உடைந்துவிழக்கூடிய சமையல்கட்டு மற்றும் சோபித்துப்போன சுவர்களுடன் இருந்த எங்கள் வீட்டைப் புதுப்பிப்பது அவசியம் ஆனது. அதின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டபின், கட்டுமான பணியாளர்கள் புதிய அஸ்திபாரத்திற்குத் தோண்டத் தொடங்கினர். சுவாரசியம் ஆரம்பித்தது.

அவர்கள் தோண்டுகையில்; உடைந்த தட்டுகள், 1850 களின் சோடா பாட்டில்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் போன்றவை அகப்பட்டன.

நாங்கள் ஒரு குப்பை மேட்டின்மேல் எங்கள் வீட்டைக் கட்டியிருந்தோமா? யாரறிவார். ஆனால் முடிவில் எங்கள் பொறியியலாளர் எங்கள் வீட்டு அஸ்திபாரங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும் இல்லையேல் சுவரில் வெடிப்புகள் தோன்றும் என்றார்.

உறுதியான வீடுகளுக்குத் தரமான அஸ்திபாரங்கள் வேண்டும். இது நமது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இஸ்ரவேலர்கள் தங்களின் சத்துருக்களால் அசைக்கப்படுகையில், ஏசாயா அவர்களுக்காக ஜெபித்தார் (ஏசாயா 33:2-4). ஆனால் அவர்களின் பெலன் வீரத்தாலோ ஆயுதங்களாலோ உண்டாகாமல், தங்கள் வாழ்வைத் தேவன் மீது கட்டுவதால் மட்டுமே உண்டாகும். தீர்க்கதரிசி, “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (வ.6) என்றார். இயேசுவும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவருடைய ஞானத்தின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டுபவர்கள் வாழ்க்கையின் புயல்களினூடே நிலைத்திருக்கலாம் என்று உபதேசித்திருந்தார் (மத்தேயு 7:24-25).

நமது வாழ்வில் மூர்க்கம், அடிமைத்தனம் அல்லது திருமண பிரச்சனைகள் போன்ற விரிசல்கள் தோன்றுவது; நமது அஸ்திபாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதின் அடையாளங்கள். நாம் தவறான இடத்தில் பாதுகாப்பை நாடினால் அல்லது இவ்வுலகத்தின் ஞானத்தை மட்டுமே பின்பற்றினால், நாம் உறுதியற்ற அஸ்திபாரத்தின்மேல் இருப்போம். ஆனால் தங்கள் வாழ்க்கையைத் தேவன்மீது கட்டுபவர்களோ அவருடைய பெலனையும், அனைத்து பொக்கிஷங்களையும் அடையலாம் (ஏசாயா 33:6).