டிசம்பர், 2024 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2024

தேவனின் கரம்

1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.

ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).

புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, ​​நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).

தேவனே, ஏன் என்னை?

ஜிம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவகையான இயக்க நரம்பணு நோயுடன் போராடி வருகிறார். அவரது தசைகளில் உள்ள நரம்பணுக்கள் சிதைவதால் அவரது தசைகள் வீணாகின்றன. அவர் தனது சிறந்த இயக்க திறன்களை இழந்துவிட்டார் மற்றும் அவரது கைகால்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டார். அவரால் இனி சட்டை பொத்தான் போடவோ அல்லது காலணி அணியவோ முடியாது. மேலும் கைகளால் கரண்டியைப் பிடிப்பதும்  சாத்தியமற்றதாகிவிட்டது. ஜிம் தனது சூழ்நிலையோடு போராடி, தேவன் ஏன் இப்படி நடக்க அனுமதிக்கிறார்? ஏன் எனக்கு? எனக் கேட்கிறார்.

தேவனிடம் தங்கள் கேள்விகளைக் கொண்டு வந்த இயேசுவின் பல விசுவாசிகளின் கூட்டத்தில் இவரும் ஒருவர். சங்கீதம் 13 இல், “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்” (வ.1-2) என்று தாவீது கூக்குரலிடுகிறார்.

நாமும் நம் குழப்பங்களையும் கேள்விகளையும் தேவனிடம் எடுத்துச் செல்லலாம். “எவ்வளவு காலம்?” என்றும் "ஏன்?" என்றும்  நாம் அழும்போது அவருக்குப் புரியும். அவருடைய ஆகச்சிறந்த பதில் இயேசுவிலும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் சிலுவையையும் காலியான கல்லறையையும் பார்க்கும்போது, ​​தேவனின் "கிருபையின்மேல்" நம்பிக்கை வைத்து, அவருடைய இரட்சிப்பில் களிகூர (வ. 5) நாம் தன்னம்பிக்கை பெறுகிறோம். வாழ்வின் இருண்ட நேரங்களிலும், நாம் "கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்" (வ. 6) எனலாம். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய நித்தியமான நல்ல நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.

நிலைத்திருக்கும் கட்டிடம்

நான் ஓஹியோவில் சிறுவனாக இருந்தபோது, ​​எங்கள் வீட்டருகே பல கட்டுமானப் பகுதிகள் இருந்தன. அவைகளால் ஈர்க்கப்பட்டு, மீந்த பொருட்களைக் கொண்டு நானும் எனது நண்பர்களும் ஒரு கோட்டை கட்ட எத்தனித்தோம். எங்கள் பெற்றோரிடமிருந்து கருவிகளைக் கடன் வாங்கி, நாங்கள் மரத்தை அறுத்து, எங்களைப் பொருட்களால் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பல நாட்கள் முயன்றோம். அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் எங்கள் முயற்சிகள் எங்களைச் சுற்றி நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தன. அவை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஆதியாகமம் 11ல், ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை நாம் வாசிக்கிறோம். "வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி" (வ. 4) என்று ஜனங்கள் சொன்னார்கள். இந்த முயற்சியிலிருந்த ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், "நமக்குப் பேர் உண்டாக" (வ. 4) ஜனங்கள் அதைச் செய்தார்கள்.

இது மனிதர்களுக்கு ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது; நமக்கும் நமது சாதனைகளுக்கும் நினைவுச்சின்னங்களை உருவாக்குகிறோம். பின்னர் வேதாகம நடையில், இந்தக் கதை தேவனின் ஆலயத்தைக் கட்டுவதற்கான சாலொமோனின் நோக்கத்துடன் முற்றிலுமாக முரண்படுகிறது: "என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்" (1 இராஜாக்கள் 5:5).

தான் கட்டுகிறவை தன்னை அல்ல தேவனையே சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டார். இதைப் பற்றி அவர் ஒரு சங்கீதம் கூட எழுதும் அளவிற்கு இது ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. "கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" (வ. 1) என்று சங்கீதம் 127 தொடங்குகிறது. என்னுடைய சிறுவயதுக் கோட்டைக் கட்டுவது போல், நாம் கட்டுவதெல்லாம் நிலைக்காது, ஆனால் தேவனின் நாமமும், அவருக்காக நாம் செய்வதும் நிலையான முக்கியத்துவம் வாய்ந்தது.

விசுவாச படிகள்

ஜான் தனது வேலையை இழந்ததால் நிலைகுலைந்து போனார். ஆரம்ப நாட்களைக் காட்டிலும், வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலகட்டத்தில் புதிதாக எங்காவது வேலைக்குச் சேருவது கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். சரியான வேலைக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பின்னர் ஜான் வேலைக்கான தனது தற்குறிப்பைப் புதுப்பித்து, நேர்காணல் பயிற்சி குறிப்புகளையும் படித்தார், மேலும் தொலைப்பேசியில் நிறையப் பேரிடம் பேசினார். விண்ணப்பித்த பல வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பனி நேரம் மற்றும் எளிதான பயணத்துடன் புதிய வேலையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலும் தேவனின் போஷிப்பும் சரியான நேரத்தில் சந்தித்தன.

எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த காலத்தில் யோகெபேத் (யாத்திராகமம் 6:20)  மற்றும் அவரது குடும்பத்தினர் இதைவிட வியத்தகு நிகழ்வைச் சந்தித்தனர். புதிதாகப் பிறந்த அனைத்து எபிரேய மகன்களும் நைல் நதியில் போடப்பட வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது (1:22), யோகெபெத் பயந்திருக்க வேண்டும். அவளால் சட்டத்தை மாற்ற முடியவில்லை, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன் மகனைக் காப்பாற்ற முயலும்படி அவள் சில படிகளை எடுக்கலாம். விசுவாசத்தால், அவள் அவனை எகிப்தியர்களிடமிருந்து மறைத்தாள். " ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்" (2:3). தேவன் அவனுடைய உயிரை அற்புதமாகப் பாதுகாக்க அடியெடுத்து வைத்தார் (வவ. 5-10) பின்னர் இஸ்ரவேலர் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவனைப் பயன்படுத்தினார் (3:10).

ஜானும், யோகெபேத்தும் மிகவும் வித்தியாசமான அடியெடுத்தனர், ஆனால் இரண்டு சம்பவங்களும் விசுவாசம் நிறைந்த செயல்களால் அடையாளப் படுத்தப்படுகின்றன. பயம் நம்மை முடக்கிவிடும். நாம் நினைத்தது அல்லது எதிர்பார்த்தது போன்ற பலன் இல்லாவிட்டாலும், அதன் விளைவைப் பொருட்படுத்தாமல் தேவனின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க விசுவாசம் நமக்குப் பெலன் அளிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).