“உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!” என்று சொன்னார் திருமதி வெப் அவர்கள். வாரத்தின் மத்திய நாள் ஒன்றில் ஆராதனைக்காகக் கூடியிருந்தோம். அப்போது அதற்கு முந்தின நாள் இரவில் தெரிந்த பௌர்ணமி நிலவு பற்றிப் பேச்சு எழுந்தது. பேசிக்கொண்டிருந்தவர்களில் மிகவும் மூத்தவர்தான் திருமதி வெப் அவர்கள். தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை எண்ணி எப்போதும் பிரமிப்பவர். என் மனைவிக்கு நன்றாகப் பழக்கமானவர். அப்போது நான் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். பிள்ளை வளர்ப்புக்கு அவர் வழங்கிய மிகமுக்கிய ஆலோசனை அது.  உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!

அருமையான சங்கீதங்களை எழுத அனைத்து தகுதிகளையும் பெற்றவர் திருமதி வெப் அவர்கள். அந்த அளவுக்கு இயற்கையை ஆராயக்கூடியவர். வானசேனைகள் பற்றி தாவீது விவரிப்பதிலும் அந்த அளவு ஆழத்தைக் காணலாம். “அவைகளுக்குப் பேச்சுமில்லை . . . ஆகிலும் அவைகளின் வசனங்கள் பூமியெங்கும், அவைகளின் சத்தம் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என்று சொல்லுகிறார். சங்கீதம் 19:3-4. அதற்காக தாவீதோ, திருமதி வெப் அவர்களோ சந்திரனை அல்லது நட்சத்திரங்களை வணங்குகிறவர்கள் கிடையாது. மாறாக, அவற்றைச் சிருஷ்டித்தவரை வணங்குகிறவர்கள். வானங்களும் ஆகாயவிரிவும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன. வசனம் 1.

பிள்ளைகள், வாலிபர்கள், கணவன்-மனைவியர், அக்கம்பக்கத்தார் என நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களிடம், தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்துகிறவற்றைப் பார்க்கச் சொல்லலாம், அவருடைய மகிமையை அறிவிக்கிறவற்றைக் கேட்கச் சொல்லலாம். அவருடைய கரத்தின் கிரியைகளைக் கவனிக்கும்போது, சிருஷ்டிகராகிய அவரை பயபக்தியுடன் தொழுதுகொள்ள வழிநடத்தப்படுவோம். அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.