Archives: பிப்ரவரி 2020

ரகசியம்

சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.

எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை. 

திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.

இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.      

நிலைத்திருக்கும் விசுவாசம்

எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.

அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).

பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

எதிர்பாராத மாற்றம்

1943 ஆம் ஆண்டு, தெற்கு டக்கோட்டாவிலுள்ள ஸ்பியர்ஃபிஷ் என்ற இடத்தை வறண்ட காற்று தாக்கிய போது, அங்கு வெப்பநிலை,-4F இருந்து 45F (-20 டிகிரி C இருந்து 7டிகிரி C) ஆக உயர்ந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம், 49 டிகிரி வெப்பநிலை உயர்வு இரண்டே நிமிடங்களில் ஏற்பட்டது. இந்த பயங்கர வெப்பநிலை மாற்றம், அடுத்த 24 மணி நேரங்களில் வியத்தகு வகையில் 103 டிகிரிகள் உயர்ந்தது என அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது! 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள், லோமா, மான்டனா ஆகியோர் அவ்விடங்களில் வெப்பநிலை -54 டிகிரியிலிருந்து 49 டிகிரி ஃபாரன்கீட் (-48 டிகிரியிலிருந்து 9 டிகிரி செல்ஸியஸ்) ஆக உயர்ந்தது எனக் கண்டனர்.

இவ்வாறு ஏற்படும் திடீர் மாற்றங்கள் வெறுமனே வானிலையில் மட்டும் நிகழ்வன அல்ல, சில வேளைகளில் வாழ்க்கையையே மாற்றுகின்றன. இப்படியிருக்க, “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள், நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” (4:13-14) என்று யாக்கோபு நினைவுபடுத்துகின்றார். எதிர்பாராத நஷ்டம், வியப்பூட்டும் மருத்துவ அறிக்கை, பொருளாதார திருப்பங்கள் என்பதைப் போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படலாமே.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அநேக எதிர்பாராத காரியங்கள் நிகழலாம். இதனாலேயே, ஆண்டவருடைய சித்தத்தை எண்ணத்தில் கொள்ளாத “வீம்பு காரியங்களை” விட்டுத் திரும்புங்கள் (வச. 16) என்று யாக்கோபு கூறுகின்றார். அவர் நமக்குத் தரும் ஆலோசனையின் படி, “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (வச. 15) என்கின்றார். நம் வாழ்வின் காரியங்களெல்லாம் உறுதியற்றவை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நம் வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளின் மத்தியில், நம்முடைய தேவன் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை, நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே.

மகிழ்ச்சிதரும் எண்ணங்கள்

What We Keep (வாட் வி கீப்) என்பதில் பில் ஷாப்பிரோ என்பவரின் நேர்முகத் தேர்வுகளைப் பற்றிய தொகுப்பு உள்ளது. இதில் வரும் ஒவ்வொரு நபரும், என்றும் மறக்க முடியாததும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ள முக்கியமான அநுபவங்களைக் கூறுகின்றனர்.

இது, என்னுடைய அநுபவத்திலும், நான் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதும் காரியங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவைகளில் ஒன்று, நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய, என்னுடைய தாயார் கைப்பட எழுதிய, சமையல் குறிப்பு அடங்கிய ஓர் அட்டை, மற்றொன்று, என்னுடைய பாட்டியம்மாவின் இளம்சிவப்பு நிற காப்பி கோப்பைகள். சிலர் தங்கள் நினைவில் சில காரியங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திய வார்த்தைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பு அல்லது வேதாகம வார்த்தைகள் வெளிப்படுத்தின சில உட்கருத்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்.

நாம் நம்முடைய இருதயத்திற்குள் எவற்றைத் தேக்கி வைத்துள்ளோம்?  நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியற்ற கணங்களையா: பதட்டம் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது, அது எந்த வேளையும் வெளிப்படலாம், கோபம் மேலாக இருக்கிறது, அது தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறது, மனக் கசப்புகள் அமைதியாக இருதயத்திற்குள் இருந்து, நமது சிந்தனைகளை அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி சபை மக்களுக்கு நேர்மையான “சிந்தனைகளைக்” குறித்து எழுதுகின்றார். அவர் அந்த மக்களிடம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாரிடமும் சாந்த குணத்தைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று கூறி உற்சாகப் படுத்துகின்றார் (பிலி. 4:4-9).

நாம் எவற்றைச் சிந்திக்க வேண்டும் என்று பவுல் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், நமக்குள்ளேயுள்ள இருளின் சிந்தைகளை அகற்றி, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் (வச. 7). நம்முடைய சிந்தைகளை உண்மை, உயர்ந்த எண்ணங்கள், நேர்மை, தூய்மை, அன்பு நிறைந்த, நேசிக்க கூடிய, போற்றக் கூடிய எண்ணங்களால் நிரப்புவோமேயானால், அவர் தரும் சமாதானம் நம்முடைய இருதயங்களை நிரப்பும் (வச. 8).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு

மிகவும் சிரமப்பட்டு, மருத்துவ மாணவியான கிருபா, ஒரு கிராமத்தைச் சேர்ந்த சூம்பின விரல்களுடைய ஒரு மூதாட்டியை மருத்துவ முகாமுக்கு வரும்படி சம்மதிக்க வைத்தாள். அங்கு ஒரு மூத்த மருத்துவர் அவளைப் பார்த்து, சில மருந்துகளைக் கொடுத்தனுப்பினார். அவள் பின்னர் கிருபாவைத் தனியாக அழைத்து, “அவர்களுடைய குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் ஏதாவது செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

சீரடைவதற்கான நம்பிக்கை மருத்துவத்தில் எப்போதும் இல்லை என்ற கசப்பான உண்மையை கிருபா படித்துக்கொண்டாள். ஆனால் இந்த நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவகிருபையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆவிக்குரிய நோயின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இஸ்ரவேல் இருந்தபோது, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுவதால் இஸ்ரவேல் அழிக்கப்படும் என்றும், ஜனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள் என்றும் கூறினார் (வ.12). கிமு 722 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவுக்கு சிறைப்பட்டுப் போனபோது ஆமோஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (2 இராஜாக்கள் 17:6). இருப்பினும், ஆமோஸ் அழிவை முன்னறிவித்தபோது, அவர் நம்பிக்கையையும் அளித்தார். “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.6) என்றார். எப்படி என்பதை விளக்க, “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” (வ.15) என்றார். அவர்கள் இதைச் செய்தால், அவர்கள் பிழைப்பார்கள், தேவனின் பிரசன்னம் மற்றும் இரக்கத்தை அனுபவிப்பர் என்று ஆமோஸ் கூறினார் (வ.15-16).

ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்வது போல், நாமும் தேவனைச் சார்ந்து, அவரைத் தேடி, நன்மை செய்வோம், அதனால் நாமும் அவருடைய நன்மையை அனுபவிப்போம். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நன்மை செய்யும்போது, நம்முடைய மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைக் கூட அவர் அற்புதமாக மாற்றுவார் (ஆதியாகமம் 50:20). உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நினைவில் கொள்ளுங்கள்: தேவனில் இன்னும் நம்பிக்கை உண்டு.

 

தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்

நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் “அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை” என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் “மகிழ்ச்சி” என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.

107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). “கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு” “அப்படிச் சொல்லக்கடவர்கள்” (வ. 2 ,3), “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று” (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.

கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார். 

 

கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

சந்தோஷ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை சந்தோஷ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, “உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?” என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, “நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்” என்றார். சந்தோஷின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.

நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே சந்தோஷ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).

நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும்.