மார்ச், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2019

மிகப்பெரிய பரிசு

பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். 'நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு" என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். 'வந்து பார்" என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, 'தேவனுடைய குமாரன்", 'இஸ்ரவேலின் ராஜா" (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் 'மிகப்பெரியவற்றை" காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், 'இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.

படைப்பவரும் காப்பவரும்

பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.

ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.

ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.

படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.

தேவனால் சூழப்பட்டிருக்கிறோம்

கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.

இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் 'கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.

இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். 'இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் 'எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.  

இயேசுவிடம் ஓடுதல்

 பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.  

செந்நீர்

ஸ்காட்டிஷ் தேசிய ஓவிய கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த பல ஒலிவ மர ஓவியங்களில் ஒன்றின் அழகு என்னை வெகுவாய் ஈர்த்தது. பல வரலாற்று நிபுணர்கள், இந்த வேலைப்பாடு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் இயேசுவுக்கு உண்டான அனுபவத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த ஓவியத்தில் என்னை அதிகமாய் ஈர்த்தது என்னவென்றால், அந்த பழைய ஒலிவ மரங்களின் மீது சில சிறிய சிவப்பு தீற்றல்கள்.  
ஒலிவ மலையில் ஒலிவ மரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதை அறிந்திருந்த இயேசு, அந்த இரவில் ஜெபிப்பதற்காய் அங்கு கடந்த சென்றார். தன் சீஷர்களில் ஒருவனான யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பதையும் முன்னறிவித்தார். அந்த காட்டிக்கொடுக்கப்படுதல் சிலுவையில் அறையப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த இயேசு கவலையினால் நிரப்பப்பட்டார். அவர் ஜெபிக்கும்போது, “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில், தன்னுடைய அடிக்கப்படுதலுக்கும் பாடுகளுக்கும் இயேசு ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அவருடைய அந்த கெத்சமெனே ஜெபமே ஆதாரமாயிருக்கிறது.  
வான் கோக் வரைந்த ஓவியத்தில் சிதறியிருந்த அந்த இரத்தத் துளிகள், “மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு... ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (மாற்கு 8:31) உபத்திரவத்தை அனுபவிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் அவருடைய பாதையில் அனுமதிக்கப்பட்டாலும், அது அவருடைய வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மரணத்தின் மீது இயேசு கொண்ட ஜெயமானது, நம்முடைய உபத்திரவத்தை மேற்கொள்ளச் செய்து, தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது.