Archives: அக்டோபர் 2021

உபத்திரவத்தின் நோக்கம்

“இது என்னுடைய தவறாய் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லவருகிறீர்களா?” அந்த பெண்மணியின் வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடைய திருச்சபையில் சிறப்பு பிரசங்கியாராய் நின்று, என்ன பிரசங்கிப்பது என்பதைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “எனக்கு நாள்பட்ட நோய் உள்ளது, அதற்காக நான் ஜெபித்து, உபவாசம் இருந்து, என் பாவங்களை அறிக்கையிட்டு, நோய் தீர இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த நோய் என்னை விட்டு அகன்றபாடில்லை, ஆகையால் அது என் பாவமாகவே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

அந்த பெண்ணின் அறிக்கைக்காய் நான் வேதனைப்பட்டேன். பிரச்சனையைத் தீர்க்கும் ஆவிக்குரிய சூத்திரம் செயல்படவில்லை என்பதை அறிந்ததும், அவள் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளுகிறாள். உபத்திரவத்திற்கு இதுபோன்ற சூத்திரங்கள் செல்லுபடியாகாது என்பது காலாகாலமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

நீங்கள் உபத்திரப்படுகிறீர்களென்றால் ஏதேனும் பாவம் செய்திருக்கவேண்டும் என்று கருதுவது மிகவும் பழைய சூத்திரம். யோபு தனக்குண்டான கால்நடைகள், பிள்ளைகள், மற்றும் சரீர பெலன் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, அவனுடைய நண்பர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினர். யோபுவின் பாவத்தை சந்தேகித்த எலிப்பாஸ், “சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ?” என்று கேட்கிறார் (யோபு 4:7). பில்தாத்தும், யோபுவின் குமாரர்கள் மரித்ததற்கு காரணம் அவர்களுடைய பாவமே என்று குற்றப்படுத்துகிறார் (8:4). யோபுவின் உபத்திரவத்திற்கான சரியான காரணத்தை அறிய முற்படாமல் (1:6-2:10), அவர்களுடைய இலகுவான சூத்திரங்களை வைத்து அவனை நியாயந்தீர்த்ததினால் தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு பாத்திரவான்களாகின்றனர் (42:7). 

அழியக்கூடிய இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். யோபுவைப் போல அதை தேவன் ஏன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் அந்த வலியைக் கடந்து தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். இலகுவான சூத்திரங்களை நம்பி சோர்ந்துபோகாதீர்கள். 

பிரித்தெடுத்தல்

“டக் டக்ஸ்” அல்லது “ஆட்டோ” என்று சொல்லப்படுகிற இந்தியாவின் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலானவர்கள் பயணத்திற்கு வசதியாக இருக்கும். சென்னையில் வாழும் மாலா என்னும் பெண், ஆட்டோவை ஒரு மிஷன் பணித்தளமாய் பார்த்தாள். ஒரு நாள் ஆட்டோவில் ஏறி, சகஜமாய் பழகி, மார்க்கத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவரைக் கண்டாள். அடுத்த முறை அவரை சந்திக்கும்போது அவருக்கு சுவிசேஷத்தை சொல்லிவிட வேண்டும் என்றுஅவள் இருதயத்தில் தீர்மானித்தாள்.

“தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய” என்ற பவுலின் அறிக்கையோடே ரோமர் நிருபம் துவங்குகிறது (ரோமர் 1:1). சுவிசேஷத்தைக் குறிக்கும் “இவாஞ்சிலியோன்” என்னும் கிரேக்கப் பதத்திற்கு “நற்செய்தி” என்று பொருள். தேவனுடைய சுவிசேஷத்தைக் கூறுவதே தன்னுடைய நோக்கம் என்பதை பவுல் கூறுகிறார். 

அந்த நற்செய்தி என்ன? அது தேவனுடைய குமாரனைக் குறித்த நற்செய்தி என்று ரோமர் 1:3 சொல்லுகிறது. அந்த நற்செய்தியே, இயேசு! நம்முடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கவே இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தியை அறிவிக்கும் பாத்திரங்களாய் தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். என்னே தாழ்மையான சத்தியம்!

