மிக வெப்பமான ஒரு நாளில் 8 வயது சிறுவன் கார்மன் மக்டேனியல் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரருக்கு தாகம் தீர்க்க எதையாகிலும் செய்யவேண்டும் என்று நினைத்தான். குளிர்சாதன பெட்டி ஒன்றில் வைத்த தண்ணீர் பாட்டில்களையும், குளிர் பானத்தையும் வீட்டு வாசற்படியில் வைத்தான். அதனை கண்ட அஞ்சல்காரரின் முகமலர்ச்சியை பாதுகாப்பு கேமரா படம்பிடித்தது. “அடேங்கப்பா! தண்ணீரும், குளிர்பானமும். நன்றி ஆண்டவரே; நன்றி!” என்று அவன் குதூகலித்தான்.

“தான் வீட்டில் இல்லாதுபோனாலும் அஞ்சல்காரருக்கு குளிர்பானத்தை கொடுப்பது தன் கடமை என்று டேனியேல் நினைக்கிறான்” என்றாள் அச்சிறுவனின் தாய்.

இக்கதை நம் உள்ளத்தை உருக்குவதோடு, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், “நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கும் ஒருவர் உண்டு” என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தன் எதிர்காலத்தை குறித்த நிச்சயமில்லாதவராக பவுல் சிறையில் வாடினாலும், பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள் அனுப்பின பொருளுதவிக்காக சந்தோஷமடைந்தார். பிலிப்பி ஒரு செழிப்பான சபை அல்ல. ஆனாலும் அவர்கள் உதாரகுணம் கொண்டவராய் தங்களுடைய குறைவிலே பவுலுக்கு கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-14). பிலிப்பு சபையினர் பவுலினுடைய தேவையை சந்தித்ததுபோலவே, தேவனும் அவர்களுடைய தேவைகளை “கிறிஸ்து இயேசுவுக்குள், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே… சந்திப்பார், (பிலி. 4:19).”

பெரும்பாலும் பரலோக உதவியை தேவன் பிறர் மூலமாகவே அனுப்புகிறார். அதாவது, நம்முடைய தேவைகளை தேவன் மற்றவர்களைக் கொண்டு சந்திக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனை சார்ந்திருக்கும்போது, பவுலைப் போல், நாமும் உண்மையான மனநிறைவின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோம் (வச. 11-13).