்து போனதாகவும் மறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வினோதமாக, நிஜாம் இந்த அரிய பொக்கிஷத்தை இந்திய ரிசர்வ் வங்கியால் 108 கோடி ரூபாய்க்குப் பாதுகாக்கும் வரை, பல ஆண்டுகளாக தாட்கட்டையாக பயன்படுத்தினார். அவரது தந்தை தனது காலணியில் விட்டுச்சென்ற வைரத்தின் மூலம் நிஜாமின் வாழ்க்கையைச் செழிப்பாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபையாரின் கவனத்தை இயேசுவிடமாய் திருப்புகிறார்; அவர் நம்முடைய பிதாவாகிய தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற பொக்கிஷம் (வ.4). கொரிந்தியர்கள் இயேசுவோடு அவருடைய ஆவியின் மூலம் கொண்டிருந்த ஐக்கியத்தின் காரணமாக அவர்கள் "சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டனர்" என்று பவுல் எழுதுகிறார் (வ.5-9). கிறிஸ்து என்ற இந்த விலைமதிப்பற்ற ஈவை மதிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். அவர்கள் அவரை உடையவர்களாய் இருந்தால், அவர்களுக்கு ஒன்றும் குறைவிருக்காது என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். இது தவிர, தேவன் அவர்களுக்கு வழங்கிய பல "ஆவிக்குரிய வரங்களை" கருத்தில் கொள்ளுமாறு பவுல் சபையாரை வலியுறுத்துகிறார் (வ.5-7). கிறிஸ்துவாகிய இந்தப் பொக்கிஷத்தைச் சபையானது பாதுகாக்கும் போது, அவர் திரும்பும் நாள் வரை குற்றமற்றவர்களாக இருக்க அது அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
வாழ்க்கையில் நாம் அதிருப்தி அடையும்போது, குறிப்பாக நம்மிடம் இல்லாததைப் பற்றி முணுமுணுக்கும்போது, நாம் இயேசுவைக் கொண்டிருப்பதால் நாம் உள்ளார்ந்த ஐசுவரியவான்கள் என்பதை நினைவில் கொள்வோம். இழப்பு, நிதி நெருக்கடி, குடும்பக் கஷ்டம் அல்லது வேறு ஏதேனும் கொந்தளிப்பு ஏற்படும் நேரங்களில், நாமும் நம் தகப்பனால் எல்லா வகையிலும் உண்மையிலேயே "சம்பூரணம்" அடைந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தின் மூலம் கிறிஸ்தென்னும் பொக்கிஷத்தை அவர் நம்மில் விதைத்துள்ளார் (2 கொரிந்தியர் 1:22).
ஊடுருவும் தைலமரம்
நீலகிரி மலைகளில் ஏறும் போது யூகலிப்டஸ் தைல மரங்களின் இனிமையான வாசனை உங்கள் உணர்வுகளை நிரப்புகிறது. ஆனால் தைல மரம் இந்த மலைகளுக்குச் சொந்தமானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலேய வணிகர்களுக்கு கோடைக்காலத்தைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்காகக் காலனித்துவ காலத்தில் பயிரிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும். அப்பாவித்தனமாய் தோன்றும் ஒரு செயல் இப்போது சூழலியலில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் விலங்குகள் அதன் விஷ இலைகளைச் சாப்பிட முடியாது. உணவு தேடி வயல்கள் மற்றும் பயிர்களை இவை தாக்குகின்றன, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இவற்றைத் திருப்பி தாக்குகின்றனர். பூர்வீக வகை தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முந்தைய தவறுகள் இன்னும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கலாத்திய சபைக்கு நிருபம் எழுதியவர், மாம்ச இச்சையைத் திருப்திப்படுத்துவதற்கு எதிராக அவர்களை எச்சரிக்கிறார் (வ.16). விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (வ.19-21) போன்றவை மாம்ச இச்சைகள் என்று அவர் வரையறுக்கிறார். ஒரு ஆக்கிரமிப்பு இனத்தைப் போலவே, இந்த வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாத பாவங்கள் வேரூன்றி, இறுதியில் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும், நாம் "ஆவிக்கேற்றபடி" நடந்துகொண்டால் மேற்கொள்ள முடியும் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வ.17). அப்போது நாம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளைக் கொடுப்போம் (வ.22-23).