நற்செய்தியை பகிர்ந்துகொள்வது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிலாக்கியம். மற்றவர்களை இந்த விசுவாசத்திற்கு உட்படுத்த நாம் கிருபை பெற்றிருக்கிறோம் (வச.5-6). நாம் ஆட்டோவில் பயணித்தாலும் அல்லது எங்கே இருந்தாலும், நம்மை சுற்றியுள்ள மக்களிடம் சுவிசேஷத்தின் ஆச்சரியமான செய்தியை பகிர்ந்துகொள்ள தேவன் நம்மை பிரித்தெடுத்திருக்கிறார். மாலாவைப் போல ஒவ்வொரு நாளும் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவிக்க நாமும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம். 

சோதித்தல்

முதன்முறையாக என்னுடைய மகன்களை 14,000 அடி உயரமுள்ள மலையேற்றத்திற்கு கூட்டிச்செல்லும்போது அவர்கள் சற்று பதட்டமாய் காணப்பட்டனர். அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அவர்கள் அந்த சவாலுக்கு ஒத்துக்கொண்டார்களா? என்னுடைய இளைய மகன், வழியில் நின்று அதிக நேரம் ஓய்வெடுத்தான். “அப்பா, இனி மேல் என்னால் போகமுடியாது” என்று திரும்ப திரும்பச் சொன்னான். ஆனால் இந்த பயணம் அவர்களுக்கு நன்மையானது என்று நம்பினேன், அவர்கள் என்னை நம்பவேண்டும் என்றும் விரும்பினேன். தன்னால் இனி போகவே முடியாது என்று கூறிய என்னுடைய மகன், சிகரத்தின் உச்சிக்கு ஒரு மைல் தொலைவில் எங்களை முந்திக்கொண்டு ஆர்வமாய் ஓடினான். அவனுடைய பயத்தின் மத்தியிலும் அவன் என்னை நம்பினதைக் குறித்து அவன் சந்தோஷப்பட்டான்.

மலையேற்றத்தின்போது ஈசாக்கு தன் தகப்பன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் வியப்படைவதுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தன் மகனின் மீது கத்தியை ஓங்கிய ஆபிரகாம் தன் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குறித்து நான் அசந்துவிட்டேன் (ஆதியாகமம் 22:10). அவனுடைய குழப்பமான, பதைபதைக்கும் நிலையிலும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அதிர்ஷ்டவசமாய் ஒரு தேவ தூதன் அவனைத் தடுத்துவிட்டான். “பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே” (வச.12) என்றும் சொன்னான். ஈசாக்கு மரிப்பது தேவ சித்தமல்ல. 

இந்த சம்பவத்தையும் நம் வாழ்க்கையையும் கவனத்துடன் ஒப்பிடும்போது, துவக்க வரிகளை நினைவுகூருவது அவசியம்: “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” (வச. 1). இந்த சோதனையின் மூலம் ஆபிரகாம் எந்த அளவிற்கு தேவனை விசுவாசித்தான் என்பதை அறிந்துகொண்டான். தேவனுடைய அன்பான இருதயத்தையும் அவருடைய தேவையை சந்திக்கும் குணத்தையும் புரிந்துகொண்டான். 

நம்முடைய குழப்பமான, இருளான, சோதிக்கப்படும் தருணங்களில் நம்மைக் குறித்தும் தேவனைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். மேலும் அந்த சோதனைகளின் மூலம் தேவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை வைக்க முடியும். 

பேசு, நம்பு, உணர்வடை!

“இரகசியங்களை சொல்லுதல்” என்னும் தன்னுடைய சிறப்பான படைப்பில், ப்ரெட்ரிக் ப்யூச்னர், “பேசாதே, நம்பாதே, உணராதே என்னும் விதிகளோடு நாம் வாழுகிறோம்; அதை மீறுபவனுக்கு ஐயோ” என்கிறார். அவர், “ஒரு சில காரணங்களால் செயலிழந்து நிற்கிற குடும்பங்களின் எழுதப்படாத விதிகளைக்” குறித்து விவரிக்கிறார். இந்த விதியானது, அவருடைய சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட அவருடைய தகப்பனாரின் தற்கொலையைக் குறித்து பேசவும் வருந்தவும் அவரை அனுமதிக்கவில்லை. அவருடைய வலி மிகுந்த தருணத்திலும் யாரையும் நம்பவிடாமல் அவரைத் தடுத்தது.

