வகை  |  odb

நாம் எதைக் கேட்க விரும்புகிறோம்

நம்முடைய அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போகும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மனித இயல்பு. நம் கருத்துக்களை ஆதரிக்கும் தகவல்களை நாம் இரண்டு மடங்கு கூடுதலாக தேட முற்படுகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி அறிவிக்கிறது. நம்முடைய கொள்கைகளின்மேல் ஓர் அசைக்கமுடியாத பற்று கொண்டிருந்தால், எதிர்மறை சிந்தனைகள் நமக்கு விடுக்கும் சவால்களை நாம் அறவே தவிர்ப்போம்.

ஆகாப் ராஜா இஸ்ரவேலை ஆண்டபோதும் இப்படியே நடந்தது. அவனும் யூதாவின் ராஜா யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் புரியலாமா கூடாதா? என்று ஆலோசித்தபோது, ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை – தன்னால் நியமிக்கப்பட்டு தான் விரும்புகின்ற காரியத்தை உரைக்கும் மனிதர்களை-வரவழைத்து யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு ஒவ்வொருவரும், “தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள் (2 நாளா. 18:5). யோசபாத்து, “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அதற்கு ஆகாப் தயக்கத்துடன், தேவனுடைய தீர்க்கத்தரிசி மிகாயா என்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால், அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான் (வச. 7). அப்படியே, அவர்கள் யுத்தத்தில் தோற்றுப்போவார்கள் என்றும், மக்கள் எல்லாம் “மலைகளில் சிதறிப்போவார்கள்” என்றும் அவன் உரைத்தான் (வச. 16).

இந்தக் கதையை வாசிக்கும்போது நானும் எப்படி எனக்கு ஒத்துவராத நல் ஆலோசனைகளை தவிர்க்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். ஆகாபின் விஷயத்தில், தனக்கு “இசைவாக பேசுகின்ற 400 தீர்க்கத்தரிசிகளுக்கு செவிகொடுத்தது அழிவில் முடிந்தது (வச. 34). நாமும் சத்தியத்தின் சத்தத்திற்கு, வேதத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தைகளுக்கு, அவைகள் நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மாறாக இருந்திட்டாலும், கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம்.

முற்றத்தில் ஓர் தணிவு

மிக வெப்பமான ஒரு நாளில் 8 வயது சிறுவன் கார்மன் மக்டேனியல் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரருக்கு தாகம் தீர்க்க எதையாகிலும் செய்யவேண்டும் என்று நினைத்தான். குளிர்சாதன பெட்டி ஒன்றில் வைத்த தண்ணீர் பாட்டில்களையும், குளிர் பானத்தையும் வீட்டு வாசற்படியில் வைத்தான். அதனை கண்ட அஞ்சல்காரரின் முகமலர்ச்சியை பாதுகாப்பு கேமரா படம்பிடித்தது. “அடேங்கப்பா! தண்ணீரும், குளிர்பானமும். நன்றி ஆண்டவரே; நன்றி!” என்று அவன் குதூகலித்தான்.

“தான் வீட்டில் இல்லாதுபோனாலும் அஞ்சல்காரருக்கு குளிர்பானத்தை கொடுப்பது தன் கடமை என்று டேனியேல் நினைக்கிறான்” என்றாள் அச்சிறுவனின் தாய்.

இக்கதை நம் உள்ளத்தை உருக்குவதோடு, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், “நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கும் ஒருவர் உண்டு” என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தன் எதிர்காலத்தை குறித்த நிச்சயமில்லாதவராக பவுல் சிறையில் வாடினாலும், பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள் அனுப்பின பொருளுதவிக்காக சந்தோஷமடைந்தார். பிலிப்பி ஒரு செழிப்பான சபை அல்ல. ஆனாலும் அவர்கள் உதாரகுணம் கொண்டவராய் தங்களுடைய குறைவிலே பவுலுக்கு கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-14). பிலிப்பு சபையினர் பவுலினுடைய தேவையை சந்தித்ததுபோலவே, தேவனும் அவர்களுடைய தேவைகளை “கிறிஸ்து இயேசுவுக்குள், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே… சந்திப்பார், (பிலி. 4:19).”

