பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். ‘நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு” என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், ‘நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். ‘வந்து பார்” என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, ‘தேவனுடைய குமாரன்”, ‘இஸ்ரவேலின் ராஜா” (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் ‘மிகப்பெரியவற்றை” காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், ‘இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.