அனுப்பியதை அனுப்பாமலிருக்க
எப்பொழுதாவது ஒரு இ-மெயிலை அனுப்பிவிட்டு பின்னர் எதற்காக இதை அனுப்பினேன் என வருந்தியதுண்டா? தவறான சொற்களோ, கடுமையான மொழியோ அதில் இருந்திருக்கும் அல்லது தவறான நபருக்கு அது சென்று விட்டிருக்கும். ஒரு கீயை (Key) அழுத்தி அதை நிறுத்த முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். அது இப்போது சாத்தியமாகிவிட்டது. பல இ-மெயில் நிறுவனங்கள் இந்த வசதியை இப்பொழுது தருகின்றன. நீங்கள் ஒரு இ-மெயிலை அனுப்பியவுடன் சிறிது நேரம் வரை அதை திரும்பப் பெறும் வசதியுள்ளது. அது உங்கள் கம்ப்யூட்டரை விட்டு எங்கும் சென்றிருக்காது. ஆனால் அந்த நேரம் கடந்தபின் இ-மெயிலும் சொல்லப்பட்ட வார்த்தை போல் ஆகிவிடும். அதைத் திரும்பப் பெற முடியாது. இந்த ‘திரும்பப் பெறும்’ வசதி நமக்கு ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நினைவூட்டுகிறது. நாம் எப்பொழுதும் கவனத்துடன் பேசவேண்டும் என்பதே.
அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்தில் இயேசுவின் சீடர்களை நோக்கி இப்படி கூறுகிறார், “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேது. 3:9-11).
சங்கீதக்காரன் தாவீதும் இதைப்பற்றி எழுதியுள்ளார், “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3). இது நாம் மறுமொழி கூறி பிறரை காயப்படுத்தாதவாறு நம்மை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ள நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஜெபமாகும்.
தேவனே, என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ள உதவிசெய்யும். என்னுடைய வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க பெலன் தாரும்.
என்றும் கிடைக்காத சிறந்த சலுகை!
போதும் என்பது எவ்வளவு? வளர்ந்த நாடுகள் பல பொருட்களை வாங்குவதற்கென்றே ஒதுக்கப்பட்ட அந்த நாளில் இந்தக் கேள்வியை கேட்டால் நலமாயிருக்கும். அமெரிக்க நன்றியறிதல் விடுமுறை நாளுக்கு அடுத்த நாளாகிய கருப்பு வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகிறேன். அன்று அநேக கடைகள் சீக்கிரமே திறக்கப்பட்டு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள்; இது அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. குறைந்த அளவு பணமுடையவர்கள், தங்களால் இயன்றதை வாங்க முற்படுவார்கள். ஆனால் வருந்ததக்கவிதமாக, ஒரு சிலருக்கோ பேராசையே தூண்டுகோளாக இருப்பதால் பேரம் பேசுவதினால் ஏற்படும் சண்டையில் வன்முறை வெடிக்கிறது.
பிரசங்கி (பிர. 1:1) என்று அழைக்கப்படும் பழைய எற்பாட்டு ஆசிரியருடைய ஞானத்தின் மூலம், வெறிபிடித்தது போல கடைகளில் பொருள் வாங்குவதற்கு ஒரு மாற்று மருந்தை அறிந்துகொள்ளலாம். இது நம் இருதயத்திற்கும் பொருந்தும். பணத்தை நேசிப்பவர்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. ஆகவே அவர்களுடைய உடைமைகளால் அவர்கள் ஆளப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும், அவர்கள் இறக்கும் பொழுது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. “வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்” (5:15). பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது. ஆகவே “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை,” (1 தீமோ. 6:6-10) முயன்று நாட வேண்டுமென்று, பிரசங்கியின் கூற்றை திமோத்தேயுவுக்கு எழுதும் கடிதத்தில் பவுல் எதிரொலிக்கிறார்.
நம்முடைய நிறைவிலும் சரி குறைவிலும் சரி, நம் இருதயங்களில் தேவன் இல்லாத காலி இடத்தை முறையற்ற வழிகளிலே நாம் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால் நம்முடைய சமாதானம் மற்றும் சுகத்திற்காக தேவனையே நோக்கினால், அவர் நம்மை அவருடைய நன்மையினாலும் அன்பினாலும் நிரப்புவார்.
நன்றி கூறும் விளையாட்டு
ஒவ்வொரு வருடமும், இலையுதிர் காலத்தில், எங்கள் கார்னர்ஸ்டோன் (Cornerstone) பல்கலைக்கழக வளாகத்திலே சுவைமிக்க நன்றிகூறுதல் விருந்து வைப்போம். எங்கள் மாணவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். சென்ற வருடம் சில மாணவர்கள், தாங்கள் அமர்ந்து உணவருந்திய இடத்திலேயே ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அதாவது, அதிகப்படியாக மூன்று நொடிகளுக்குள், தாங்கள் நன்றி தெரிவிக்க விரும்பிய காரியத்தைப் பெயரிட வேண்டும். மேலும் மற்றொருவர் சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடாது. அதிக நேரம் எடுத்தால், விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
தேர்வுகள், காலக்கெடு, விதிமுறைகள் மற்றும் அநேக கல்லூரி சார்ந்த காரியங்களை மாணவர்கள் குறைகூற கூடும். ஆனால் அந்த மாணவர்கள் நன்றி கூறுவதை தெரிந்து கொண்டார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால், இந்த விளையாட்டின் முடிவிலே அந்த மாணவர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் குறைகூறுவதை தேர்வு செய்திருந்தால் அந்த மனநிறைவு அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
நாம் குறைகூறும்படியான காரியங்கள் எப்பொழுதும் இருந்தாலும், நாம் கவனமாய் பார்த்தால், நாம் நன்றி தெரிவிக்கும்படியான ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியைக் குறித்து பவுல் விவரிக்கும் பொழுது, “நன்றியறிதல்” என்கின்ற பண்பே ஒன்றிற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்” என்று கொலோசெயர் 3:15ல் கூறுகிறார். “இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி,” (வச. 16) என்று நன்றியுணர்வை பக்தி பாடலாய் வெளிப்படுத்துகிறார். மேலும், “நீங்கள் எதைச் செய்தாலும்… பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்,” (வச. 17) என்று கூறுகிறார். நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கும்படியான அறிவுரையை பவுல், சிறைச் சாலையிலிருந்து எழுதியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது.
