“நீ இங்கே இப்பொழுது இருக்கக் கூடாது, அங்கே மேலே ஒருவர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று அந்த பெரிய வண்டியின் ஓட்டுனர் என் தாயாரிடம் கூறினார், செங்குத்தான மலையின் விளிம்பில் ஒரு குறுகிய இடுக்கில் சிக்கிக் கொண்ட என்னுடைய தாயாரின் காரைத் தன்னுடைய பெரிய வாகனத்தின் உதவியால் இழுத்த அந்த ஓட்டுனர், இந்த இடர்பாட்டுக்குள் இழுத்துச் சென்ற கார் டயரின் தடங்களை ஆய்வு செய்தபடியே இவ்வாறு கூறினார். என்னுடைய தாயார் அப்பொழுது என்னைத் தன் கருவில் சுமந்தவராய் இருந்தார். நான் வளர்ந்து வந்த போது, இந்தக் கதையை அவ்வப்போது எனக்கு கூறி, தேவன் அந்த நாளில் எங்கள் இருவரின் உயிரையும் எப்படி காப்பற்றினார் என அடிக்கடி நினைவு படுத்துவார். நான் பிறப்பதற்கு முன்பாகவே தேவன் என்னை கவனித்தார் என்பதை உறுதியாகக் கூறினார்.

எல்லாவற்றையும் அறிந்திருக்கிற நம்முடைய படைப்பின் கர்த்தாவின் கண்களுக்கு மறைவாக நம்மில் ஒருவரும் இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா தீர்க்கதரிசியிடம் தேவன், “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்” (எரே.1:5) என்றார். வேறு எவரும் அறிந்திராத வண்ணம், தேவன் நம்மை மிக நுணுக்கமாக அறிந்துள்ளார். அவராலேயே நம் வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும், அர்த்தத்தையும் கொடுக்க முடியும். அவர் தம்முடைய வல்லமையாலும், ஞானத்தாலும் நம்மைப் படைத்ததுமல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்மைத் தாங்குகின்றார், நாம் அறியாமலே நமக்குள் ஏற்படுகின்ற ஒவ்வொரு தனிப்பட்ட அசைவையும் அவர் அறிவார், நம்முடைய இருதய துடிப்பு முதல் மூளையின் மிக நுணுக்கமான செயல்களையும் அவர் அறிவார். நாம் உயிரோடு இருப்பதற்கு காரணமான யாவற்றையும் தம் கரத்தில் வைத்துள்ள நம் பரலோகத் தந்தையின் வல்லமையை வியந்து, தாவீது, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்” (சங். 139:17) என்கின்றார்.

நம்முடைய மூச்சைக் காட்டிலும் மிக அருகில் இருப்பவர் நம் தேவன். அவரே நம்மைப் படைத்தார், நம்மை அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார், நாம் ஆராதிக்கவும், போற்றவும் தகுந்தவரும் அவரே.