தடைபட்ட திட்டங்கள்
பேச்சுக் குறைவைத் திருத்தும் பயிற்சியாளராக வேண்டுமென திட்டமிட்ட ஜேன், அதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படகூடியவள் என்பதால், பயிலும் போதுள்ள செயல்முறை பயிற்சியின் போது, தான் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவள் என்பதாக உணர்ந்தாள். பின்னர், அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதும் வாய்ப்பைப் பெற்றாள். அவள் தன்னை ஒரு எழுத்தாளராக நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகளை எழுதுபவராக மாறினார். “என்னுடைய வாழ்வை நான் பின்னோக்கிப் பார்க்கும் போது, என்னுடைய திட்டத்தை தேவன் ஏன் மாற்றினார் என்பதைக் காணமுடிகிறது, அவர் எனக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார்” என்றாள்.
தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்குறிப்பிடும் அநேக நிகழ்வுகளை வேதாகமத்தில், நாம் காணலாம். பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது, அவர் பித்தினியா நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல பிரயாசம் எடுத்தார், ஆனால் ஆவியானவரோ அவரை அங்கு போகத் தடை பண்ணினார் (அப். 16:6-7). இது நம்மை நிச்சயமாக திகைக்கச் செய்யும், ஏனெனில், தேவன் தந்த ஊழியத்தினிமித்தம் செய்யும் திட்டங்களை, ஏன் இயேசுவானவர் தடைசெய்ய வேண்டும்? அதற்கான பதிலை அவர் கனவில் பெற்றார், மக்கெதோனியாவினருக்கு அவருடைய உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஐரோப்பாவின் முதல் சபையை, பவுல் அங்கு தான் நிறுவினார். சாலமோன் இதனையே, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” என்று கூறியுள்ளார் (நீதி. 19:21).
நாம் நமக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான். “திட்டமிடத் தவறு; தவறுவதற்கு திட்டமிடுகின்றாய்” என்பது ஒரு பழமொழி. தேவன் தம்முடைய திட்டங்களை நம்மில் நிறைவேற்றும் படி, நம்முடைய திட்டங்களைத் தடை செய்யலாம். தேவன் மீது நம்பிக்கையுள்ள நாம், அவருடைய வார்த்தைகளை கவனித்து, அதற்குக் கீழ்படிய வேண்டும். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாவோம்.
நாம் நம்முடைய திட்டங்களைத் தொடரும் போது, அதில் ஒரு புதிய திருப்பத்தையும் சேர்த்துக் கொள்வோம், கவனிப்பதற்குத் திட்டமிடுவோம், தேவனுடைய திட்டத்தைக் கவனிப்போம்.
மின்சாரம் பாயும் கம்பி
“நான் மின்சாரம் பாயும் ஒரு கம்பியைத் தொட்டார் போல உணர்ந்தேன்” என்றாள் அந்தப் பேராசிரியர். அவள் ஆலயத்தில் இருந்த போது, முதன்முறையாக இயேசுவை ஏற்றுக் கொண்ட அநுபவத்தை விளக்கும் போது இவ்வாறு கூறினாள். இந்த இடத்தில் ஏதோவொன்று நடைபெறுகின்றது, என்றாள். இதுவே, அவளுக்குள் இருந்த கடவுள் நம்பிக்கையற்ற உலகப் பார்வையினூடே, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு வல்லமை இருக்கிறது என்ற சிந்தனையைக் கொடுத்தத் தருணம் என்று அவள் நினைத்துப் பார்க்கின்றாள். இறுதியில், உயிர்தெழுந்த கிறிஸ்துவின் மாற்றம் தரும் வல்லமையை நம்ப ஆரம்பிக்கின்றாள்.
இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றார், அங்கு இயேசு மறுரூபமானபோது, அதைகண்ட அந்த சீஷர்களுக்குள்ளும், உயிருள்ள மின்கம்பியைத் தொட்டது போல மின்சாரம் பாய்ந்தது. “அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல்…….. வெண்மையாய்ப் பிரகாசித்தது” (மாற்.9:3). அங்கு எலியாவும், மோசேயும் காணப்பட்டார்கள். இன்று நாம் மறுரூபமாதல் என்று அறிந்திருக்கின்ற அந்த நிகழ்வு நடைபெற்றது.
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களிடம், தான் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென கட்டளையிட்டார் (வ.9). “மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது” என்று இயேசு கூறியதின் கருத்து என்னவென்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள் (வச. 10).