பாவத்தின் ஆக்கிரமிப்பு விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு நமக்காக அனுப்பிய ஆவியானவர், சரியான பாதையில் நடக்க நமக்கு உதவ வல்லவர் (2 கொரிந்தியர் 5:5). மாம்சமும் ஆவியும் எப்போதும் முரண்படுவதால் முதலில் கடினமாக இருக்கலாம் (வ.17), ஆனால் இயேசுவில் நாம் பாவத்தின் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடியும்.
டோனாவூரில் அன்பு
"அம்மா" என்பது தாய்க்கான தமிழ் வார்த்தையாகும், இது எமி கார்மைக்கேலின் கல்லறையின் இடத்தில் உள்ள பறவைகளுக்கான குளத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, தேவதாசிகளாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு புகலிடமாக மாறியது. அவரது ஆரம்ப ஆண்டுகளில் பல இரவுகளில், எங்காவது ஒரு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக, சேலை உடுத்திக்கொண்டு சைக்கிளில் செல்வார் என்று கூறப்படுகிறது. 1931 இல் கீழே மோசமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் படுத்த படுக்கையான பிறகும், மற்றவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளை மீட்பதைத் தொடர்ந்தார். அவர் பல கடிதங்கள் மற்றும் புத்தகங்களை எழுதினார், அவை சேவையைத் தொடரவும், பள்ளிக்கு நிதி பெறவும் உதவின. குழந்தைகளை எமியிடம் ஈர்த்தது எது என்று கேட்டபோது, அவர்கள் “அன்புதான். அம்மா எங்களை நேசித்தார்" என்றார்கள்.
சில சமயங்களில் அன்புதான் சகல நற்பண்புகளுக்கும் தாய் என்பதை நினைவூட்டிக்கொள்ள வேண்டும். உண்மையான அன்பை கிறிஸ்துவில் அனுபவிக்க முடியும், ஏனென்றால் அவர் அன்பின் மனு உருவம் (வ.8). கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, நமக்கு உண்மையான அன்பின் செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது. இயேசுவின் அன்பு நிபந்தனைக்குட்பட்டது அல்ல. அவர் தகுதியற்றவர்களையும் நேசித்தார் (வ.11). தேவன் நம்மை நேசிக்கும் விதத்தில் நாம் அன்பைப் பார்க்கும்போது, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது பற்றிய நமது கண்ணோட்டத்தை அது மாற்றுகிறது. இயேசுவைப் போல நாம் நேசிக்காதவரை, தேவனை உண்மையாக அறிய முடியாது என்பதை உணர உதவுகிறது (வ.7-8). பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவசாயலில் படைக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27) மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு தேவை. தேவபிள்ளைகளாகிய நாம், உண்மையான, கறைபடியாத அன்பின் அர்த்தத்தை, அன்பிற்காகப் பசியால் வாடுபவர்களுக்குக் காட்டத் தகுதியான இடத்தில் இருக்கிறோம். டோனாவூா் அடிமைப் பெண்களின் அன்பின் திருவுருவமாக மாறிய எமியைப் போல நாமும் நம் ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும், கிரியையிலும் இயேசுவின் உண்மையான அன்பை உருப்படுத்துவோம்.
சரியாய் எதிர்வினையாற்றுங்கள்
கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.
கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.
இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்
எங்கள் உயிரைக் காப்பாற்றும்
குறிப்பாகக் கொண்டாட்டங்களின் போது இலைகள் மற்றும் செடிகள் தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்தாளிகளை வரவேற்பதற்காகத் திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் ஒளிரும் விளக்குகளுடன் பின்னிப்பிணைந்த வாழை மரங்கள் கட்டப்படுகின்றன. ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட மா இலைகள் கதவுகளை அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாழை இலைகள் வண்ணமயமான, பல வகை உணவைப் பரிமாற ஒரு தட்டாகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றும் தேங்காய் பனை அலங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
யூதேயாவிலும் இலைகள் அவர்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிகிறது. கழுதையில் ஏறி, இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது, பஸ்கா பண்டிகை நடந்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து கிடைத்த விடுதலையைக் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து யூதர்கள் ஒன்றுகூடிய நேரம் அது. கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகப் பனை ஓலைகளைப் பயன்படுத்துவது ஒரு பாரம்பரியமாக இருந்தது. ரோமாபுரியின் இரும்புப் பிடியின் கீழ், யூதர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு மோசே செய்ததைப் போல, ஒரு மேசியா எழும்பி தங்களைக் காப்பாற்றுவார் என்று ஏங்கினார்கள். எனவே, நாசரேத்திலிருந்து அற்புதம் செய்பவரான இயேசு உள்ளே வந்தபோது, அது நம்பிக்கை அதிகரித்தது (வ.37). அவர்கள் பனை மரக்கிளைகளுடன் வெளியே சென்று, கைகளை அசைத்து, " ஓசன்னா!" அதாவது "எங்களை இரட்சியும்" (மத்தேயு 21:8-9) என்று ஆர்ப்பரித்தனர். ஆத்தும இரட்சகராகிய தம்முடைய குமாரன் மூலமாக ‘தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வேண்டும்’ என்ற அவர்களுடைய விருப்பத்திற்குத் தேவன் உண்மையில் செவிகொடுத்தார்.
எதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அடிக்கடி அறியாமல் இருக்கிறோம். நமது பொருளாதார, உடல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால், நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று நினைக்கலாம். ஆனால் நமக்குத் தேவையான உண்மையான இரட்சிப்பு நம் ஆத்தும இரட்சிப்பு. இயேசு தம்முடைய இரட்சிக்கும் வல்லமையையும் அன்பையும் நமக்குக் காட்ட மனித உருவில் வந்தார் (லூக்கா 19:10). அவர் சிலுவையில் தம்முடைய தியாகத்தின் மூலம் நம் ஆத்துமாக்களை இரட்சித்தார். அதனால் அவர் நம் மூலமாக, மீட்பருக்காக வேண்டிநிற்கும் பிறரின் ஆத்துமாக்களையும் இரட்சிப்பார்.
மிதக்கும் தபால் நிலையம்
மிதக்கும் தபால் நிலையத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்குச் செல்லலாம். டால் ஏரியில், பனி படர்ந்த இமயமலையின் பின்னணியில், ஒரு தனித்துவமான "மிதக்கும்" தபால் நிலையம் உள்ளது, இது உண்மையிலேயே தனிப்பட்ட ரகமாகும். அது ஏரியில் தனியாக மிதந்தாலும், அது உண்மையில் தனியாக இல்லை. இது இந்தியத் தபால் சேவையின் பரந்த அமைப்பின் ஒரு பகுதியாகும், இது நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய அஞ்சல் கூட்டமைப்பாகும்.
கொரிந்திய சபைக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் அதன் உறுப்பினர்கள் தங்களைத் தனிநபர்களாக அல்ல, மாறாக விசுவாசிகளின் சமூகத்தின் அங்கத்தினராக எண்ணிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். அவர் அவர்களின் ஆவிக்குரிய வரங்களில் உள்ள பல்வேறு வகைகளை மதிக்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறார், மேலும் இந்த வித்தியாசங்களிலுள்ள அழகை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டுகிறார் (வ.4-5). பரிசுத்த ஆவியானவரின் ஒன்றிணைக்கும் வல்லமையின் காரணமாக (வ.7), இந்த வேறுபாடுகள் ஆரோக்கியமானவை என்பதைச் சபை உணர பவுல் உதவுகிறார், ஆவியானவர் ஒவ்வொருவரையும் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். இறுதியாக, அவர்கள் தனியாக இல்லை மாறாகப் பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதி என்பதை அவர் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தங்களுடைய வரத்தைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
பிறரை விடத் தன்னை முன்னிறுத்துவதைச் சாதாரணமாகக் கருதும் உலகில், வாழ்க்கையைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாம் தேவனின் சபை எனும் ஒரு பரந்த சரீரத்தின் அங்கமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, ஒன்றாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். மிதக்கும் தபால் நிலையத்தைப் போலவே, நமது வரங்களும் தாலந்துகளும் திறமைகளும் தனித்துவமானது. மேலும் அவை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் கீழ் பயன்படுத்தப்படும்போது, அவை தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப வல்ல கருவிகளாக இருக்கும்.
தி இண்டியாமேன்
1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.
எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.