மெக்ஸிக்கன் பாடலாசிரியர் ரூபன் சோடேலோ எழுதிய ‘‘அவரை நோக்கிப் பார்” என்ற பாடல் சிலுவையிலிருந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்கியுள்ளது. அவர் நம்மனைவரையும் இயேசுவை நோக்கிப் பார், அமைதியாயிரு என்கின்றார். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு முன்பாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சுவிசேஷங்களில் விளக்கப்பட்டுள்ள காட்சிகளை, விசுவாசத்தோடு நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் அந்த சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகளையும், வேதனைகளையும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இயேசு தன் கடைசி மூச்சை விட்ட போது இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்தவர்கள்… தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்கா 23:47-48). மற்றவர்கள் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (வச. 49) அவர்களெல்லாரும் பார்த்து அமைதியாயிருந்தார்கள். ஒரேயொரு மனிதன் பேசுகிறான். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு ‘‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்றான் (வச. 47).

பாடல்களும், கவிதைகளும் இந்த பெரிய அன்பை விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா, எருசலேமின் பேரழிவுக்குப் பின் அதன் வேதனைகளை விளக்கி எழுதினார். ‘‘வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?” (புலம். 1:12) என ஜனங்களை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றார். எருசலேமிற்கு நடந்த கொடுமைகளைக் காட்டிலும் வேறே துக்கமில்லை எனக் கருதுகின்றார். எப்படியாயினும், இயேசு சகித்த துன்பத்தைக் காட்டிலும் வேறு துயரம் என்ன இருக்கிறது?

நாம் அனைவரும் சிலுவையின் அருகிலுள்ள பாதையின் வழியே கடந்து செல்கிறோம். அவருடைய அன்பை நோக்கிப் பார்க்கின்றோமா? வார்த்தைகளும், பாடல்களும் நம்முடைய நன்றியையும் தேவனுடைய அன்பையும் விவரிக்க போதாது. நாம் இயேசுவின் மரணத்தைக் குறித்து சிறிது நேரம் நினைத்துப் பார்த்து, நம் இருதயத்தின் ஆழத்தில் நம்முடைய ஆழ்ந்த அன்பினை அவருக்குக் கொடுப்போம்.