எங்கள் வீட்டின் கொல்லப்புறத்தில் நெடுங்காலமாய் இருந்த ஒரு செர்ரி மரம் செளிப்புடன் வளர்ந்து கனி தந்த பின் இப்பொழுது பட்டுப்போவதுபோல காணப்பட்டது. எனவே நான் ஒரு மரம் பராமரிப்பவரை வரவழைத்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு மரத்திற்கு தேவையற்ற அழுத்தம் இருக்கிறது. அது உடனே கவனிக்கப்பட வேண்டும் என்றார். உடனே என் மனைவி “எனக்கிருக்கும் எத்தனையோ கவலைகளில் உன் வரிசை எண் என்ன?” என்று மரத்தைப்பார்த்துக் கூறிவிட்டு விரைவாகச் சென்றுவிட்டாள், அந்த வாரக் கவலைகளில் இதுவும் ஒன்றானது.

சில சமயங்களில் கவலைகள் நம்மை அதிகமாய் அழுத்தும் வாரங்கள் உண்டு. நமது கலாச்சாரம் சீரழிவின் திசையில் போவதைக் குறித்தக் கவலை, பிள்ளைகளைக் குறித்த பாரம். நமது திருமணம், நமது வியாபாரம், நமது பொருளாதாரம், நமது தனிப்பட்ட உடல் ஆரோக்கியம், மற்றும் நலமாயிருத்தல் போன்ற எத்தனையோ கவலைகள் நம்மை அழுத்துகின்றன. இத்தனை அழுத்தங்களின் மத்தியிலும் நாம் சமாதானத்தோடு இருக்கமுடியும், ஏனென்றால் இயேசு என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (யோவா. 14:27).

இயேசுவின் வாழ்க்கை நிந்தனையாலும், குழப்பங்களாலும் நிறைந்திருந்தன. அவருடைய எதிரிகள் அவரோடு வாதாடிக் கொண்டேயிருந்தார்கள், உபத்திரவப்படுத்தினார்கள்; அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. அநேக நேரங்களில் அவருக்குத் தலைசாய்க்க இடமில்லை. ஆனாலும் அவர் கவலைப்படவுமில்லை, கோபப்படவுமில்லை. அவர் எப்பொழுதும் சாந்தமாகவேயிருந்தார். ஏனென்றால் அவருக்குள் நிர்மலமான தெய்வீக சமாதானமிருந்தது. இப்படிப்பட்ட சமாதானத்தைத்தான் நமக்குத் தந்திருக்கிறார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிய கவலையிலிருந்து விடுவித்திருக்கிறார். அவர் வெளிப்படுத்தின சமாதானம் – அவர் தரும் சமாதானம்.

மிகவும் மோசமான அல்லது அற்பமான கஷ்டங்களாக இருந்தாலும்  எந்தச் சூழ்நிலையிலும், ஜெபத்தின் மூலம் இயேசுவண்டை நெருங்கலாம். அங்கே, அவர் சமூகத்தில், நம்முடைய பயங்கள், கவலைகள் எல்லாவற்றையும் அவருக்குத் தெரியப்படுத்தலாம். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலி. 4:7) என்று பவுல் நமக்கு உறுதியளிக்கிறார்.