உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.

உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.

இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.