மிதக்கும் தபால் நிலையத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்குச் செல்லலாம். டால் ஏரியில், பனி படர்ந்த இமயமலையின் பின்னணியில், ஒரு தனித்துவமான “மிதக்கும்” தபால் நிலையம் உள்ளது, இது உண்மையிலேயே தனிப்பட்ட ரகமாகும். அது ஏரியில் தனியாக மிதந்தாலும், அது உண்மையில் தனியாக இல்லை. இது இந்தியத் தபால் சேவையின் பரந்த அமைப்பின் ஒரு பகுதியாகும், இது நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அலுவலகங்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய அஞ்சல் கூட்டமைப்பாகும்.
கொரிந்திய சபைக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் அதன் உறுப்பினர்கள் தங்களைத் தனிநபர்களாக அல்ல, மாறாக விசுவாசிகளின் சமூகத்தின் அங்கத்தினராக எண்ணிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். அவர் அவர்களின் ஆவிக்குரிய வரங்களில் உள்ள பல்வேறு வகைகளை மதிக்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறார், மேலும் இந்த வித்தியாசங்களிலுள்ள அழகை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களை வேண்டுகிறார் (வ.4-5). பரிசுத்த ஆவியானவரின் ஒன்றிணைக்கும் வல்லமையின் காரணமாக (வ.7), இந்த வேறுபாடுகள் ஆரோக்கியமானவை என்பதைச் சபை உணர பவுல் உதவுகிறார், ஆவியானவர் ஒவ்வொருவரையும் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். இறுதியாக, அவர்கள் தனியாக இல்லை மாறாகப் பரந்த கட்டமைப்பின் ஒரு பகுதி என்பதை அவர் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தங்களுடைய வரத்தைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
பிறரை விடத் தன்னை முன்னிறுத்துவதைச் சாதாரணமாகக் கருதும் உலகில், வாழ்க்கையைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு நாம் அழைக்கப்படுகிறோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாம் தேவனின் சபை எனும் ஒரு பரந்த சரீரத்தின் அங்கமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து, ஒன்றாகச் செயல்பட அழைக்கப்படுகிறோம். மிதக்கும் தபால் நிலையத்தைப் போலவே, நமது வரங்களும் தாலந்துகளும் திறமைகளும் தனித்துவமானது. மேலும் அவை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் கீழ் பயன்படுத்தப்படும்போது, அவை தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப வல்ல கருவிகளாக இருக்கும்.
தேவன் உங்களிடம் என்ன ஈவுகளை ஒப்படைத்துள்ளார்?
உங்கள் திறமைகளையும் வரங்களையும் பிறர்க்கு நன்மை செய்ய நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
தேவனே, என் ஈவுகளுக்காக உமக்கு நன்றி, உமது ராஜ்யம் என்னிலும் என் மூலமாகவும் விரிவடையும்படி பிறருக்கு நன்மை செய்ய
அவற்றைப் பயன்படுத்த எனக்கு உதவும்
