Archives: நவம்பர் 2017

ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்

நான் தேவனைத் தவறாமல் ஆராதிக்க ஒரு ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தபொழுது என் சிநேகிதி தன் ஆலய ஆராதனைக்கு வருமாறு அழைத்தாள். ஆராதனை நடத்தினவர்கள், எனக்குப் பிரியமான ஓர் குறிப்பிட்ட பாடலொன்றைப்பாடினதால், நான்  என் கல்லூரி நாட்களில் பாடல் குழுவை நடத்துபவர் “இதை ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொள்” என்று கூறிய ஆலோசனையை மனதில்கொண்டு, மிகவும் உற்சாகத்துடன் உரத்த சத்தத்துடன் தேவனை ஆராதித்துத் பாடினேன்.

அந்தப் பாட்டு முடிந்தவுடன், என் சிநேகிதியின் கணவர் என்னைப் பார்த்து “நீ நல்ல உரத்த சத்தமாய் பாடினாய்” என்றார். அவர் கூறியது புகழ்ச்சியாயல்ல, ஏளனமாகச் சொன்னார். அதன்பின் நான் என் சத்தத்தை குறைத்து என்னைச் சுற்றியுள்ளவர்களைவிட மெல்லிய குரலில், என் பாடலை விமரிசிப்பார்களோ என்ற பயத்துடன் பாடினேன்.

ஒரு ஞாயிறன்று, ஆலயத்தில் எனக்கடுத்திருந்த ஒரு பெண் பாடக்கேட்டேன். அவள் தன்னையே அறியாமல் மிகவும் உற்சாகமாய் தேவனைத் துதித்துப்பாடினாள். அது, தாவீது தன் வாழ்க்கையில் உற்சாகமாய்த் தன் உள்ளத்திலிருந்து பாடி ஆராதித்ததை நினைவு படுத்தியது. சங்கீதம் 98ல் பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் என்றான் (வச. 4).

சங்கீதம் 98:1,  நாம் ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறபடியால், ஆனந்தமாய் ஆர்ப்பரிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஜாதிகளுக்கு அவருடைய உண்மையையும் நீதியையும், அவருடய இரக்கத்தையும், இரட்சிப்புமாகிய அதிசயங்களை இச்சங்கீதம் முழுவதிலும் தாவீது நினைவு கூருகிறான். தேவன் யாறென்பதைக்குறித்தும், அவர் செய்ததைக்குறித்தும் தியானித்தால், நம் உள்ளம் துதியினால் பொங்கிவழியும்.

உங்களுடைய வாழ்க்கையில் அவர் செய்த “மாபெரும் அற்புதங்களென்ன? ” நன்றி பலி செலுத்தும் நேரமே அவருடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூர ஏற்ற வேளை. ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!

ஹெலிகாப்டர் விதைகள்

என்னுடைய  பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும்பொழுது “ஹெலிகாப்டர்” விதைகளைப் பிடிக்க ஆசைப்படுவார்கள். அவை எங்கள் பக்கத்து வீட்டிலுள்ள மேப்பிள் மரத்திலிருந்து விழும் விதைகள். அவை ஒவ்வொன்றும் ஒரு ஹெலிகாப்டரின் சுழலும் இறக்கைகள் போலவே சுழன்று கொண்டே கீழே விழும். விதைகளின் நோக்கம் பறப்பதல்ல, கீழே மண்ணில் விழுந்து முளைத்து மரங்களாக வளர்வதேயாகும்.

சிலுவையிலறையப்படும் முன் இயேசு தம்முடைய சீஷர்களை பார்த்து, “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது… கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்தேயிருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவா. 12:23-24) என்று கூறினார்.

இயேசுவின் சீஷர்கள் அவரை மேசியாவாகக் கனம் பண்ணப்பட வேண்டுமென்று விரும்பியபொழுது, அவரோ, நாம் அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினால் பாவமன்னிப்புப் பெற்று மறுரூபமாவதற்காக, தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், “தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய காலமாய்க் காத்துக்கொள்ளுவான் என்ற அவருடைய வார்த்தையைக் கேட்கிறோம். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்; நான் எங்கேயிருக்கிறனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார் (வச. 25-26) என்பதை உணர்ந்து அவரைப் பின் பற்ற வேண்டும்.

