சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.