வகை  |  odb

அசைபோடும் வருடங்கள்

என்னுடைய மனைவி சமீபத்தில் எனக்கு ஒரு லேபரேடார் வகை நாய்க்குட்டியொன்றைக் கொடுத்தார். நாங்கள் அதற்கு மேக்ஸ் என்று பெயரிட்டோம். ஒரு நாள் நான் என்னுடைய படிக்கும் அறையிலிருந்தபோது மேக்ஸும் என்னோடிருந்தது. நான் என்னுடைய எழுத்தில் கவனமாயிருந்தபோது, சில காகிதங்கள் கிழிக்கப்படும் சத்தம் என் பின்னாலிருந்து கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குற்றவுணர்வோடிருந்த என்னுடைய நாய்க்குட்டியின் வாயிலிருந்து ஒரு திறந்த புத்தகத்தின் சில பக்கங்கள் நொங்கி கொண்டிருந்தன.

எங்களுடைய கால்நடை மருத்துவர், மேக்ஸ், அதனுடைய அசைபோடும் வருடங்களிலிருக்கிறது எனக் சொல்லியிருந்தார். நாய்க்குட்டிகளின் பால்பற்கள் விழுந்து, நிரந்தரபற்கள் தோன்றும்போது, அவை தங்கள் ஊன்களை உறுதிப்படுத்த எதையாகிலும் மென்று கொண்டேயிருக்கும். மேக்ஸ் தனக்கு ஒவ்வாத எதையாகிலும் விழுங்கிவிடாதபடி நான்தான் கவனமாகப் பார்த்திருக்க வேண்டும். நல்ல சுகாதாரமான எதையாகிலும் கடிப்பதற்கு நான் கொடுத்திருக்க வேண்டும்.

மேக்ஸ் அசைபோடுவதற்குத் தள்ளப்படுகிறது. அதனை கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. இவ்வாறு நான் நினைத்துக் கொண்டபோது, நான் என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எவற்றைக் குறித்து அசைபோடுகிறேன், மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றேன் என்பதைக் குறித்து யோசனைசெய்தேன். நாம் புத்தகங்களை வாசிக்கும் போதும், வலைதளங்களில் நுழையும் போதும், அல்லது டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்கும் போதும் நம்முடைய ஆன்மாவிற்கு எவற்றைக் கொடுக்கிறோம் என்பதை நாம் கருத்தாய் கவனிக்கின்றோமா? “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:1,3) என வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது. நாம் நம்மை தேவனுடைய வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் நிரப்பிக் கொள்வோம் அப்படிச் செய்யும்போது நாம் அவரில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவோம்.

நில்

கடலலையின் ஓசையை ரசித்தவாறே நானும் என்னுடைய சிநேகிதியும் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தோம். தூரத்தில் சூரியன் மறைவதையும், அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுருண்டு மெதுவாக எங்களின் நீட்டிய பாதங்களைத் தொடாமல் சற்று தள்ளி நின்றதையும் பார்த்து மகிழ்ந்தோம். "நான் கடலையை நேசிக்கின்றேன்" என்று புன்சிரிப்போடு கூறினாள். “அது அசைந்து கொண்டேயிருப்பதால் நாம் அசையத் தேவையில்லை” என்றாள்.

என்ன சிந்தனை! நம்மில் அநேகர் நிறுத்துவதற்குக் கஷ்டப்படுகின்றோம். நாம் முயற்சிக்கின்றோம். செல்கின்றோம். நம் முயற்சிகளிலிருந்து தளர்ந்துவிடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நம் முயற்சிகளை விட்டு விட்டால் நாம் வாழமுடியாது என்று எண்ணிவிடுகின்றோம். சற்று நின்று கவனிப்போமாகில் நாம் எப்பொழுதும் தூரத்திலேயே வைத்துவிட நினைத்திருக்கும் சில உண்மைகளைக் கண்டு கொள்வோம்.

சங்கீதம் 46:8-9 தேவனுடைய சர்வ வல்லமையையும், அவருடைய வல்லமை வெளிப்படுவதையும் விளக்குகின்றது. “கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். …அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” குழப்பங்கள் நிறைந்த நம்முடைய நாட்களில் அமைதியைக் கொண்டு வர அவர் ஓயாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

10 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம், “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”

நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாலும் தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், சங்கீதக்காரன் வேறோரு முறையில் தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நம்முடைய முயற்சிகளையெல்லாம் விட்டு விட்டு, தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நாம் நின்று அமர்ந்திருந்து தேவனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் நின்று விடவில்லை, நமக்கு நிலையான, மாறாத பாதுகாவலையும், சமாதானத்தையும் தருகின்ற தேவனுடைய வல்லமையை வந்து பாருங்கள் என்கின்றார்.

ஐக்கியத்தில் ஏற்பட்ட தடங்கல்

உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.

இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.

இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது.  இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.

இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிரு

நாங்கள் பயணம் செய்யும் படகு புறப்பட்டதும், என்னுடைய சிறிய மகள் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறினாள். கடல் பயண நோய் அவளைத் தாக்கியது. சிறிது நேரத்தில் எனக்கும் வயிற்றினைப் புரட்டியது. “அந்த அடிவானத்தை கவனித்துப் பார்” என நான் எனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டேன். கடல் மாலுமிகள் தங்களின் உள்ளுணர்வுகளை உற்சாகப்படுத்த இதனைக் கூறுவதுண்டு.

இந்த அடிவானத்தை உருவாக்கியவருக்கு (யோபு 26:10) நாம் நம்முடைய வாழ்வின் சில வேளைகளில் பயத்திலும், அமைதியற்ற நிலையிலும் இருக்கின்றோம் என்பது தெரியும். நாம் நம்முடைய பார்வையை தொலைவிலுள்ள இலக்கிற்கு நேராகத் திருப்புவோமாகில் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

எபிரெயரை எழுதியவர் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் தம் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் தோன்றும் மனச் சோர்வை கண்டு கொண்டார். துன்புறுத்தப்பட்ட பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். விசுவாசத்திலிருக்கும் வேறு சிலர் மிக அதிகமான சோதனைகளைச் சகிக்கின்றனர். அவர்கள் வீடற்றவர்களாயினர் என எடுத்துக் கூறுகின்றார். அவர்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகச் சகித்தனர், ஏனெனில் அவர்கள் மேலான ஒன்றை எதிர்பார்த்தனர்.

எனவே வாசகர்கள் இந்த வீடற்ற அகதிகளைப் போல் தேவன் தாமே ஆயத்தம் பண்ணியிருக்கிற நகரத்தை, அந்த பரம தேசத்தில் காணும்படி அதையே வாஞ்சிப்பார்களாக. (எபிரெயர் 11:10 ; 14, 16) தன்னுடைய கடைசி ஆலோசனையாக எழுத்தாளர் தன்னுடைய வாசகர்களை தேவனுடைய வாக்கின்மேல் உறுதியாயிருக்கும்படித் தெரிவிக்கின்றார். “நிலையான நகரம் நமக்கு இங்கேயில்லை. வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (13:14).

இக்கால பாடுகள் நிரந்தரமானவையல்ல. ‘‘இந்த பூமியின் மேல் நாம் அந்நியரும் பரதேசிகளுமாய்” இருக்கின்றோம். (11:13) தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை தூரத்திலே கண்டு அதையே நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்.

கடைசி அழைப்பு

ஹெலிகாப்டர் ஓட்டியாக இருபது ஆண்டுகள் நாட்டிற்குச் சேவை செய்தபின், ஜேம்ஸ் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி, அவனுடைய சமுதாயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினான். ஆனால் அவன் ஹெலிகாப்டர்களை மிகவும் நேசித்தபடியால் அருகிலுள்ள மருத்துவமனையில், மருத்துவ உதவி செய்வதற்காக பயன்படுத்திய ஹெலிகாப்டரை ஓட்டும் வேலையில் சேர்ந்தான். தன்னுடைய வாழ்வில் இறுதிவரை பறப்பதிலேயே செலவிட்டான்.

இப்பொழுது அவனை வழியனுப்ப வேண்டிய வேளை வந்தது. அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும், அவனோடு பணி புரிந்த இராணுவ உடையணிந்த சில வீரரும் ஆயத்தமாகக் கல்லறைத் தோட்டத்தில் நின்றனர். அவனுடைய சக வேலையாள் ஒருவன் ரேடியோவில் கடைசி அழைப்பு கொடுத்தார். உடனே ஒரு ஹெலிகாப்டரின் மின் விசிறியின் சுழலோசை காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பி அந்த நினைவிடத்தின் மேலே வட்டமிட்டது. பின்னர் அது ஓர் இடத்தில் நிலையாக நின்று மரியாதை செலுத்தியது. பின்னர் அது மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றது. அங்கு வந்திருந்த இராணுவ வீரர்களால் கூடத் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சவுல் ராஜாவும், அவனுடைய குமாரன் யோனத்தானும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது, தாவீது ஒரு பாடலை எழுதினான். அது வில்லின் புலம்பல் எனப் பட்டது. (2 சாமு. 1:17) “இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று.” “பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்” (வ. 19) என்று பாடினான். யோனத்தான் தாவீதின் உற்ற நண்பனும், மைத்துனனுமாவான். தாவீதும் சவுலும் எதிரிகளாயிருந்த போதும், தாவீது அவர்களிருவரையும் கனம் பண்ணினான். ‘‘சவுலுக்காக அழுது புலம்புங்கள்,” “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன். (வச. 24, 26) என எழுதினான்.

மிகச் சிறந்த விடை பெறல் மிகவும் கடினமானது. ஆனால் தேவன் பேரில் நம்பிக்கையாயிருப்போருக்கு, அந்த நினைவுகள் கசப்பைவிட இனிமையைத் தரும். பிறருக்காக பணி புரிந்தவர்களைக் கனம் பண்ணுவது எத்தனை நன்மையானது.

