அன்றாடப் பணிகளில் அலுப்பா?
நேராக நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தண்டுகளை/பின்களை பெரிய பந்தை உருட்டி, குறிபார்த்து அடிக்கும் விளையாட்டை ஆங்கிலத்தில் பொளலிங் என்பார்கள். அவ்வாறு அந்தத் தண்டுகளை ஒரு பந்து அடிப்பதுபோல என் தோழியான எரின் தன் கணுக்காலில் பச்சை குத்தியிருந்தாள். “தண்டுகளை நேராக வையுங்கள்” என்கிற அர்த்தமுடைய சாரா குரூவ்ஸின் பாடலைக் கேட்டபிறகுதான் அவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ள அவளுக்கு எண்ணம் வந்ததாம். தண்டுகளை பந்து அடித்தபிறகு, அவற்றை மீண்டும் நேரே வைக்கவேண்டும், அடுத்து யாராவது அடிப்பார்கள், மீண்டும் நேராக வைக்கவேண்டும். அதுபோலத்தான் அன்றாட பணிகளும் இருக்கின்றன; சிலசமயங்களில் அவற்றைச் செய்வது அர்த்தமற்றது போலக்கூடத் தோன்றும். அத்தகைய பணிகளைச் செய்வதில் சந்தோஷங்கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டுகிற பாடல் அது.
துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகள் ஒரு நாள் முடிந்து, மறுநாளும் ஆரம்பிக்க வேண்டியவை. இது புதிதல்ல, எப்போதும் இருப்பதுதான். பழைய ஏற்பாட்டில் பிரசங்கி என்கிற புத்தகத்திலும் அதுபற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் அன்றாட பணிகளை மீண்டும் மீண்டும் செய்வதில் என்னதான் பயனிருக்கிறது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் அலுத்துக்கொள்கிறார். பிர 1:2-3. சில சமயங்களில் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றுகிறதாம். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்.” வசனம் 9.
ஆனால் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது” அப்பணிகள் அர்த்த முள்ளவையாக மாறுவதாகவும், சந்தோஷ உணர்வு கிடைப்பதாகவும் அதன் ஆசிரியர் கூறுகிறார். பிர 12:13. வாழ்க்கையின் அன்றாட பணிகளை தேவன் உயர்வாகப் போற்றுகிறார், அவற்றை உண்மை யோடு செய்பவர்களுக்கு பலனளிக்கிறார். வச 14. இதை உணரும்போது ஆறுதல் உண்டாகிறது.
நீங்கள் மீண்டும் மீண்டும் நேரே நிறுத்தவேண்டிய “தண்டுகள்”/பின்கள் யாவை? அத்தகைய வழக்கமான வேலைகளைச் செய்வது களைப்பாகத் தோன்றும்போது, தேவனுக்கான அன்பின் பணிகளாக அவற்றைச் சமர்ப்பித்து, செய்துபாருங்களேன்!
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்
“உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!” என்று சொன்னார் திருமதி வெப் அவர்கள். வாரத்தின் மத்திய நாள் ஒன்றில் ஆராதனைக்காகக் கூடியிருந்தோம். அப்போது அதற்கு முந்தின நாள் இரவில் தெரிந்த பௌர்ணமி நிலவு பற்றிப் பேச்சு எழுந்தது. பேசிக்கொண்டிருந்தவர்களில் மிகவும் மூத்தவர்தான் திருமதி வெப் அவர்கள். தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை எண்ணி எப்போதும் பிரமிப்பவர். என் மனைவிக்கு நன்றாகப் பழக்கமானவர். அப்போது நான் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். பிள்ளை வளர்ப்புக்கு அவர் வழங்கிய மிகமுக்கிய ஆலோசனை அது. உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!
