ஜனவரி, 2025 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜனவரி 2025

சொல்லும்படி நெருக்கப்படுதல்

“இயேசு உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. அவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறார்"  ஜான் டேனியல்ஸின் கடைசி வார்த்தைகள் அவை. அவர் ஒரு வீடற்ற மனிதனுக்குப் பணத்தைக் கொடுத்து, அந்த இறுதி வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்ட சில நொடிகளில், அவர் ஒரு வாகனத்தில் மோதி உடனடியாகக் கொல்லப்பட்டார். ஜானின் வாழ்க்கையை நினைவூட்டும் ஆறுதல் கூட்டத்திற்கான அழைப்பிதழில் பின்வரும் வார்த்தைகள் இருந்தன: “அவர் அதிகமான மக்களைச் சந்திக்கும்படியான வழிமுறையைக் கண்டுபிடிக்க விரும்பினார், அதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், தேவையோடிருந்த ஒரு மனிதனுக்கு உதவ முயன்றபோது, உலகையே சந்திக்கும் ஒரு வழிமுறையைத் ​​​​தேவன் அவருக்குத் தந்தார். அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த செய்தியை எடுத்துச் சென்றன, மேலும் இது நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பலரைச் சென்றடைந்தது."

ஜான் டேனியல்ஸ் ஒரு பிரசங்கியாக இல்லாவிட்டாலும், இயேசுவைப் பற்றி பிறருக்கு வலிந்துபோய் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பவுலும் அப்படித்தான். அப்போஸ்தலர் 20-ல், எபேசுவில் உள்ள சபை  மூப்பர்களிடம் பிரியாவிடை பெற்றபோது, நற்செய்திக்கான தனது ஆர்வத்தை அப்போஸ்தலன் வெளிப்படுத்தினார்: “என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (வ.24).

இயேசுவின் மன்னிப்பு மற்றும் புதிய வாழ்க்கை பற்றிய நற்செய்தியானது  பிறருடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஏற்றது. சில விசுவாசிகள் மற்றவர்களை விடச் சுவிசேஷத்தை விளக்குவதில் திறமையானவர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், அதன் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை  அனுபவித்த அனைவரும் தேவனின் அன்பின் கதையைச் சொல்ல முடியும்.

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

பரிசுத்தமாகுதல்

உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.

உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.

இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.

தேவன் நமது திட அஸ்திபாரம்

உடைந்துவிழக்கூடிய சமையல்கட்டு மற்றும் சோபித்துப்போன சுவர்களுடன் இருந்த எங்கள் வீட்டைப் புதுப்பிப்பது அவசியம் ஆனது. அதின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டபின், கட்டுமான பணியாளர்கள் புதிய அஸ்திபாரத்திற்குத் தோண்டத் தொடங்கினர். சுவாரசியம் ஆரம்பித்தது.

அவர்கள் தோண்டுகையில்; உடைந்த தட்டுகள், 1850 களின் சோடா பாட்டில்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் போன்றவை அகப்பட்டன.

நாங்கள் ஒரு குப்பை மேட்டின்மேல் எங்கள் வீட்டைக் கட்டியிருந்தோமா? யாரறிவார். ஆனால் முடிவில் எங்கள் பொறியியலாளர் எங்கள் வீட்டு அஸ்திபாரங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும் இல்லையேல் சுவரில் வெடிப்புகள் தோன்றும் என்றார்.

உறுதியான வீடுகளுக்குத் தரமான அஸ்திபாரங்கள் வேண்டும். இது நமது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இஸ்ரவேலர்கள் தங்களின் சத்துருக்களால் அசைக்கப்படுகையில், ஏசாயா அவர்களுக்காக ஜெபித்தார் (ஏசாயா 33:2-4). ஆனால் அவர்களின் பெலன் வீரத்தாலோ ஆயுதங்களாலோ உண்டாகாமல், தங்கள் வாழ்வைத் தேவன் மீது கட்டுவதால் மட்டுமே உண்டாகும். தீர்க்கதரிசி, “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (வ.6) என்றார். இயேசுவும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவருடைய ஞானத்தின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டுபவர்கள் வாழ்க்கையின் புயல்களினூடே நிலைத்திருக்கலாம் என்று உபதேசித்திருந்தார் (மத்தேயு 7:24-25).

நமது வாழ்வில் மூர்க்கம், அடிமைத்தனம் அல்லது திருமண பிரச்சனைகள் போன்ற விரிசல்கள் தோன்றுவது; நமது அஸ்திபாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதின் அடையாளங்கள். நாம் தவறான இடத்தில் பாதுகாப்பை நாடினால் அல்லது இவ்வுலகத்தின் ஞானத்தை மட்டுமே பின்பற்றினால், நாம் உறுதியற்ற அஸ்திபாரத்தின்மேல் இருப்போம். ஆனால் தங்கள் வாழ்க்கையைத் தேவன்மீது கட்டுபவர்களோ அவருடைய பெலனையும், அனைத்து பொக்கிஷங்களையும் அடையலாம் (ஏசாயா 33:6).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வாலையும் நாக்கையும் அசைத்தல்

பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம்.  
பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர். 
இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம்.  
மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது.  
மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.  

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!