இயேசுவின் சீஷர்கள் அவரைக் குறித்து முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கச் செய்தி. இயேசு வந்ததின் நோக்கத்தில், அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் அடங்கியிருக்கிறது என்பதையே அறியாதிருந்தார்கள். ஆனால், பின்பு உயிர்த்தெழுந்த தேவனோடு அவர்கள் பெற்ற அநுபவம், அவர்களின் வாழ்வை முற்றிலும் மாற்றியது. பிற்காலத்தில் பேதுரு, கிறிஸ்துவின் மறுரூபமாதலைக் கண்டோம் என சாட்சி பகருகின்றார், “அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்கள்” என்று தங்களைக் குறித்து விளக்குகின்றார் (2 பேது. 1:16).
பேராசிரியரும், சீஷர்களும் கற்றுக் கொண்டது போல, நாமும் இயேசுவின் வல்லமையைச் சந்திக்கும் போது, உயிருள்ள மின்கம்பியைத் தொட்டது போல உணர்வோம், நமக்குள் பாயும் ஏதோ ஒரு வல்லமையை உணர்வோம், ஜீவனுள்ள கிறிஸ்து நம்மை வழி நடத்துவார்.
முழுவதும் அறியப்பட்டிருக்கிறோம்
“நீ இங்கே இப்பொழுது இருக்கக் கூடாது, அங்கே மேலே ஒருவர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று அந்த பெரிய வண்டியின் ஓட்டுனர் என் தாயாரிடம் கூறினார், செங்குத்தான மலையின் விளிம்பில் ஒரு குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்ட என்னுடைய தாயாரின் காரைத் தன்னுடைய பெரிய வாகனத்தின் உதவியால் இழுத்த அந்த ஓட்டுனர், இந்த இடர்பாட்டுக்குள் இழுத்துச் சென்ற கார் டயரின் தடங்களை ஆய்வு செய்தபடியே இவ்வாறு கூறினார். என்னுடைய தாயார் அப்பொழுது என்னைத் தன் கருவில் சுமந்தவராய் இருந்தார். நான் வளர்ந்து வந்த போது, இந்தக் கதையை அவ்வப்போது எனக்கு கூறி, தேவன் அந்த நாளில் எங்கள் இருவரின் உயிரையும் எப்படி காப்பற்றினார் என அடிக்கடி நினைவு படுத்துவார். நான் பிறப்பதற்கு முன்பாகவே தேவன் என்னை கவனித்தார் என்பதை உறுதியாகக் கூறினார்.
எல்லாவற்றையும் அறிந்திருக்கிற நம்முடைய படைப்பின் கர்த்தாவின் கண்களுக்கு மறைவாக நம்மில் ஒருவரும் இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா தீர்க்கதரிசியிடம் தேவன், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரே.1:5) என்றார். வேறு எவரும் அறிந்திராத வண்ணம், தேவன் நம்மை மிக நுணுக்கமாக அறிந்துள்ளார். அவராலேயே நம் வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கொடுக்க முடியும். அவர் தம்முடைய வல்லமையாலும், ஞானத்தாலும் நம்மைப் படைத்ததுமல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்மைத் தாங்குகின்றார், நாம் அறியாமலே நமக்குள் ஏற்படுகின்ற ஒவ்வொரு தனிப்பட்ட அசைவையும் அவர் அறிவார், நம்முடைய இருதய துடிப்பு முதல் மூளையின் மிக நுணுக்கமான செயல்களையும் அவர் அறிவார். நாம் உயிரோடு இருப்பதற்கு காரணமான யாவற்றையும் தம் கரத்தில் வைத்துள்ள நம் பரலோகத் தந்தையின் வல்லமையை வியந்து, தாவீது, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்” (சங். 139:17) என்கின்றார்.
நம்முடைய மூச்சைக் காட்டிலும் மிக அருகில் இருப்பவர் நம் தேவன். அவரே நம்மைப் படைத்தார், நம்மை அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார், நாம் ஆராதிக்கவும், போற்றவும் தகுந்தவரும் அவரே.
