அபி அப்போது உயர்நிலைபள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள். விமான விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஒரு வாலிபனை பற்றி அபியும் அவளுடைய அம்மாவும் கேள்விப்பட்டார்கள். விபத்தில் தன் அப்பாவையும் வளர்ப்புதாயையும் அந்த வாலிபன் பறிகொடுத்திருந்தான். அந்த வாலிபன் யாரென்பது தெரியாவிட்டாலும், “அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்தினருக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்” என்று அபியின் அம்மா சொன்னார்.

ஒரு சில வருடங்கள் கடந்தன. இப்போது அபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள். அவள் வகுப்பிற்குச் சென்றபோது, தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமரும்படி அபியிடம் ஒரு மாணவன் கேட்டுக்கொண்டான். அந்த மாணவனின் பெயர் ஆஸ்டின் ஹேட்ச். விமான விபத்தில் தப்பிய அந்த வாலிபனுக்காகத்தான் அபியும் அவளுடைய அம்மாவும் முன்பு ஜெபித்திருக்கிறார்கள். அபியும் ஆஸ்டினும் ஒருவரை ஒருவர் விரும்பி, 2018ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

பிறகு ஒரு பேட்டியின்போது, “என்னுடைய வருங்கால கணவருக்காக நான் ஜெபித்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அபி சொன்னாள். நாமும், நமக்கும் நமக்குத் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஜெபிப்பதோடு முடங்கிவிடக்கூடாது. மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று புத்திசொல்கிறார். எபே 6:18. அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட “எல்லா மனுஷருக்காகவும்” ஜெபம்பண்ணுங்கள் என்று 1தீமோ 2:1 கூறுகிறது.

எல்லாருக்காகவும், நமக்குத் தெரியாதவர்களுக்காகவும் ஜெபிப்போம். அப்படியும்கூட “ஒருவர் பாரத்தை ஒருவர்” சுமக்கலாம். கலா 6:2.