Archives: ஆகஸ்ட் 2018

உதவிக்கோர் அழைப்பு

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.

அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.

நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு

பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.

அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.

இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.

நீ என்னை நேசிக்கிறாயா?

நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்

நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.

ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.

நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.

என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

 

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.