பெரும்பாலும் பரலோக உதவியை தேவன் பிறர் மூலமாகவே அனுப்புகிறார். அதாவது, நம்முடைய தேவைகளை தேவன் மற்றவர்களைக் கொண்டு சந்திக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனை சார்ந்திருக்கும்போது, பவுலைப் போல், நாமும் உண்மையான மனநிறைவின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோம் (வச. 11-13).

இனிப்பும் கசப்பும்

சிலருக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும், சிலருக்கு இனிப்பு என்றால் பிரியம். மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் சாக்லெட்டுடன் காரமான மிளகை சேர்த்து அதனை ஒரு பானமாக அருந்துவர். “கசப்பு தண்ணீர்” என்று அழைத்த இவர்களுக்கு இது ஒரு விருப்ப பானம். அநேக ஆண்டுகளுக்கு பின் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டினர் இனிப்பு சாக்லெட் பிரியர்கள் என்பதால், பானத்தில் உள்ள இயற்கையான கசப்பை குறைக்க சக்கரை மற்றும் தேனை கூடுதலாக சேர்த்துக்கொள்வார்கள்.

ஆம். சாக்லெட்டை போன்றே நம்முடைய நாட்களும் கசப்பு அல்லது இனிப்பு மிக்கவைகளாய் இருக்கலாம். சகோதரர் லாரன்ஸ் என்கின்ற 17-ஆம் நூற்றாண்டு பிரஞ்சு துறவி ஒருவர் இப்படியாக எழுதினார், “ஆண்டவர் நம்மை எவ்வளவாய் அன்புகூருகிறார் என்பதை நாம் அறிந்திருந்தால் அவருடைய கைகளிலிருந்து வரும் இனிப்பையும் கசப்பையும் ஒரேவிதத்தில் எடுக்கப் பழகிக்கொள்வோம்.” இனிப்பையும் கசப்பையும் ஒரே விதத்தில் எடுப்பதா? இது கடினம்! சகோதரர் லாரன்ஸ் என்ன சொல்கிறார்? அதன் திறவுகோல் தேவனுடைய குணநலனுக்குள் மறைந்துள்ளது. சங்கீதக்காரன் ஆண்டவரைப் பற்றிக் கூறுகையில், “தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங். 119:68) என்று குறிப்பிடுகிறார்.

மாயன் மக்களும் கசப்பான சாக்லெட்டின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ கூறுகளை அறிந்திருந்தனர். கசப்பான நாட்களுக்கு மதிப்பில்லாமல் போவதில்லை. நமது பலவீனங்களை நமக்கு வெளிப்படுத்தி, தேவனையே சார்ந்து வாழ நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரன் எழுதினார், “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (வச. 71).” இன்றைக்கும், தேவன் நன்மை செய்கிறவராகவே உள்ளார் எனும் நிச்சயத்துடன், வாழ்க்கையை அதன் பல்வேறு சுவைகளுடன், அனுபவிக்க முனைந்திடுவோம். நாமும்கூட “கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” என்று சொல்லிடுவோம் (வச. 65).

அறிமுகமில்லாத உதவி

என் கல்லூரி படிப்பை முடித்தபின்பு, வீட்டிற்கு தேவைப்படும் மளிகைப்பொருட்களை வாங்குவதில் நான் சிக்கனமாய் இருக்கவேண்டியிருந்தது. வாரம் ஒன்றிற்கு 25 டாலர்களுக்குமேல் செலவிடக்கூடாது என்று தீர்மானித்தேன். ஒருமுறை கடை ஒன்றில் தேவையான பொருட்களை வாங்கி அதற்கான பணம்செலுத்தும் வரிசை வந்ததும், என்னிடமிருந்த தொகையிலும் அதிகமான பொருட்களை எடுத்துக்கொண்டேனோ என்று சந்தேகப்பட்டு, காசாளாரிடம் “எடுத்த பொருட்களின் விலை இருபது டாலரை தொட்டதும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்றேன். ஒரு மிளகுப் பையை தவிர நான் தெரிவுசெய்த எல்லா பொருட்களையும் வாங்கமுடிந்தது.

பொருட்களை எடுத்து புறப்படுகிற வேளையில் ஒரு மனிதன் என் வாகனத்தை நிறுத்தி, “மேடம், இந்தாங்க உங்க மிளகுப் பை” என்று சொல்லி என் கையில் ஒரு பையை நீட்டினான். அதை வாங்கி அவனுக்கு என் நன்றியை தெரிவிக்கும்முன், அவன் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டான்.