ஹேலிகாப்டர் விதைகள்; நாம் அவருக்காக வாழ்வதற்காக, மரித்த இரட்சகர் இயேசுவின், அற்புதத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

உன் வரிசை எண்ணைக்கூறு

எங்கள் வீட்டின் கொல்லப்புறத்தில் நெடுங்காலமாய் இருந்த ஒரு செர்ரி மரம் செளிப்புடன் வளர்ந்து கனி தந்த பின் இப்பொழுது பட்டுப்போவதுபோல காணப்பட்டது. எனவே நான் ஒரு மரம் பராமரிப்பவரை வரவழைத்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு மரத்திற்கு தேவையற்ற அழுத்தம் இருக்கிறது. அது உடனே கவனிக்கப்பட வேண்டும் என்றார். உடனே என் மனைவி “எனக்கிருக்கும் எத்தனையோ கவலைகளில் உன் வரிசை எண் என்ன?” என்று மரத்தைப்பார்த்துக் கூறிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டாள், அந்த வாரக் கவலைகளில் இதுவும் ஒன்றானது.

சில சமயங்களில் கவலைகள் நம்மை அதிகமாய் அழுத்தும் வாரங்கள் உண்டு. நமது கலாச்சாரம் சீரழிவின் திசையில் போவதைக் குறித்தக் கவலை, பிள்ளைகளைக் குறித்த பாரம். நமது திருமணம், நமது வியாபாரம், நமது பொருளாதாரம், நமது தனிப்பட்ட உடல் ஆரோக்கியம், மற்றும் நலமாயிருத்தல் போன்ற எத்தனையோ கவலைகள் நம்மை அழுத்துகின்றன. இத்தனை அழுத்தங்களின் மத்தியிலும் நாம் சமாதானத்தோடு இருக்கமுடியும், ஏனென்றால் இயேசு என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (யோவா. 14:27).

இயேசுவின் வாழ்க்கை நிந்தனையாலும், குழப்பங்களாலும் நிறைந்திருந்தன. அவருடைய எதிரிகள் அவரோடு வாதாடிக் கொண்டேயிருந்தார்கள், உபத்திரவப்படுத்தினார்கள்; அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. அநேக நேரங்களில் அவருக்குத் தலைசாய்க்க இடமில்லை. ஆனாலும் அவர் கவலைப்படவுமில்லை, கோபப்படவுமில்லை. அவர் எப்பொழுதும் சாந்தமாகவேயிருந்தார். ஏனென்றால் அவருக்குள் நிர்மலமான தெய்வீக சமாதானமிருந்தது. இப்படிப்பட்ட சமாதானத்தைத்தான் நமக்குத் தந்திருக்கிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிய கவலையிலிருந்து விடுவித்திருக்கிறார். அவர் வெளிப்படுத்தின சமாதானம் – அவர் தரும் சமாதானம்.

மிகவும் மோசமான அல்லது அற்பமான கஷ்டங்களாக இருந்தாலும்  எந்தச் சூழ்நிலையிலும், ஜெபத்தின் மூலம் இயேசுவண்டை நெருங்கலாம். அங்கே, அவர் சமூகத்தில், நம்முடைய பயங்கள், கவலைகள் எல்லாவற்றையும் அவருக்குத் தெரியப்படுத்தலாம். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி. 4:7) என்று பவுல் நமக்கு உறுதியளிக்கிறார்.

அற்புத படைப்புகளைப் பார்த்தல்

வில் வித்தைகாரர்கள் தங்கள் அம்புகளை எடுத்துச் செல்வதற்கான அம்பாரத்துனிகளை (அம்புகளை வைக்கும் தோல்பை) என் தந்தை வடிவமைப்பார்கள். சிறந்த தோல் துண்டுகளில் வனவிலங்குகளின் விரிவான வாழ்க்கைச் சித்திரங்களை நேர்த்தியாகச் செதுக்கி, அவற்றை ஒன்றாக இணைத்துத் தைப்பார்கள். ஒருமுறை நான் அங்கு சென்றபோது அவர் கலைப்படைப்பொன்றை செதுக்குவதைப் பார்த்தேன். தன் கைகளினால், கவனமாக கூர்மையான கத்தியைக்கொண்டு, மென்மையான அந்தத்தோலிலே, தேவையான அழுத்தம் கொடுத்து வெவ்வேறு தன்மையில் அழகிய டிசைன்கள் செதுக்குவதைப் பார்த்தேன். அதன்பின் ஒரு துண்டுத் துணியை, சிவப்பு நிறத் சாயமோன்றில் முக்கி எடுத்து அந்தத் தோலின் மேல் பல தடவைகள் ஒரே சீராகப் பூசினார். அது அவருடைய படைப்பின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.