இன்று நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் தேர்வு செய்வோம்.
புகழும் தாழ்மையும்
நம்மில் அநேகர் புகழ்ச்சியின் மேல் தீரா ஆசை கொண்டுள்ளோம். அதாவது, ஒன்று நம்முடைய புகழ்ச்சியை குறித்த ஆசை அல்லது புகழ்ச்சிமிக்க நபர்களின் அன்றாட வாழ்வின் காரியங்களை அப்படியே பின்பற்ற தீரா ஆசை. சர்வதேச புத்தகம் அல்லது சினிமா நட்சத்திர சுற்றுப்பயணம், இரவு நேர நட்சத்திர நிகழ்ச்சிகள், டிவிட்டரில் லட்சக்கணக்கில் தங்களை பின்தொடர்பவர்கள் என பலவித ஆசைகள்.
அண்மையில் அமெரிக்காவில் இணையதளத்தை அலசி ஆராய்ந்து பார்த்து, புகழ்மிக்க நபர்களை வரிசைப்படுத்தும் ஒரு கணக்கு வழிமுறை (algorithm) ஆய்வாளர்களால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த தரவரிசையில், வரலாற்றில் மிகவும் புகழ்வாய்ந்த மனிதராக இயேசுவே முன்னிலை வகித்தார்.
ஆனால் புகழ்ச்சியை இயேசு ஒருநாளும் விரும்பியதே இல்லை. அவர் இந்த பூமியில் இருந்த பொழுது அதை நாடித் தேடவும் இல்லை (மத். 9:30; யோவா. 6:15). ஆனால், அவரைப் பற்றிய செய்தி கலிலேயா எங்கும் விரைந்து பரவிய பொழுது புகழ்ச்சி அவரைத் தேடி வந்தது (மாற். 1:28; லூக். 4:37).
இயேசு சென்ற இடமெல்லாம், கூட்டம் கூடியது. அவர் செய்த அற்புதங்கள் மக்களை அவரிடம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அவரை பலவந்தமாய் ராஜாவாக்க நினைத்தபொழுது, அவர் அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டார் (யோவா. 6:15). தன் பிதாவின் நோக்கத்திற்குள்ளாக தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவருடைய சித்தத்திற்கும், நேரத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (4:34; 8:29; 12:23). “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8).
புகழ் எப்பொழுதும் இயேசுவின் இலக்கு அல்ல. அவருடைய நோக்கம் மிக எளிமையானது. தேவனுடைய குமாரனாக, அவருக்கு கீழ்படிந்து, தாழ்மையோடு தாமாகவே தன்னைத்தானே நம்முடைய பாவங்களுக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.
வீட்டை எண்ணி ஏங்கி
பண்டையகால அலமாரி உயர கடிகார பெட்டிக்குள் (Grand Father’s Clock) என் தலையை நீட்டிக்கொண்டிருந்த பொழுது, அந்த அறைக்குள்ளே என் மனைவி நுழைந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். தயக்கத்துடன், “என் பெற்றோர் வீட்டிலுள்ள வாசனை, இந்த கடிகாரத்திலும் உள்ளது. அதனால், ஒரு கணம் என் வீட்டிற்கே நான் சென்றுவிட்டேன்,” என்று அதன் கதவை பூட்டியவாறு கூறினேன்.
வாசனைகளை நுகரும்பொழுது, அவை பல ஞாபகங்களைத் தூண்டி விடலாம். அந்த கடிகாரத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தேசத்தின் மறுபக்கத்திலுள்ள என் பெற்றோர் வீட்டிலிருந்து கொண்டு வந்தோம். ஆனால், இப்பொழுதும் அந்த கடிகாரத்தின் மரக்கட்டையின் வாசம் என் சிறுவயதை எனக்கு ஞாபகமூட்டுகிறது.
எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், வேறு விதமாக தங்கள் வீட்டை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிக் கூறுகிறார். பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பதில், விசுவாசத்தோடு தங்கள் பரலோக வீட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற நெடுநாள் ஆனாலும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அவரோடு என்றென்றும் இருக்கும்படியாக நம்மை அழைத்துக்கொள்வார் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் (எபி. 11:13-16).
“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பிலிப்பியர் 3:20 நமக்கு ஞாபகப்படுத்துவதால், “அங்கேயிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” நாம் இயேசுவைக் கண்டு, அவரின்மூலம் தேவன் நமக்கு வாக்குப்பண்ணின எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற விசுவாசம், நம் நோக்கத்தில் உறுதியாய் இருக்க உதவுகிறது. நம்முடைய கடந்தகாலமோ நிகழ்காலமோ நமக்கு முன்னாக இருப்பதோடு ஒப்பிடவே முடியாது.