“இது என்னுடைய தவறாய் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லவருகிறீர்களா?” அந்த பெண்மணியின் வார்த்தைகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களுடைய திருச்சபையில் சிறப்பு பிரசங்கியாராய் நின்று, என்ன பிரசங்கிப்பது என்பதைக் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “எனக்கு நாள்பட்ட நோய் உள்ளது, அதற்காக நான் ஜெபித்து, உபவாசம் இருந்து, என் பாவங்களை அறிக்கையிட்டு, நோய் தீர இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஆனாலும் அந்த நோய் என்னை விட்டு அகன்றபாடில்லை, ஆகையால் அது என் பாவமாகவே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

அந்த பெண்ணின் அறிக்கைக்காய் நான் வேதனைப்பட்டேன். பிரச்சனையைத் தீர்க்கும் ஆவிக்குரிய சூத்திரம் செயல்படவில்லை என்பதை அறிந்ததும், அவள் தன்னையே குற்றப்படுத்திக்கொள்ளுகிறாள். உபத்திரவத்திற்கு இதுபோன்ற சூத்திரங்கள் செல்லுபடியாகாது என்பது காலாகாலமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

நீங்கள் உபத்திரப்படுகிறீர்களென்றால் ஏதேனும் பாவம் செய்திருக்கவேண்டும் என்று கருதுவது மிகவும் பழைய சூத்திரம். யோபு தனக்குண்டான கால்நடைகள், பிள்ளைகள், மற்றும் சரீர பெலன் ஆகியவற்றை இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, அவனுடைய நண்பர்கள் இந்த சூத்திரத்தை பயன்படுத்தினர். யோபுவின் பாவத்தை சந்தேகித்த எலிப்பாஸ், “சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ?” என்று கேட்கிறார் (யோபு 4:7). பில்தாத்தும், யோபுவின் குமாரர்கள் மரித்ததற்கு காரணம் அவர்களுடைய பாவமே என்று குற்றப்படுத்துகிறார் (8:4). யோபுவின் உபத்திரவத்திற்கான சரியான காரணத்தை அறிய முற்படாமல் (1:6-2:10), அவர்களுடைய இலகுவான சூத்திரங்களை வைத்து அவனை நியாயந்தீர்த்ததினால் தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு பாத்திரவான்களாகின்றனர் (42:7). 

அழியக்கூடிய இந்த உலகத்தில் உபத்திரவம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். யோபுவைப் போல அதை தேவன் ஏன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார் என்பதை ஒருவேளை நாம் அறியாமலிருக்கலாம். ஆனால் நீங்கள் அனுபவிக்கும் அந்த வலியைக் கடந்து தேவன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். இலகுவான சூத்திரங்களை நம்பி சோர்ந்துபோகாதீர்கள்.