நான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில், பிறருடைய கதைகளைப் பகிர்வது எனக்கு பெரும் விருப்பம். ஆனால், நான் எனது சொந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளாமலிருக்கப் பயிற்றுவிக்கப்பட்டேன். தேவன் என்னைப் பத்திரிகைத் துறையிலிருந்து வெளியே வரவும், தன்னை குறித்துப் பேசவும், எழுதவும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும்படியாக அழைப்பதை நான் சில வருடங்களாகவே அதிகம் உணர்ந்தேன். நான் எனது சொந்த கருத்துக்களை, குறிப்பாக எனது விசுவாசத்தை பகிர்ந்துகொள்வதற்குச் சற்று தயங்கினேன். நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பிக்கும்போது, நான் சொல்ல வேண்டிய காரியங்களெல்லாம் சொல்லித் தீர்ந்துவிடுமோ என்று அஞ்சினேன். ஆனால் ஒவ்வொரு வாரமும், எனக்கு திடமூட்டும் வார்த்தைகளும், பகிர்ந்துகொள்வதற்கான ஆழமான கருத்துக்களும் கிடைத்தன. நான் எவ்வளவு அதிகம் எழுதினேனோ, அவ்வளவு அதிகமான புதிய யோசனைகள் தோன்றின. இப்போதும் இது உண்மையாகவே தொடர்கிறது.

எனது வரங்களையும், தாலந்துகளையும் பிறர் சேவைக்காக அளிக்கையில், தேவன் என்னை அதிக மகிழ்ச்சியாலும் உத்வேகத்தாலும் நிரப்புவதை என் சொந்த வாழ்வில் அனுபவித்துள்ளேன்.

2 இராஜாக்களில், எலிசா தீர்க்கதரிசியின் உதவி நாடிச்சென்ற ஏழை விதவையைக் குறித்து வாசிக்கிறோம். மரித்த அவளது கணவனுக்குக் கடன் கொடுத்தவர்கள், அவளது இரண்டு குமாரர்களை அடைமானம் கேட்கின்றனர். அவள் வீட்டிலிருந்ததெல்லாம் ஒரு குடம் ஒலிவ எண்ணெய் மட்டுமே. அவளது அயலகத்தாரிடம் பாத்திரங்களைக் கடன்வாங்கி, அவற்றில் எண்ணெய்யை ஊற்றும்படி தீர்க்கதரிசி அறிவுறுத்தினார். “இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்” (2 இராஜாக்கள் 4:5). எல்லா பாத்திரங்களும் அற்புதமாக நிறையும்வரைக்கும் அவள் வார்த்துக்கொண்டே இருந்தாள். மீந்திருந்த எண்ணெய்யைக் கொண்டு அவளது குடும்ப கடனையும் அவளால் செலுத்த முடிந்தது.

தேவன் உண்மையுள்ளவர், எப்போதும் தேவைகளைச் சந்திப்பவர். நாம் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கவே தேவன் நம்மை வரங்களாலும், தாலந்துகளாலும், வளங்களாலும் ஆசீர்வதித்துள்ளார். நாம் நமது தாலந்துகளை புறக்கணிக்கவோ ஒளித்துவைக்கவோ செய்யாமல் அவரது மகிமைக்காகப் பயன்படுத்துவோமாக.