விட்டு விடும்படி அழைப்பு
ஓர் இளம்பெண்ணான நான், நல்ல வேலையில் அமர்வேன், திருமணம் முடித்துக் கொள்வேன் என கற்பனை செய்திருந்தேன், ஆனால் என்னுடைய முப்பதாவது வயது வரை அது நடைபெறவில்லை. என்னுடைய எதிர்காலம் வெறுமையாக என் கண் முன்னே காட்சியளித்தது. வாழ்வில் என்ன செய்வதெனத்தெரியாமல், நான் போராடிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பிறருக்குப் பணி செய்வதன் மூலம், தேவனுக்குப் பணிசெய்யும் படி, அவர் வழிகாட்டியதை உணர்ந்தேன், வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தேன். என்னில் வேர் விட்டிருந்த யாவற்றையும், நண்பர்களையும், குடும்பத்தையும் தள்ளிவிட்டு, எனக்குள்ளே உண்மை ஊடுருவ ஆரம்பித்தது. தேவனுடைய அழைப்பிற்கு செவிகொடுக்கும்படி, எல்லாவற்றையும் நான் விட வேண்டியதாகிவிட்டது.
கலிலேயா கடற்கரையோரமாக இயேசு நடந்து சென்று கொண்டிருந்த போது, பேதுருவும் அவனுடைய சகோதரனாகிய அந்திரேயாவும் தங்கள் வாழ்வினை நடத்தும்படி மீன்களைப் பிடிக்க கடலில் வலைகளை வீசிக் கொண்டிருப்பதைக் கண்டார். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மத். 4:19) என்று அழைக்கிறார். இயேசு மேலும் இரண்டு மீனவர்கள் யாக்கோபு மற்றும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் பார்த்து, இத்தகைய ஓர் அழைப்பை அவர்களுக்கும் கொடுத்தார் (வச. 21).
இந்த சீஷர்களும் இயேசுவிடம் வந்த போது, சிலவற்றை விட்டு வந்தனர். பேதுருவும் அந்திரேயாவும் “வலைகளை விட்டு” (வச. 20) விட்டனர், யாக்கோபும் யோவானும் “படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்” (வச. 22). “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்” என்பதாக லூக்கா எழுதுகின்றார் (லூக். 5:11).
இயேசு நம்மை அழைக்கும் போது, சிலவற்றை விட்டு வரும்படியாக நம்மையும் அழைக்கின்றார். வலைகள், படவு, தந்தை, நண்பர்கள், வீடு என்று பலவற்றை விட்டு விட்டு, நாம் அவரோடு உறவாடும்படி அழைப்பைப் பெறுகின்றோம், அவரோடு கூட பணி செய்யும்படியாக அழைக்கப்படுகின்றோம்.
இலக்கும் நோக்கமும்
2018 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த, விளையாட்டு வீரரான காலின் ஓ பிராடி, இதுவரை நடைபெறாத ஒரு வகை நடையை மேற்கொண்டார். அவர் அனுதின தேவைக்கான பொருட்கள் அடங்கிய வண்டியை இழுத்துக் கொண்டே நடந்தார், இவ்வாறு, ஓ பிராடி அண்டார்டிகா பகுதி முழுவதும் தனியாக, 932 மைல்களை 54 நாட்களில் கடந்தார். அது ஒரு மறக்க முடியாத, அர்ப்பணமும், தைரியமும் உடைய பிரயாணமாக இருந்தது.
பனியிலும் குளிரிலும் தனிமையாக சோர்வடையச் செய்யும் நீண்ட தூரத்தை நடந்த அனுபவத்தைப் பற்றி, ஓ பிராடி கூறும் போது, “நான் ஆழ்ந்த முயற்சிக்குள் இழுக்கப்பட்டேன், முழு நேரமும் என்னுடைய கவனம் இலக்கின் முடிவையே நோக்கியிருந்தது, என்னுடைய சிந்தனை முழுவதையும் இந்த பிரயாணத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த அனுபவங்களையே நினைத்துக்கொள்ள அனுமதித்தேன்” என்றார்.
இயேசுவின் விசுவாசிகளாகிய நாமும் கைக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றினை இவ்வாக்கியம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தேவனை மகிமைப் படுத்துபவர்களாகவும், மற்றவர்களுக்கு தேவனை வெளிப்படுத்துபவர்களாகவும் வாழ வேண்டும் என்பதையே இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆபத்து நிறைந்த பாதை வழியே பயணிக்கும் பவுல், “என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” என அப்போஸ்தலர் 20:24ல் குறிப்பிடுகின்றார்.
நாம் இயேசுவோடுள்ள உறவில், நாம் அவரோடு நடக்கும் போது, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்வோமாக, ஒரு நாள் நம்முடைய இரட்சகரை முகமுகமாய் சந்திப்போம் என்பதைக் கருத்தில் கொண்டவர்களாய் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.