ஒரு சின்ன உதவியாக இருந்தாலும், கரிசனை மிகுந்த இச்செயலின் நன்மையை நினைத்து பார்க்கையில் என் உள்ளம் பூரிக்கின்றது, மத்தேயு 6-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்துகிறது. தேவையில் உள்ளோருக்கு உதவி செய்து அதனை விளம்பரப்படுத்துவதை இயேசு கடுமையாக விமர்சித்தார் (வச. 1). தம் சீடர்களுக்கோ இயேசு ஒரு வித்தியாசமான வழியை கற்பித்தார். தருமகாரியத்தில் தங்களையும், தங்களுடைய உதாரத்துவத்தையும் மேன்மைப்படுத்தாமல், நாம் கொடுப்பது இரகசியமாய் இருக்கவேண்டும். அதாவது, வலதுகை கொடுப்பதை இடதுகை அறியக்கூடாத அளவுக்கு நம்முடைய தர்மகாரியம் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார் (வச. 3)!

அறிமுகமில்லாத ஒருவரின் கனிவுச்செயல், கொடுத்தல் என்பது எப்போதும் நம்மைப் பற்றியதாய் இருக்கலாகாது என்பதனை எனக்கு அது நினைவுபடுத்திற்று. நம்முடைய தேவன் நமக்கு உதாரத்துவமாய் கொடுத்ததினாலேயே நாம் பிறருக்கு கொடுக்கிறோம் ( 2 கொரி. 9:6-11). ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக உதாரத்துவமாக நாம் கொடுக்கும்போது, அவரை நமக்குள் பிரதிபலிக்கிறோம் – தேவனும் தமக்கே உரியதான ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார் (வச. 11).

அசட்டைபண்ணப்பட்டவர்

சூசன்னா சிபர் 18-ஆம் நூற்றாண்டின் பிரபல பாடகிகளில் ஒருவர். பாடல்திறனோடு தன் திருமண வாழ்க்கையில் நிகழ்ந்த அவலங்களுக்காகவும் இவள் அதிகமாய் அறியப்பட்டிருந்தார். ஆகையால்தான், புகழ்மிக்க ஹேண்டலின் மேசியா (Messiah) இசைவரிகளை ஏப்ரல் 1742-ஆண்டில் டப்ளின் நகரில் அரங்கேற்றினபோது, நேயர்களில் அநேகர் இவளை ஒரு தனிபாடகியாக பாடவிட்டதை அங்கீகரிக்கவில்லை.

துவக்கவிழாவில் பாடகி சிபர் “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார் (ஏசா. 53:3) என்ற வரியை பாடினாள். அந்த வார்த்தைகளை கேட்டு பக்திபரவசமடைந்த போதகர் பாட்ரிக் டெலனி என்பவர் எழும்பி நின்று, “ஸ்திரியே, இதன் நிமித்தம் உன் பாவங்கள் அனைத்தும் உனக்கு மன்னிக்கபடுவதாக!” என்றார்.

சூசன்னா சிபருக்கும், ஹேண்டலின் மேசியாவிற்கும் உள்ள தொடர்பு தெளிவானது. “துக்கம் நிறைந்தவரான” – மேசியா இயேசு – பாவத்தின் காரணமாகவே “அசட்டைபண்ணப்பட்டவரும் புறக்கணிக்கப்பட்டவருமாக” இருந்தார். “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார் (வச. 11). எனவும் தீரிக்கன் ஏசாயா கூறியுள்ளார்.

மேசியாவிற்கும் நமக்கும் உள்ள தொடர்பும் அப்படியே உள்ளது. சூசன்னா சிபரோடோ அல்லது நியாயந்தீர்க்கும் கூட்டத்தாரோடோ அல்லது இரண்டிற்கும் இடையிலோ நாம் எங்கு நின்றாலும், நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி தேவன் அருளும் மன்னிப்பை பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். தம்முடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இயேசு பிதாவாகிய தேவனோடு நமக்கு உள்ள உறவை மீட்டெடுக்கிறார்.

