மேரியும் ஜானும் தங்களுடைய நாயைக் கூட்டிக்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சமீபத்தில் பெய்திருந்த மழையில் மண் கரைந்திருந்ததால், உள்ளே புதைந்திருந்த துருப்பிடித்த தகர டப்பா ஒன்று ஓரிடத்தில் வெளியே தெரிந்தது. அந்த டப்பாவை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு நூற்றாண்டு பழைமை வாய்ந்த சில தங்க நாணயங்கள் உள்ளே இருந்தன! அந்தத் தம்பதியர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து தேடிப்பார்த்தபோது அதேபோல ஏழு டப்பாக்களை எடுத்தார்கள். அவற்றில் மொத்தம் 1,427 தங்க நாணயங்கள் இருந்தன. பிறகு, அவற்றையெல்லாம் வெவ்வேறு இடங்களில் மீண்டும் புதைத்துவைத்துப் பாதுகாத்தார்களாம்.

சேடில் ரிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) என்று அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷ வேட்டையாக அது கருதப்படுகிறது. அந்த தங்க நாணயங்களின் மதிப்பு 10 மில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சொன்ன உவமை ஒன்றை இந்தச் சம்பவம் அதிகமாக நினைவூட்டுகிறது. “பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:44.

பொக்கிஷ வேட்டைகள் குறித்த கற்பனை கதைகளுக்கும் பஞ்சமில்லை; ஆனால் உண்மையிலேயே அப்படி நடப்பது அபூர்வம்தான். ஆனால் இயேசு சொல்கிற பொக்கிஷத்தை எல்லாருமே பெறலாம். அதற்கு அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். யோவான் 1:12.

அந்தப் பொக்கிஷம் அள்ள அள்ள குறையாதது. நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை விட்டு, தேவனையும் அவருடைய நோக்கங்களையும் நாடும்போது, அவர் எவ்வளவு விலையேறப் பெற்றவர் என்பதைக் காணலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்” மூலமாக, நம் கற்பனைக்கும் எட்டாத பொக்கிஷங்களைத் தருகிறார். எபே 2:6. அவருடைய மகன்களும் மகள்களுமாக நாம் புதுவாழ்வைப் பெறுவதும், வாழ்க்கையில் புதிய நோக்கங்களைக் கண்டுகொள்வதும், அவரோடு நித்தியத்தில் வாழும் மகிழ்ச்சியைப் பெறுவதும் அந்தப் பொக்கிஷத்தில் அடங்கும்.