“இயேசு உங்களை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. அவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறார்” ஜான் டேனியல்ஸின் கடைசி வார்த்தைகள் அவை. அவர் ஒரு வீடற்ற மனிதனுக்குப் பணத்தைக் கொடுத்து, அந்த இறுதி வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்ட சில நொடிகளில், அவர் ஒரு வாகனத்தில் மோதி உடனடியாகக் கொல்லப்பட்டார். ஜானின் வாழ்க்கையை நினைவூட்டும் ஆறுதல் கூட்டத்திற்கான அழைப்பிதழில் பின்வரும் வார்த்தைகள் இருந்தன: “அவர் அதிகமான மக்களைச் சந்திக்கும்படியான வழிமுறையைக் கண்டுபிடிக்க விரும்பினார், அதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம், தேவையோடிருந்த ஒரு மனிதனுக்கு உதவ முயன்றபோது, உலகையே சந்திக்கும் ஒரு வழிமுறையைத் தேவன் அவருக்குத் தந்தார். அனைத்து உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த செய்தியை எடுத்துச் சென்றன, மேலும் இது நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பலரைச் சென்றடைந்தது.”
ஜான் டேனியல்ஸ் ஒரு பிரசங்கியாக இல்லாவிட்டாலும், இயேசுவைப் பற்றி பிறருக்கு வலிந்துபோய் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பவுலும் அப்படித்தான். அப்போஸ்தலர் 20-ல், எபேசுவில் உள்ள சபை மூப்பர்களிடம் பிரியாவிடை பெற்றபோது, நற்செய்திக்கான தனது ஆர்வத்தை அப்போஸ்தலன் வெளிப்படுத்தினார்: “என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (வ.24).
இயேசுவின் மன்னிப்பு மற்றும் புதிய வாழ்க்கை பற்றிய நற்செய்தியானது பிறருடன் பகிர்ந்துகொள்ள மிகவும் ஏற்றது. சில விசுவாசிகள் மற்றவர்களை விடச் சுவிசேஷத்தை விளக்குவதில் திறமையானவர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன், அதன் வாழ்க்கையை மாற்றும் வல்லமையை அனுபவித்த அனைவரும் தேவனின் அன்பின் கதையைச் சொல்ல முடியும்.
கிறிஸ்துவிலும் அவர் மூலமாகவும் தேவனின் அன்பையும் மன்னிப்பையும் பற்றிக் கேள்விப்பட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கும் யாரை நீங்கள் அறிவீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அவருடைய கிரியையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?
அன்பு தேவனே, இயேசுவின் மூலம் வரும் புதிய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லத் தயங்கியதற்காக என்னை மன்னித்து, உமது அன்பைத் தைரியமாகப் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவும்.