இதன் நிமித்தமாக – இயேசு செய்த எல்லாவற்றினிமித்மாக – நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதாக

ராஜாவின் கிரீடம்

நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பல் குத்தும் குச்சை எங்கள் முன்னேயிருந்த பஞ்சு தகட்டில் குத்தினோம். ஈஸ்டருக்கு முந்திய வாரங்களில், ஒவ்வொரு இரவு உணவின் போதும் நாங்கள் முள்ளினால் ஆன ஒரு கிரீடத்தை உருவாக்கினோம். அதிலுள்ள ஒவ்வொரு பல் குத்தும் முள்ளும், நாங்கள் அந்நாளில் செய்த தவறுகளையும், அதற்காக நாங்கள் மனம் வருந்தினதையும், கிறிஸ்து எங்கள் பாவங்களுக்கான அபராதத்தைச் செலுத்தி விட்டார் என்பதையும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பயிற்சியை நாங்கள் எங்கள் வீட்டிலும், ஒவ்வொரு இரவும் செய்தோம். எங்களுடைய தவறுகளினால் நாம் குற்றவாளிகளாகிறோம். நமக்கு ஒரு மீட்பர் தேவை என்பதைக் குறித்து நினைவுகூர இது உதவியது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை விடுவித்தார் என்பதையும் நினைவுகூர்ந்தோம்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறையும் முன்பு, முள்ளினாலான ஒரு கிரீடத்தைச் செய்து அதை இயேசுவுக்கு அணிவித்தது, ரோம போர் வீரர்களின் மிகக் கொடூரமானச் செயல். அவர்கள் இயேசுவிற்கு ராஜரீக உடையான சிவப்பு அங்கியை அணிவித்து, இயேசுவை அடிக்க பயன்படுத்திய கோலை, அவர் கையில் அரச செங்கோல் போல கொடுத்தனர். அவர்கள் இயேசுவை கேலி செய்து அவரை, ‘‘யூதருக்கு ராஜா” (மத். 27:29) என அழைத்தனர். அவர்கள், தங்களுடைய இச்செயல் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்பதை உணராதிருந்தார்கள். இவர் ஒரு சாதாரண அரசன் அல்ல. இவர் ராஜாதி ராஜா. அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய வாழ்வையளிக்கின்றது.

ஈஸ்டர் காலையில், நாங்கள் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாகிய மன்னிப்பையும், புது வாழ்வையும் கொண்டாடும் வகையில் அங்குள்ள பல் குத்தும் குச்சிகளை எடுத்து விட்டு மலர்களைச் சொருகுவோம். தேவன் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி விட்டு நமக்கு விடுதலையையும், அவருக்குள் நித்திய வாழ்வையும் தருகிறார் என்ற செய்தி எத்தனை மகிழ்ச்சிகரமானது.

துயரத்தின் பாதை வழியே

பரிசுத்த வாரத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்படுவதற்கு முன்னான நாட்களை நினைவு கூருவோம். எருசலேமின் வீதிகள் வழியே இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற பாதையை துயரத்தின் பாதை என அழைக்கின்றனர்.

எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இயேசு சென்ற பாதையை துயரத்தின் பாதையையும் விட மேலாகக் கருதுகின்றார். இயேசு துயரத்தின் பாதை வழியே கொல்கொதாவை நோக்கிச் செல்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டதினால், நாம் தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிச் செல்ல ஒரு ‘‘புதிய வாழும் வழி”யைத் திறந்துள்ளார் (எபி. 10:20).

பல நூற்றாண்டுகளாக யூத ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதற்கு மிருகங்களை பலியிடுவதன் மூலம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டனர். ஆனால் இந்த சட்டங்களெல்லாம் வரப் போகிற நன்மையான காரியங்களின் ஒரு நிழலாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு காளை அல்லது வெள்ளாட்டுக்கடா, இவைகளின் ரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது (வச. 1,4).

இயேசு மேற்கொண்ட துயரத்தின் வழியேயான பாதை, அவருடைய மரணத்திற்குப் பின்பு உயிர்த்தெழுதலுக்கும் வழி வகுத்தது. அவரை விசுவாசிக்கும் போது அவராலேயே நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, அவருடைய தியாகத்தினாலேயே பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய நியாயப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாமற் போனாலும், தேவனுடைய பிரசன்னத்தண்டை பயமில்லாமலும், தைரியமாகவும் வரும்படி நாம் அன்போடு அழைக்கப்படுகின்றோம் (வச. 10,22).

கிறிஸ்துவினுடைய துயரத்தின் பாதை, தேவனிடம் செல்ல நமக்கு ஒரு புதிய வாழும் வழியைத் திறந்துள்ளது.