மனிதன் வடிவில் தேவன்

என்னுடைய கணவர் ஒரு மாதம் வெளியூர் செல்ல நேரிட்டதால், நான் என்னுடைய வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு என அதிக வேலைப் பளுவால் கஷ்டப்பட்டேன். நான் எழுதிக் கொண்டிருந்த ஒன்றினை முடிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.  புல் வெட்டும் கருவி பழுதடைந்தது. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையிலிருந்த படியால் வீட்டில் முடங்கிக் கிடந்தனர். எப்படி நான் ஒருத்தியாக இத்தனை காரியங்களையும் கவனிக்க முடியும்?

சீக்கிரத்தில் நான் தனிமையாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். எங்கள் ஆலயத்தைச் சேர்ந்த நண்பர்கள் உதவ முன் வந்தனர். ஜோஸ் புல் வெட்டும் கருவியை சரி செய்ய உதவினார். ஜான் எனக்கு மதிய உணவு கொண்டு வந்தார், அபி என்னுடைய குழந்தைகளை அவளின் குழந்தைகளோடு விளையாட அழைத்துச் சென்றாள். எனவே நானும் என்னுடைய வேலையை முடிக்க உதவியாக இருந்தது. தேவன் இந்த ஒவ்வொரு நண்பர் மூலமாகவும் என் தேவைகளைச் சந்தித்தார். இவர்களனைவரும் ரோமர் 12ல் பவுல் குறிப்பிட்டுள்ள சமுதாயத்தை வாழ்ந்து காட்டினர். அவர்கள் உண்மையாய் நேசித்தார்கள் (வச. 9) இவர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து (வச. 10), நான் தேவையிலிருந்த போது என்னோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடைய உபசரிக்கும் குணத்தைக் காட்டினர் (வச. 13).

என்னுடைய நண்பர்கள் காட்டிய அன்பினால் நான் ‘‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்கவும்,” ‘‘உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கவும் (வச. 12) தனிமையாக, ஒரு மாதத்திற்கு சில துன்பங்களையும் சகிக்கவும் முடிந்தது.  என்னுடைய ஒரு சிநேகிதி சொன்னது போல, கிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரிகள் மனித வடிவில் வந்த கடவுளாக எனக்கிருந்தனர். அவர்கள் காட்டிய உண்மையான அன்பை, நாமும் பிறரிடம் காட்ட வேண்டும். முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு (கலா. 6:10) காட்ட வேண்டும். நானும் அவர்களைப் போல இருக்க விரும்புகின்றேன்.

என்னை யாரும் விரும்பவில்லை

நான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.

தாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங்கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.

நாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.

எதிர்பாராத ஞானம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பெண்மணி தன்னுடைய இளம் வயது மகன் ஒரு வன்முறை செயலைப் பற்றிய செய்தி தொகுப்பினைப் பார்ப்பதாகவும், தான் உடனடியாக அந்த ஒளித்தடத்தை மாற்றி விட்டதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள். மேலும், நீ இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை என அவனிடம் கூறினாள். நாங்கள் இதனைக் குறித்து விவாதித்தோம். அவனுடைய மனதை ‘‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ...” (பிலிப். 4:8) அவற்றால் நிரப்ப வேண்டும் என்று கூறினாள். இரவு உணவிற்குப் பின் அவளும் அவளுடைய கணவரும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களின் ஐந்து வயது பெண் டெலிவிஷனை நிறுத்திவிட்டாள். ‘‘நீங்கள் இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்று அம்மாவைப் போன்ற குரலில் கூறினாள். மேலும், இப்பொழுது அந்த வேத வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்” என்றாள்.

மூத்தோர்களாகிய நாம் சிறுவர்களையும்விட மேலாகச் செய்திகளைக் கிரகிக்கவும் அவற்றை மனதில் இருத்தவும் முடியும். எனினும், அந்த தம்பதியினரின் பெண் பிள்ளை வேடிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் தன்னுடைய தாயின் அறிவுரைகளை செயலில் வெளிப்படுத்தினாள். நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள்கூட வாழ்வின் இருண்ட பகுதிகளையே பார்த்துக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவர். இத்தகைய காரியங்களைக் குறித்து சிந்தித்த பவுல், பிலிப்பியர் 4:8 ல் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். இது, இந்த உலகின் இருண்ட பகுதிகளையே பார்ப்பதால் நம்மில் படிந்து விடும் மன அழுத்தங்களை நீக்குவதற்கான வலிமை வாய்ந்த மருந்தாகும்.

நம்முடைய மனதை நிறைத்துள்ளவற்றைக் குறித்து கவனமாக முடிவுகள் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, தேவனைக் கனம் பண்ணி நம் இருதயத்தையும் அவருக்கேற்றபடி காத்துக் கொள்வதேயாகும்.