Archives: ஏப்ரல் 2018

பாடுகள் தரும் பெலன்

பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றதினால், வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த அவனுடைய குடும்பத்தினர் அவனை விரட்டிவிட்டார்கள். இருப்பினும், கிறிஸ்தவ சமுதாயம் அவனை வரவேற்று அவனுடைய படிப்பைத் தொடர்வதற்கு அவனுக்கு உற்சாகமளித்தது, அவனுடைய பொருளாதார தேவைகளையும் சந்தித்தது. பின்நாட்களில், அவனுடைய சாட்சி ஒரு பத்திரிக்கையிலே வந்ததால், அவன் கூடுதலாய் உபத்திரவப்பட்டான்.

ஆனாலும், அந்த வாலிபன் தன் குடும்பத்தினரை கவனியாமலில்லை. உடன்பிறந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாது என்று சட்டம்போட்டாலும், அவன் அப்பாவை பார்த்துப்பேச தவறியதில்லை. அப்பா நோயுற்றபோது, உறவினரின் அவமதிப்பை பொருட்படுத்தாமல், அவரை கவனித்துக் கொண்டான், விரைவில் குணமடையவும் ஜெபித்தான். அப்பா பூரண குணமடைந்ததும், அந்த மகன்மேல் குடும்பத்தார் அக்கறை காட்டத் தொடங்கினர். காலப்போக்கில், அவனுடைய அன்பான சாட்சி அவர்களுடைய உள்ளத்தை உருக்க ஆரம்பித்தது – குடும்பத்தில் சிலர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும் விரும்பினர்.

கிறிஸ்துவை பின்பற்றவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீர்மானம் நமக்கு சங்கடங்களை கொண்டுவரலாம். “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். என பேதுரு எழுதியிருக்கிறார்.,
(1 பேது. 2:19). நம்முடைய விசுவாசத்தின் காரணமாக பேதுரு கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்திடும்போது, “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (வச. 21) என்பதினாலேயே அப்படி செய்கிறோம்.

மற்றவர்கள் இயேசுவை அவமதித்தபோதும், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
(வச. 23). நம்முடைய பாடுகளில் இயேசுவே நமக்கு மாதிரியாக இருக்கிறார். பாடுகளில் பெலனடைய நாம் இயேசுவை அண்டலாம்.

நேர்மையான வெற்றி

கிழக்காசிய விளையாட்டுகளின் மாரத்தான் போட்டியில் சிங்கப்பூர் வீரர் ஆஷ்லி லூயி எல்லோரையும் முந்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால், ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்த அவர் தனக்கு முன் இருந்த வீரர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததால் பின்தங்கியதை உணர்ந்தார். அவர்களுடைய பிழையை தனக்கு சாதகமாக்கிகொண்டு ஆஷ்லி தொடர்ந்திருக்கலாம், ஆனாலும், அவருக்குள் காணப்பட்ட போட்டி நேர்மை மனப்பான்மை அப்படி வெல்வது ஒரு உண்மையான வெற்றியாய் இராது என்று உணர்த்திற்று. மற்றவர்களைவிட வேகமாய் ஓடி ஜெயிக்கவேண்டுமேயன்றி மற்றவர்களின் பிழையின் காரணமாக ஜெயிக்கக்கூடாது என்று நினைத்தார். தனக்குள் எழுந்த இவ்வுணர்வின் நிமித்தமாக தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தை சற்றே குறைத்து பின்னே வருபவர்கள் இணைந்துகொள்ள இடங்கொடுத்தார்.

பந்தயத்தின் முடிவில் தோல்வியை சந்தித்த ஆஷ்லி பதக்க வாய்ப்பை இழந்தாலும். தன் நாட்டு மக்களின் உள்ளத்தை வென்றார். அவருடைய நேர்மையுணர்வை பாராட்டி அவருக்கு ஒரு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது. கிறிஸ்தவன் என்பதற்கு இவருடைய ஒரு செயல் ஒரு சான்றாக அமைந்ததோடு, “இவரால் எப்படி இதைச் செய்யமுடிந்தது?” என்ற கேள்வியையும் அநேகருடைய மனதில் எழுப்பியிருக்கும்.

