நேராக நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தண்டுகளை/பின்களை பெரிய பந்தை உருட்டி, குறிபார்த்து அடிக்கும் விளையாட்டை ஆங்கிலத்தில் பொளலிங் என்பார்கள். அவ்வாறு அந்தத் தண்டுகளை ஒரு பந்து அடிப்பதுபோல என் தோழியான எரின் தன் கணுக்காலில் பச்சை குத்தியிருந்தாள். “தண்டுகளை நேராக வையுங்கள்” என்கிற அர்த்தமுடைய சாரா குரூவ்ஸின் பாடலைக் கேட்டபிறகுதான் அவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ள அவளுக்கு எண்ணம் வந்ததாம். தண்டுகளை பந்து அடித்தபிறகு, அவற்றை மீண்டும் நேரே வைக்கவேண்டும், அடுத்து யாராவது அடிப்பார்கள், மீண்டும் நேராக வைக்கவேண்டும். அதுபோலத்தான் அன்றாட பணிகளும் இருக்கின்றன; சிலசமயங்களில் அவற்றைச் செய்வது அர்த்தமற்றது போலக்கூடத் தோன்றும். அத்தகைய பணிகளைச் செய்வதில் சந்தோஷங்கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டுகிற பாடல் அது.

துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகள் ஒரு நாள் முடிந்து, மறுநாளும் ஆரம்பிக்க வேண்டியவை. இது புதிதல்ல, எப்போதும் இருப்பதுதான். பழைய ஏற்பாட்டில் பிரசங்கி என்கிற புத்தகத்திலும் அதுபற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் அன்றாட பணிகளை மீண்டும் மீண்டும் செய்வதில் என்னதான் பயனிருக்கிறது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் அலுத்துக்கொள்கிறார். பிர 1:2-3. சில சமயங்களில் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றுகிறதாம். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்.” வசனம் 9.

ஆனால் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது” அப்பணிகள் அர்த்த முள்ளவையாக மாறுவதாகவும், சந்தோஷ உணர்வு கிடைப்பதாகவும் அதன் ஆசிரியர் கூறுகிறார். பிர 12:13. வாழ்க்கையின் அன்றாட பணிகளை தேவன் உயர்வாகப் போற்றுகிறார், அவற்றை உண்மை யோடு செய்பவர்களுக்கு பலனளிக்கிறார். வச 14. இதை உணரும்போது ஆறுதல் உண்டாகிறது.

நீங்கள் மீண்டும் மீண்டும் நேரே நிறுத்தவேண்டிய “தண்டுகள்”/பின்கள் யாவை? அத்தகைய வழக்கமான வேலைகளைச் செய்வது களைப்பாகத் தோன்றும்போது, தேவனுக்கான  அன்பின் பணிகளாக அவற்றைச் சமர்ப்பித்து, செய்துபாருங்களேன்!