எல்லா பாலைவனங்களையும் போல மணல் மேடுகள், வறண்ட பள்ளத்தாக்குகள், செங்குத்தான மேடுகள், பெரும்பாலும் வறண்ட பகுதிகளையுடைய மலைகள் ஆகியவை உள்ளடங்கியதுதான் மொகாவி பாலைவனம்.  ஆனால், ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை அங்கு அதிகளவு மழைபெய்து, “ஒவ்வோர் அடி மணலையும் அல்லது சரள் பரப்பையும் பூத்துக்குலுங்கச்செய்கிறது” என்று சொல்கிறார் அமெரிக்க உயிரியல் அறிஞரான எட்மன்ட் ஜேகர். மொ ஜேவ் மலர்கள் பூத்துக்குலுங்குவதை ஒவ்வொரு வருடமும் பார்க்கமுடியாது. வறண்ட அந்த நிலப்பகுகுதியானது சரியான காலச்சூழலில் பெலமான சூறாவளியால் ஈரமாகி, சூரியவெளிச்சத்தில் காய்ந்தால்தான் அந்தப் பாலைவனம் பூத்துக்குலுங்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வறண்ட அந்தப் பகுதியையும்கூட தேவன் பசுமையாக்குகிறார்.  இந்தக் காட்சியானது ஏசாயா தீர்க்கதரிசியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.  தேசங்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் கூறுகிறார் ஏசாயா 35. எல்லாவற்றையும் தேவன் சரிசெய்கிற காலம் வருகிறது என்று சொல்லிவிட்டு, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்” என்கிறார். வசனம் 1. தேவனால் மீட்கப்பட்டவர்கள் “ஆனந்தக் களிப்புடன் பாடி” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்றும், “நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” என்றும் சொல்கிறார். வசனம் 10.

நம்முடைய நித்திய வாழ்க்கை பற்றி தேவனுடைய வாக்குறுதிகளில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கையில் வறட்சியும் ஏற்படலாம், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம், ஆனாலும் நாம் தேவனை நம்பலாம். அவருடைய அன்பில் வேரூன்றியிருந்தால் நாம் அவருடைய சாயலுக்கொப்பாக பூத்துக்குலுங்குகிற சமயம் வருமட்டும் வளர்ந்துகொண்டே இருக்கலாம். அந்தச் சமயம் வரும்போது இயேசு வந்து, எல்லாவற்றையும் சரிசெய்வார்.