“எனக்காகவே தேவன் இன்று உங்களை அனுப்பினார்”

சிக்காகோவில் விமானம் தரையிறங்கிய பின் இந்த வார்த்தைகளை சொல்லி அந்தப் பெண் என்னிடமிருந்து விடைபெற்றாள். விமானத்தில் என்னுடன் பயணித்த அவள் அன்றைக்கு மட்டும் பல விமானங்கள் மாறி கடைசியாக தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். “நீங்க தப்பா எடுக்கலேனா, இத்தனை விமானங்கள் மாறி வரவேண்டிய அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். சற்றே யோசித்த அவள் வருத்தத்துடன், “போதைக்கு அடிமையான என் மகளை சீர்திருத்த மையத்தில் அனுமதித்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

தொடர்ந்து அவளுடன் பேச்சுகொடுத்த நான், என் மகனும் எப்படி ஹெராயினுக்கு அடிமையாக இருந்தான், இயேசு அவனை எப்படி விடுவித்தார் என்பதை பகிர்ந்தேன். கண்ணீர்மல்க அதனை கேட்டவளின் முகத்தில் ஒரு புன்னகை. விமானம் தரையிறங்கிய பின் இருவருமாக இணைந்து அந்த மகளின் சங்கிலிகள் அறுபடவேண்டும் என்று ஜெபித்தோம்.

அன்று மாலையில் நான் 2 கொரிந்தியர் 1:3-4-ல் “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன்.

தேவனால் வரும் ஆறுதலினால் பெலப்படவேண்டிய மக்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். நம்மேல் அவர் கூர்ந்த அன்பை, மனதுருக்கத்துடன் நாம் மற்றவருக்கு பகிர்ந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றும், அவரால் வரும் ஆறுதல் யாருக்குத் தேவையோ அவர்களிடமாய் தேவன் நம்மை அனுப்பட்டும்!