“நான் மின்சாரம் பாயும் ஒரு கம்பியைத் தொட்டார் போல உணர்ந்தேன்” என்றாள் அந்தப் பேராசிரியர். அவள் ஆலயத்தில் இருந்த போது, முதன்முறையாக இயேசுவை ஏற்றுக் கொண்ட அநுபவத்தை விளக்கும் போது இவ்வாறு கூறினாள். இந்த இடத்தில் ஏதோவொன்று நடைபெறுகின்றது, என்றாள். இதுவே, அவளுக்குள் இருந்த கடவுள் நம்பிக்கையற்ற உலகப் பார்வையினூடே, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு வல்லமை இருக்கிறது என்ற சிந்தனையைக் கொடுத்தத் தருணம் என்று அவள் நினைத்துப் பார்க்கின்றாள். இறுதியில், உயிர்தெழுந்த கிறிஸ்துவின் மாற்றம் தரும் வல்லமையை நம்ப ஆரம்பிக்கின்றாள்.

இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றார், அங்கு இயேசு மறுரூபமானபோது, அதைகண்ட அந்த சீஷர்களுக்குள்ளும், உயிருள்ள மின்கம்பியைத் தொட்டது போல மின்சாரம் பாய்ந்தது. “அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல்…….. வெண்மையாய்ப் பிரகாசித்தது” (மாற்.9:3). அங்கு எலியாவும், மோசேயும் காணப்பட்டார்கள். இன்று நாம் மறுரூபமாதல் என்று அறிந்திருக்கின்ற அந்த நிகழ்வு நடைபெற்றது.

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களிடம், தான் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென கட்டளையிட்டார் (வ.9). “மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது” என்று இயேசு கூறியதின் கருத்து என்னவென்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள் (வச. 10). 

இயேசுவின் சீஷர்கள் அவரைக் குறித்து முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கச் செய்தி. இயேசு வந்ததின் நோக்கத்தில், அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் அடங்கியிருக்கிறது என்பதையே அறியாதிருந்தார்கள். ஆனால், பின்பு உயிர்த்தெழுந்த தேவனோடு அவர்கள் பெற்ற அநுபவம், அவர்களின் வாழ்வை முற்றிலும் மாற்றியது. பிற்காலத்தில் பேதுரு, கிறிஸ்துவின் மறுரூபமாதலைக் கண்டோம் என சாட்சி பகருகின்றார், “அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்கள்” என்று தங்களைக் குறித்து விளக்குகின்றார் (2 பேது. 1:16).

பேராசிரியரும், சீஷர்களும் கற்றுக் கொண்டது போல, நாமும் இயேசுவின் வல்லமையைச் சந்திக்கும் போது, உயிருள்ள மின்கம்பியைத் தொட்டது போல உணர்வோம், நமக்குள் பாயும் ஏதோ ஒரு வல்லமையை உணர்வோம், ஜீவனுள்ள கிறிஸ்து நம்மை வழி நடத்துவார்.