ஆஷ்லியின் இச்செயல் என்னுடைய நம்பிக்கையை, கிரியைகளின் மூலமாக வெளிப்படுத்த எனக்கு ஒரு சவாலாக அமைகின்றது. நல்லெண்ணத்துடன் அன்பையும் மன்னித்தலையும் வெளிப்படுத்தச் செய்யப்படும் சின்னசின்ன காரியங்களும் தேவனை மகிமைப்படுத்தும். இதனைத்தான் பவுல் எளியநடையில் உரைக்கிறார்: “…உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத்து 2:8).

பிறருக்கு நாம் செய்யும் நன்மையான கிரியைகள், ஆவியானவர் நமக்குள் இருப்பதால் நம்மால் வேறுபட்டு வாழமுடியும் என்பதை, உலகிற்கு வெளிப்படுத்தும். அவபக்தியையும் லெளகீக இச்சைகளையும் வெறுத்து, மக்களை தேவன்பால் திருப்பக்கூடிய ஒரு உத்தமமான வாழ்க்கை வாழ்ந்திட தேவன் நமக்கு கிருபையளிப்பார்”

பகிர்ந்திட்ட ஆறுதல்

“எனக்காகவே தேவன் இன்று உங்களை அனுப்பினார்”

சிக்காகோவில் விமானம் தரையிறங்கிய பின் இந்த வார்த்தைகளை சொல்லி அந்தப் பெண் என்னிடமிருந்து விடைபெற்றாள். விமானத்தில் என்னுடன் பயணித்த அவள் அன்றைக்கு மட்டும் பல விமானங்கள் மாறி கடைசியாக தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். “நீங்க தப்பா எடுக்கலேனா, இத்தனை விமானங்கள் மாறி வரவேண்டிய அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். சற்றே யோசித்த அவள் வருத்தத்துடன், “போதைக்கு அடிமையான என் மகளை சீர்திருத்த மையத்தில் அனுமதித்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

தொடர்ந்து அவளுடன் பேச்சுகொடுத்த நான், என் மகனும் எப்படி ஹெராயினுக்கு அடிமையாக இருந்தான், இயேசு அவனை எப்படி விடுவித்தார் என்பதை பகிர்ந்தேன். கண்ணீர்மல்க அதனை கேட்டவளின் முகத்தில் ஒரு புன்னகை. விமானம் தரையிறங்கிய பின் இருவருமாக இணைந்து அந்த மகளின் சங்கிலிகள் அறுபடவேண்டும் என்று ஜெபித்தோம்.

அன்று மாலையில் நான் 2 கொரிந்தியர் 1:3-4-ல் “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன்.

தேவனால் வரும் ஆறுதலினால் பெலப்படவேண்டிய மக்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். நம்மேல் அவர் கூர்ந்த அன்பை, மனதுருக்கத்துடன் நாம் மற்றவருக்கு பகிர்ந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றும், அவரால் வரும் ஆறுதல் யாருக்குத் தேவையோ அவர்களிடமாய் தேவன் நம்மை அனுப்பட்டும்!

நாம் எதைக் கேட்க விரும்புகிறோம்

நம்முடைய அபிப்பிராயங்களுடன் ஒத்துப்போகும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மனித இயல்பு. நம் கருத்துக்களை ஆதரிக்கும் தகவல்களை நாம் இரண்டு மடங்கு கூடுதலாக தேட முற்படுகிறோம் என்று ஒரு ஆராய்ச்சி அறிவிக்கிறது. நம்முடைய கொள்கைகளின்மேல் ஓர் அசைக்கமுடியாத பற்று கொண்டிருந்தால், எதிர்மறை சிந்தனைகள் நமக்கு விடுக்கும் சவால்களை நாம் அறவே தவிர்ப்போம்.