அருமையான சங்கீதங்களை எழுத அனைத்து தகுதிகளையும் பெற்றவர் திருமதி வெப் அவர்கள். அந்த அளவுக்கு இயற்கையை ஆராயக்கூடியவர். வானசேனைகள் பற்றி தாவீது விவரிப்பதிலும் அந்த அளவு ஆழத்தைக் காணலாம். “அவைகளுக்குப் பேச்சுமில்லை . . . ஆகிலும் அவைகளின் வசனங்கள் பூமியெங்கும், அவைகளின் சத்தம் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என்று சொல்லுகிறார். சங்கீதம் 19:3-4. அதற்காக தாவீதோ, திருமதி வெப் அவர்களோ சந்திரனை அல்லது நட்சத்திரங்களை வணங்குகிறவர்கள் கிடையாது. மாறாக, அவற்றைச் சிருஷ்டித்தவரை வணங்குகிறவர்கள். வானங்களும் ஆகாயவிரிவும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன. வசனம் 1.
பிள்ளைகள், வாலிபர்கள், கணவன்-மனைவியர், அக்கம்பக்கத்தார் என நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களிடம், தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்துகிறவற்றைப் பார்க்கச் சொல்லலாம், அவருடைய மகிமையை அறிவிக்கிறவற்றைக் கேட்கச் சொல்லலாம். அவருடைய கரத்தின் கிரியைகளைக் கவனிக்கும்போது, சிருஷ்டிகராகிய அவரை பயபக்தியுடன் தொழுதுகொள்ள வழிநடத்தப்படுவோம். அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
பூத்துக்குலுங்கும் பாலைவனம்
எல்லா பாலைவனங்களையும் போல மணல் மேடுகள், வறண்ட பள்ளத்தாக்குகள், செங்குத்தான மேடுகள், பெரும்பாலும் வறண்ட பகுதிகளையுடைய மலைகள் ஆகியவை உள்ளடங்கியதுதான் மொகாவி பாலைவனம். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை அங்கு அதிகளவு மழைபெய்து, “ஒவ்வோர் அடி மணலையும் அல்லது சரள் பரப்பையும் பூத்துக்குலுங்கச்செய்கிறது” என்று சொல்கிறார் அமெரிக்க உயிரியல் அறிஞரான எட்மன்ட் ஜேகர். மொ ஜேவ் மலர்கள் பூத்துக்குலுங்குவதை ஒவ்வொரு வருடமும் பார்க்கமுடியாது. வறண்ட அந்த நிலப்பகுகுதியானது சரியான காலச்சூழலில் பெலமான சூறாவளியால் ஈரமாகி, சூரியவெளிச்சத்தில் காய்ந்தால்தான் அந்தப் பாலைவனம் பூத்துக்குலுங்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வறண்ட அந்தப் பகுதியையும்கூட தேவன் பசுமையாக்குகிறார். இந்தக் காட்சியானது ஏசாயா தீர்க்கதரிசியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. தேசங்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் கூறுகிறார் ஏசாயா 35. எல்லாவற்றையும் தேவன் சரிசெய்கிற காலம் வருகிறது என்று சொல்லிவிட்டு, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்” என்கிறார். வசனம் 1. தேவனால் மீட்கப்பட்டவர்கள் “ஆனந்தக் களிப்புடன் பாடி” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்றும், “நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” என்றும் சொல்கிறார். வசனம் 10.
நம்முடைய நித்திய வாழ்க்கை பற்றி தேவனுடைய வாக்குறுதிகளில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கையில் வறட்சியும் ஏற்படலாம், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம், ஆனாலும் நாம் தேவனை நம்பலாம். அவருடைய அன்பில் வேரூன்றியிருந்தால் நாம் அவருடைய சாயலுக்கொப்பாக பூத்துக்குலுங்குகிற சமயம் வருமட்டும் வளர்ந்துகொண்டே இருக்கலாம். அந்தச் சமயம் வரும்போது இயேசு வந்து, எல்லாவற்றையும் சரிசெய்வார்.
பொக்கிஷ வேட்டை
மேரியும் ஜானும் தங்களுடைய நாயைக் கூட்டிக்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சமீபத்தில் பெய்திருந்த மழையில் மண் கரைந்திருந்ததால், உள்ளே புதைந்திருந்த துருப்பிடித்த தகர டப்பா ஒன்று ஓரிடத்தில் வெளியே தெரிந்தது. அந்த டப்பாவை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு நூற்றாண்டு பழைமை வாய்ந்த சில தங்க நாணயங்கள் உள்ளே இருந்தன! அந்தத் தம்பதியர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து தேடிப்பார்த்தபோது அதேபோல ஏழு டப்பாக்களை எடுத்தார்கள். அவற்றில் மொத்தம் 1,427 தங்க நாணயங்கள் இருந்தன. பிறகு, அவற்றையெல்லாம் வெவ்வேறு இடங்களில் மீண்டும் புதைத்துவைத்துப் பாதுகாத்தார்களாம்.
