What We Keep (வாட் வி கீப்) என்பதில் பில் ஷாப்பிரோ என்பவரின் நேர்முகத் தேர்வுகளைப் பற்றிய தொகுப்பு உள்ளது. இதில் வரும் ஒவ்வொரு நபரும், என்றும் மறக்க முடியாததும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ள முக்கியமான அநுபவங்களைக் கூறுகின்றனர்.

இது, என்னுடைய அநுபவத்திலும், நான் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதும் காரியங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவைகளில் ஒன்று, நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய, என்னுடைய தாயார் கைப்பட எழுதிய, சமையல் குறிப்பு அடங்கிய ஓர் அட்டை, மற்றொன்று, என்னுடைய பாட்டியம்மாவின் இளம்சிவப்பு நிற காப்பி கோப்பைகள். சிலர் தங்கள் நினைவில் சில காரியங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திய வார்த்தைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பு அல்லது வேதாகம வார்த்தைகள் வெளிப்படுத்தின சில உட்கருத்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்.

நாம் நம்முடைய இருதயத்திற்குள் எவற்றைத் தேக்கி வைத்துள்ளோம்?  நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியற்ற கணங்களையா: பதட்டம் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது, அது எந்த வேளையும் வெளிப்படலாம், கோபம் மேலாக இருக்கிறது, அது தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறது, மனக் கசப்புகள் அமைதியாக இருதயத்திற்குள் இருந்து, நமது சிந்தனைகளை அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி சபை மக்களுக்கு நேர்மையான “சிந்தனைகளைக்” குறித்து எழுதுகின்றார். அவர் அந்த மக்களிடம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாரிடமும் சாந்த குணத்தைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று கூறி உற்சாகப் படுத்துகின்றார் (பிலி. 4:4-9).

நாம் எவற்றைச் சிந்திக்க வேண்டும் என்று பவுல் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், நமக்குள்ளேயுள்ள இருளின் சிந்தைகளை அகற்றி, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் (வச. 7). நம்முடைய சிந்தைகளை உண்மை, உயர்ந்த எண்ணங்கள், நேர்மை, தூய்மை, அன்பு நிறைந்த, நேசிக்க கூடிய, போற்றக் கூடிய எண்ணங்களால் நிரப்புவோமேயானால், அவர் தரும் சமாதானம் நம்முடைய இருதயங்களை நிரப்பும் (வச. 8).