நான் என் தகப்பனின் திறமைமிக்க கலைநயத்தை வியந்துகொண்டிருக்கையில், என்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும், என் பரம தகப்பனின் வியத்தகு படைப்பின் கலைத்திறனை இதுவரை பாராட்டாமல் இருந்ததை உணர்ந்தேன். “தேவரீர் என் உள்ளந்திரியங்களையும் உருவாக்குகிறீர். நான் பிரமிக்கத் தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்” என்று தாவீது தேவனின் மகத்துவமான சிருஷ்டிப்பின் கைவண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தேன் (சங். 139:13,14).

நாம் நமது சிருஷ்டிகரை மனஉறுதியுடன் துதிக்கலாம், ஏனென்றால் “அவருடைய கிரியைகள் அதிசயமானவைகள்” நாம் நம்மையும் மற்றவர்களையும் மேன்மையாகக் கருதலாம்; ஏனென்றால் சர்வலோக சிருஷ்டிகர், நம்மை உள்ளும் புறமும் அறிந்திருப்பதோடு நாம் உருவாகும் முன்னரே நமது வாழ்நாளைத் திட்டம்பண்ணி உள்ளார் (வச. 15-16).

என் தகப்பனாரின் திறமைமிக்க காலங்களில் உருவான தனித்தன்மை வாய்ந்த தோல்களைப் போலவே நாமும் விலையுயர்ந்த அழகான படைப்புகள். ஏனென்றால் நம்மைப்போல் இன்னொருவன் கிடையாது! நாம் தேவனின் அற்புதப் படைப்புகளாயிருக்கும்படி, நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மை உடையவர்களாக உருவாக்கப்பட்டுள்ளோம். இது தேவனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

ஒளிந்து பிடித்து விளையாடுதல்

“உன்னால் என்னைப் பார்க்க முடியாது!”

சிறு பிள்ளைகள் ஒளிந்து பிடித்து விளையாடும்பொழுது, தங்கள் கண்களை மூடிக்கொண்டு, தாங்கள் ஒளிந்திருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அவர்களால் உங்களைக்காண முடியாததினாலே, நீங்களும் அவர்களைக் காண முடியாதென்று நினைத்துக்கொள்வார்கள்.

பெரியவர்களுக்கு, அது ஞானமற்றதாகத் தோன்றினாலும், நாமும் இதைப்போன்ற செயலையே தேவனிடமும் செய்கிறோம். தகாததொன்றைச் செய்ய நாம் விருப்பப்படும்பொழுது, நாம் தேவன் இதைப்பார்க்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டு, நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.

பாபிலோனில் அடிமைகளாக இருந்த தமது ஜனத்திற்கு சொல்லும்படி, எசேக்கியேலுக்குத் தேவன் கொடுத்த தரிசனத்திலிருந்து இந்த உண்மையை எசேக்கியேல் அறிந்து கொண்டான். “அப்பொழுது அவர் என்னை நோக்கி மனு புத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்தில் அவரவர் தங்கள் விக்கிரகங்களின் விசித்திரவிநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்” (எசே. 8:12).

 ஆனால், தேவன் ஒன்றையும் கவனியாமல் விடுவதில்லை. எசேக்கியாவின் தரிசனம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். அவர்கள் பாவம் செய்திருந்தாலும், பாவ அறிக்கை செய்தவர்களுக்கு ஒரு புது வாக்குத்தத்தம் கொடுத்தார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்றார் (எசே. 36:25).

நாம் பாவத்தினால் சிதைக்கப்பட்டு, அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினாலும் நமது பாவத்திற்கான தண்டனையை தமது மனதுருக்கத்தாலே, சிலுவையில் ஏற்றுக்கொண்டு, இறுதியாக விலைக்கிரயம் செய்து முடித்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு புதுவாழ்வு தந்ததுமன்றி, நமக்குள்ளே கிரியை செய்து அவரைப் பின்பற்றும் பொழுது நமது இருதயத்தை மாற்றுகிறார். தேவன் எவ்வளவு நல்லவர்  நாம் வழிவிலகி பாவத்தில் மறைந்துகிடந்தபோது, தேவன் கிறிஸ்து மூலம் தம்மண்டை நம்மை சேர்த்துக்கொண்டார்.  “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக். 19:10; ரோமர் 5:8).