ஸ்டீவுக்கு 62 வயது; இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர், வீடில்லாமல் திறந்த வெளிகளில் தங்கி வருபவர். ஒருநாள் சாயங்காலப் பொழுதில், தான் கையால் வரைந்த ஓவியம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அவ்வாறு செய்வதுண்டு. அப்போது அங்கே வந்த ஒரு வாலிபப்பெண்மணி, ஸ்டீவுக்கு பல பீஸ்ஸாக்களைக் கொடுத்தாள். அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார் ஸ்டீவ். பிறகு தன்னிடமிருந்த அதிகமான உணவை, தன்னைப்போலவே வீடின்றி, பசியோடிருந்த ஒருவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்த வாலிபப்பெண்மணி, மறுபடியும் ஒரு தட்டு நிறைய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே தான் கொடுத்த உணவை ஸ்டீவ் அடுத்தவருடன் பகிர்ந்ததால், அந்த உணவைக் கொண்டுவந்ததாக அந்த வாலிபப்பெண் சொன்னாள்.

நீதிமொழிகள் 11:25ல் சொல்லப்பட்டுள்ளது போலவே ஸ்டீவின் வாழ்க்கையில் நடந்தது. நாம் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளும்போது, நாமும் அதேவித இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஏதாவது திரும்பக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எதையும் செய்யக்கூடாது. ஸ்டீவுக்கு நடந்ததுபோல உடனே பிரதிபலன் எப்போதும் கிடைப்பதில்லை. மாறாக, தேவன் சொல்லியிருக்கிறார் என்பதால் நாம் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பிலிப்பியர் 2:3-4; 1யோவான் 3:17. அவ்வாறு நாம் செய்வதில் தேவன் பிரியப்படுகிறார். அவர் திரும்ப நமக்கு பணஉதவியோ, பொருள் உதவியோ பண்ணவேண்டுமென்கிற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படியிருந்தும், ஏதாவது வழியில் அவர் நமக்கு உதவுவார். சில சமயம் பொருள்ரீதியாகவும், சிலசமயம் ஆவிக்குரிய ரீதியாகவும் உதவுவார்.

இரண்டாவது தனக்குக் கொடுக்கப்பட்ட பீஸ்ஸாவையும் ஸ்டீவ் சிரித்த முகத்துடன் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டார். தனக்கு வசதியில்லாவிட்டாலும் தயாளத்துடன் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தான் பெற்றதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், சந்தோஷமாக பிறருடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருந்தார். தேவன் நம்மை வழிநடத்தி, நம்மைப் பெலப்படுத்தினால், நாமும்கூட அப்படிப்பட்டவர்களாக வாழலாம்.