அன்பின் பாத்திரம்

அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், யாரும் பின்னால் திரும்ப வேண்டாம், இந்த வகுப்பறையின் பின் பக்கச் சுவரின் வண்ணம் என்ன? என்று சொல்லுமாறு கேட்டார். ஒருவராலும் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில், நாங்கள் யாருமே அதைக் கவனிக்கவில்லை.

சில வேளைகளில் நாமும் வாழ்வின் சில அம்சங்களைப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஏனெனில் நம்மால் அவையனைத்தையும் சிந்தனைக்குள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் நீண்ட நாட்களாக இருக்கின்ற சிலவற்றைக்கூட பார்க்கத் தவறி விடுகிறோம்.

இதைப் போன்றே, நானும் சமீபத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்ச்சியை மீண்டும் வாசித்தேன். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஏனெனில் இப்பகுதியை பரிசுத்த வாரத்தில் தவறாது வாசிப்பர். நம்முடைய இரட்சகரும் ராஜாவுமானவர் குனிந்து சீடர்களின் கால்களைக் கழுவுகின்றார். இது நம்மை வியப்படையச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத வேலையாட்கள் கூட இச்செயலைச் செய்வதில்லை, ஏனெனில் அதனை அவர்களின் தகுதிக்குத் தாழ்ந்ததாகக் கருதினார். ஆனால் நான் இப்பகுதியில் கவனிக்கத் தவறியது எதுவெனின், மனிதனாகவும், தேவனாகவும் திகழ்ந்த இயேசு, யூதாசுடைய கால்களையும் கழுவினார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தும் (யோவா. 13:11) இயேசு தன்னைத் தாழ்த்தி யூதாசின் கால்களையும் கழுவினார்.

அன்பு, ஒரு பாத்திர நீரில் ஊற்றப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் மீதும் அவருடைய அன்பு பகிரப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்திய வார நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, நாமும் தேவனுடைய ஈவாகிய தாழ்மையைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் அன்பை நம்முடைய நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் கொடுப்போம்.

நோக்கிப் பார், அமைதியாயிரு

மெக்ஸிக்கன் பாடலாசிரியர் ரூபன் சோடேலோ எழுதிய ‘‘அவரை நோக்கிப் பார்” என்ற பாடல் சிலுவையிலிருந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்கியுள்ளது. அவர் நம்மனைவரையும் இயேசுவை நோக்கிப் பார், அமைதியாயிரு என்கின்றார். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு முன்பாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சுவிசேஷங்களில் விளக்கப்பட்டுள்ள காட்சிகளை, விசுவாசத்தோடு நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் அந்த சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகளையும், வேதனைகளையும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இயேசு தன் கடைசி மூச்சை விட்ட போது இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்தவர்கள்... தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்கா 23:47-48). மற்றவர்கள் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (வச. 49) அவர்களெல்லாரும் பார்த்து அமைதியாயிருந்தார்கள். ஒரேயொரு மனிதன் பேசுகிறான். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு ‘‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்றான் (வச. 47).

பாடல்களும், கவிதைகளும் இந்த பெரிய அன்பை விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா, எருசலேமின் பேரழிவுக்குப் பின் அதன் வேதனைகளை விளக்கி எழுதினார். ‘‘வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?” (புலம். 1:12) என ஜனங்களை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றார். எருசலேமிற்கு நடந்த கொடுமைகளைக் காட்டிலும் வேறே துக்கமில்லை எனக் கருதுகின்றார். எப்படியாயினும், இயேசு சகித்த துன்பத்தைக் காட்டிலும் வேறு துயரம் என்ன இருக்கிறது?

நாம் அனைவரும் சிலுவையின் அருகிலுள்ள பாதையின் வழியே கடந்து செல்கிறோம். அவருடைய அன்பை நோக்கிப் பார்க்கின்றோமா? வார்த்தைகளும், பாடல்களும் நம்முடைய நன்றியையும் தேவனுடைய அன்பையும் விவரிக்க போதாது. நாம் இயேசுவின் மரணத்தைக் குறித்து சிறிது நேரம் நினைத்துப் பார்த்து, நம் இருதயத்தின் ஆழத்தில் நம்முடைய ஆழ்ந்த அன்பினை அவருக்குக் கொடுப்போம்.