சேடில் ரிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) என்று அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷ வேட்டையாக அது கருதப்படுகிறது. அந்த தங்க நாணயங்களின் மதிப்பு 10 மில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சொன்ன உவமை ஒன்றை இந்தச் சம்பவம் அதிகமாக நினைவூட்டுகிறது. “பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:44.
பொக்கிஷ வேட்டைகள் குறித்த கற்பனை கதைகளுக்கும் பஞ்சமில்லை; ஆனால் உண்மையிலேயே அப்படி நடப்பது அபூர்வம்தான். ஆனால் இயேசு சொல்கிற பொக்கிஷத்தை எல்லாருமே பெறலாம். அதற்கு அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். யோவான் 1:12.
அந்தப் பொக்கிஷம் அள்ள அள்ள குறையாதது. நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை விட்டு, தேவனையும் அவருடைய நோக்கங்களையும் நாடும்போது, அவர் எவ்வளவு விலையேறப் பெற்றவர் என்பதைக் காணலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்” மூலமாக, நம் கற்பனைக்கும் எட்டாத பொக்கிஷங்களைத் தருகிறார். எபே 2:6. அவருடைய மகன்களும் மகள்களுமாக நாம் புதுவாழ்வைப் பெறுவதும், வாழ்க்கையில் புதிய நோக்கங்களைக் கண்டுகொள்வதும், அவரோடு நித்தியத்தில் வாழும் மகிழ்ச்சியைப் பெறுவதும் அந்தப் பொக்கிஷத்தில் அடங்கும்.
ஓய்வாக இருக்கலாமா?
சிகிச்சைக்காக உடற்பயிற்சி நிபுணரைச் சந்தித்தார் டார்னெல். விபத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் குணமடைந்திருந்தார். எனவே, உடற்பயிற்சி நிபுணர் கொடுக்கும் பயிற்சிகளின்போது அதிகமாக வலிக்கும் என்பது சந்தேகமின்றி தெரிந்தது. பலநாட்களாக நீட்டி, மடக்காதிருந்த பகுதிகளை நிபுணர் நீட்டி, மடக்கிவிட்டு, “இப்போது ஓய்வு எடுங்கள்” என்று சொன்னார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது, குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது “சரி, இப்போது ஓய்வு எடுங்கள்” என்று நிபுணர் சொல்லியிருப்பாரென்று கூறினார்.
தன்னுடைய மொத்த வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைகள் பொருந்தக்கூடியவை என்று டார்னெல் கூறுகிறார். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவன் நல்லவர், உண்மையுள்ளவர் என்பதை உணரும்போது அவரால் ஓய்வு எடுக்க முடிந்ததாம்.
சிலுவை மரணம் நெருங்கியிருந்த நிலையில், தம்முடைய சீடர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென இயேசு உணர்ந்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீடர்கள் பல உபத்திரவங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்து, அவர்களோடு வாசம்பண்ணவும், தாம் போதித்ததை அவர்களுக்கு நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகச் சொல்லி, இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார் (யோவா. 14:26). “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; ... உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” என்றும் சொன்னார் (வச. 27).
நம் அனுதின வாழ்வில் நமக்கு இக்கட்டுகளை ஏற்படுத்துகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் தேவனை அதிகமாக நம்பவேண்டும். அப்போது தம்முடைய ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்வதையும், அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளுவதையும் அவர் நமக்கு நினைவூட்டுவார். தேவனிடமிருந்து நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உடற்பயிற்சி நிபுணர் சொன்னதுபோல “சரி, இப்போது நீ ஓய்வு எடுக்கலாம்” என்று அவர் சொல்வதை நாம் கேட்கலாம்.