அதை தொடர்புபடுத்தி பார்க்கமுடியுமா? நம்மில் பலர் ஒரு சில விஷயங்களில் நம்முடைய பாதிப்பைக் குறித்து மௌனம் சாதிக்கும் தவறான அன்பின் கண்ணோட்டத்தோடு வாழ பழகிக்கொண்டோம். அந்த வகையான அன்பு ஒருவிதமான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அது ஒருவகையான அடிமைத்தனம். 

நாம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தினிமித்தம் சிக்கியுள்ள இந்த நிபந்தனைக்குட்பட்ட அன்பிலிருந்து, இயேசுவின் அன்பு எவ்வாறு வித்தியாசமாயுள்ளது என்பதைப் பார்க்க நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் அன்பின் மூலமாய் நாம் பயத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதையும் (ரோமர் 8:15), நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட மகிமையான சுதந்திரத்தை புரிந்துகொள்ளவும் (வச.21) முடியும் என்றும் பவுல் கூறுகிறார். உண்மையாய், ஆழமாய் நிபந்தனையில்லாமல் நேசிக்கப்படுவதை நாம் உணர்ந்தால். பயமில்லாத வாழ்க்கையை வாழ வெளிப்படையாய் பேசவும் நம்பவும் உதவியாயிருக்கும். 

ஞானமுள்ள கிறிஸ்தவர்கள்

கொரோனா பெருந்தொற்றின் நாட்களில் உலகம் முழுமையுமுள்ள பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சீன தேசத்தில், டிங்டாக் என்னும் ஆன்லைன் செயலி மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. சங்கடப்பட்ட மாணவர்கள், இந்த டிங்டாக் செயலிக்கான நிகழ்நிலை மதிப்பீட்டை குறைவாகக் காட்டினால் அந்த செயலியை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று எண்ணினர். ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரேயொரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்து, அந்த செயலியை செயல்படவிடாமல் முடக்கினர். 

மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலை தேவன் அங்கீகரிக்கமாட்டார் என்றாலும், அவர்களின் புத்தி கூர்மையை தேவன் பொருட்படுத்துகிறார். தன் எஜமானிடத்தில் திட்டுவாங்கிய ஓர் உக்கிராணக்காரன் தன் கடைசி நாட்களில் மற்றவர்களுக்கு நன்மைசெய்ய முயன்றதைக் குறித்த ஒரு கதையை இயேசு சொல்லுகிறார். அந்த உக்கிராணக்காரனுடைய செய்கையை இயேசு நியாயப்படுத்தவில்லை. மாறாக, அவனுடைய புத்திகூர்மையான செயலை முக்கியத்துவப்படுத்தி, தன்னைப் பின்பற்றுகிறவர்களும் ஞானமாய் செயல்படவேண்டும் என்று கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக்கா 16:9). 

பணம் என்று வரும்போது, அதை செலவழிக்காமல் பாதுகாக்க நம்மில் பலர் பிரயாசப்படுவர். ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை எப்படி நேர்த்தியாய் பயன்படுத்துவது என்று சிந்திப்பபர்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதின் மூலமாய் “உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” என்றும் அதுவே பாதுகாப்பும் மேன்மையுமானது என்று இயேசு சொல்லுகிறார். எந்த ஒரு குழுவிலும் தலைவன் என்பவன் யார்? யார் பணத்தை முன்வந்து செலவழிக்கிறார்களோ அவர்களே. கொடுப்பது நமக்கு நித்திய வீட்டின் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் என்றும், இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. 

நம்மிடத்தில் பணம் இல்லையென்றாலும், நேரம், திறமைகள் மற்றும் கேட்கும் செவி ஆகியவைகள் நம்மிடம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படி நேர்த்தியாய் உதவுவது என்பதை நமக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவனிடத்தில் கேட்போம்.