ஆகாப் ராஜா இஸ்ரவேலை ஆண்டபோதும் இப்படியே நடந்தது. அவனும் யூதாவின் ராஜா யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் புரியலாமா கூடாதா? என்று ஆலோசித்தபோது, ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை – தன்னால் நியமிக்கப்பட்டு தான் விரும்புகின்ற காரியத்தை உரைக்கும் மனிதர்களை-வரவழைத்து யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு ஒவ்வொருவரும், “தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள் (2 நாளா. 18:5). யோசபாத்து, “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா” என்று கேட்டான். அதற்கு ஆகாப் தயக்கத்துடன், தேவனுடைய தீர்க்கத்தரிசி மிகாயா என்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால், அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான் (வச. 7). அப்படியே, அவர்கள் யுத்தத்தில் தோற்றுப்போவார்கள் என்றும், மக்கள் எல்லாம் “மலைகளில் சிதறிப்போவார்கள்” என்றும் அவன் உரைத்தான் (வச. 16).

இந்தக் கதையை வாசிக்கும்போது நானும் எப்படி எனக்கு ஒத்துவராத நல் ஆலோசனைகளை தவிர்க்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். ஆகாபின் விஷயத்தில், தனக்கு “இசைவாக பேசுகின்ற 400 தீர்க்கத்தரிசிகளுக்கு செவிகொடுத்தது அழிவில் முடிந்தது (வச. 34). நாமும் சத்தியத்தின் சத்தத்திற்கு, வேதத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தைகளுக்கு, அவைகள் நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மாறாக இருந்திட்டாலும், கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போம்.

முற்றத்தில் ஓர் தணிவு

மிக வெப்பமான ஒரு நாளில் 8 வயது சிறுவன் கார்மன் மக்டேனியல் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரருக்கு தாகம் தீர்க்க எதையாகிலும் செய்யவேண்டும் என்று நினைத்தான். குளிர்சாதன பெட்டி ஒன்றில் வைத்த தண்ணீர் பாட்டில்களையும், குளிர் பானத்தையும் வீட்டு வாசற்படியில் வைத்தான். அதனை கண்ட அஞ்சல்காரரின் முகமலர்ச்சியை பாதுகாப்பு கேமரா படம்பிடித்தது. “அடேங்கப்பா! தண்ணீரும், குளிர்பானமும். நன்றி ஆண்டவரே; நன்றி!” என்று அவன் குதூகலித்தான்.

“தான் வீட்டில் இல்லாதுபோனாலும் அஞ்சல்காரருக்கு குளிர்பானத்தை கொடுப்பது தன் கடமை என்று டேனியேல் நினைக்கிறான்” என்றாள் அச்சிறுவனின் தாய்.

இக்கதை நம் உள்ளத்தை உருக்குவதோடு, அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னது போல், “நம்முடைய தேவைகளை எல்லாம் சந்திக்கும் ஒருவர் உண்டு” என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தன் எதிர்காலத்தை குறித்த நிச்சயமில்லாதவராக பவுல் சிறையில் வாடினாலும், பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள் அனுப்பின பொருளுதவிக்காக சந்தோஷமடைந்தார். பிலிப்பி ஒரு செழிப்பான சபை அல்ல. ஆனாலும் அவர்கள் உதாரகுணம் கொண்டவராய் தங்களுடைய குறைவிலே பவுலுக்கு கொடுத்தார்கள் (2 கொரி. 8:1-14). பிலிப்பு சபையினர் பவுலினுடைய தேவையை சந்தித்ததுபோலவே, தேவனும் அவர்களுடைய தேவைகளை “கிறிஸ்து இயேசுவுக்குள், அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே… சந்திப்பார், (பிலி. 4:19).”

பெரும்பாலும் பரலோக உதவியை தேவன் பிறர் மூலமாகவே அனுப்புகிறார். அதாவது, நம்முடைய தேவைகளை தேவன் மற்றவர்களைக் கொண்டு சந்திக்கிறார். நம்முடைய தேவைகளுக்காக நாம் தேவனை சார்ந்திருக்கும்போது, பவுலைப் போல், நாமும் உண்மையான மனநிறைவின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோம் (வச. 11-13).