பரிபூரண தகப்பன்
“உன் பிள்ளைப்பருவத்தில் நான் அதிகநேரம் வீட்டில் இல்லாததால், உன்னோடு சரியாக நேரம் செலவளிக்க முடியாமற்போயிற்று,” என்று என் தந்தை ஒருமுறை என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் ஞாபகமில்லை. என் தந்தை, தன்னுடைய முழுநேர அலுவலக பணி முடிந்ததும், சிலநாட்கள், சாயங்கால வேளையிலே பாடகர் குழுவிற்கு பயிற்சி கொடுக்கும்படி ஆலயம் சென்றிடுவார். மேலும், எப்போதாவது, நான்கு பேர்கொண்ட ஒரு இசை குழுவுடன் சேர்ந்து இசைக் நிகழ்ச்சிக்காக ஒன்று அல்லது இரண்டு வார பயணம் மேற்கொள்வதுண்டு. இருப்பினும், என் வாழ்வின் மிகமுக்கியமான தருணங்களிலும், சில சாதாரண தருணங்களிலும் கூட அவர் என்னோடு இருந்துள்ளார்.
உதாரணத்திற்கு, நான் 8 வயதாய் இருந்தபொழுது, பள்ளி நாடகமொன்றில், ஒரு சிறிய கதாபாத்திரத்திலே நடித்தேன். மத்தியான வேளையிலே, அந்நாடகத்தை காண தாய்மார்கள் அனைவரும் வந்திருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு தகப்பனார் மட்டுமே வந்திருந்தார். அது என்னுடைய தந்தைதான். என்னையும் என் சகோதரிகளையும் அவர் எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும், நாங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அநேக சின்னஞ்சிறு செயல்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என் தாயாருடைய கடைசி காலத்தில், என் தந்தை அவரை மிகுந்த பரிவோடு கவனித்ததின் மூலம், தன்னலமற்ற அன்பு எப்படி இருக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். என்னுடைய தந்தை குறையொன்றும் இல்லாதவரல்ல. ஆனால், எப்பொழுதும் நம் பரமபிதாவை குறித்த ஒரு சிறிய கண்ணோட்டத்தை அவர் எனக்கு காண்பித்துள்ளார்.
சில சமயம், இப்பூமியில் வாழும் தந்தைமார்கள், தங்கள் பிள்ளைகளை ஏமாற்றவும் காயப்படுத்தவும் கூடும். ஆனால், நம்முடைய பரமபிதாவோ, “உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்” (சங். 1௦3:8). தேவனை நேசிக்கும் ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை கண்டிக்கும்பொழுதும், தேற்றும்பொழுதும், கற்பித்து வழிநடத்தும்பொழுதும், அவர்கள் தேவைகளை சந்திக்கும்பொழுதும், பரிபூரணராகி நம் பரமபிதாவை மாதிரியாக வெளிப்படுத்துகிறார்.
ஒன்றாக நேரம் செலவழித்தல்!
இரண்டு மணிநேர பயணம் செய்து எங்கள் உறவினரின் திருமணதிற்கு சென்று திரும்பும் பொழுது, மூன்றாவது முறையாக என்னுடைய தாய் என் வேலையைக் குறித்து விசாரித்தார். நான் கூறும் வார்த்தைகள் விசேஷவிதமாக அவர்கள் மனதில் எவ்வாறு பதியவைப்பது என எண்ணியவாறு, முதல் முறை பதிலளிப்பதுபோல நான் சில விவரங்களை மறுபடியும் அவரிடம் கூறினேன். என் தாயார் அல்ஸைமர் (alzheimer) வியாதியினால் தாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழந்து கொண்டிருந்தார். அவ்வியாதி ஒருவருடைய செயல்பாட்டுத் திறனை பாதித்து, இறுதியில் பேச்சுத்திறன் முற்றிலும் அற்று போகவும் இன்னும் அநேக பாதிப்புகள் ஏற்படவும் செய்கிறது.
என் தாயாருக்கு ஏற்பட்ட வியாதியினால் எனக்கு மிகுந்த மனவேதனை இருந்தாலும், அவரோடு நான் நேரம் செலவிடவும், அவரோடு பேசவும் அவர் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி, நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அவர்களை காணச் செல்லும்பொழுதெல்லாம், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு, “அலிசன்(alyson) என்னவொரு இன்ப அதிர்ச்சி,” என்று கூறுவார். நாங்கள் ஒன்றாக சேர்ந்து செலவிடும் நேரங்கள் எங்கள் இருவருக்குமே பிடிக்கும் சில சமயம் என்ன கூறுவதென்று தெரியாமல் அவர் மவுனமாயிருக்கும் பொழுதும் நாங்கள் உரையாடிக்கொள்வோம்.
தேவனோடுள்ள நம் உறவை விவரிப்பதற்கு, இது ஒரு சிறிய, சாதாரண உருவகம் தான். “தமக்குப் பயந்து, தமது கிருபைக்காகக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியாமாயிருக்கிறார்”, என வேதம் கூறுகிறது (சங். 147:11). இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட அனைவரையும், தேவன் தம்முடைய பிள்ளைகள் எனக் கூறுகிறார் (யோ. 1:12). ஒரு வேளை நாம் திரும்பத்திரும்ப அதே விண்ணப்பங்களை எறெடுத்தாலும், அல்லது அவரிடம் என்ன கூறுவது என தெரியாமல் விழித்தாலும், அவர் நம்மிடம் பொறுமையாகவே இருப்பார். ஜெபத்திலே அவரிடம் நாம் என்ன பேசுவது என தெரியாமல் மவுனமாயிருக்கும் பொழுதும் அவர் நம்மைக்குறித்து மகிழ்ந்திருக்கிறார்.
உயிர்ப்பிக்கப்பட்டு
என் தந்தை வாலிபனாக இருந்தபோது, வெளியூரில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியைக் காண தன் நண்பர்களுடன் காரிலே சென்றார். அப்பொழுது, மழையினால் நனைந்திருந்த சாலையிலே கார் டயர் சறுக்கி விபத்திற்குள்ளானது. மிக மோசமான அவ்விபத்திலே என் தந்தையின் ஒரு நண்பர் இறந்து போனார், மற்றொருவருக்கு கைகால்கள் செயலிழந்து போயிற்று. என் தந்தையும் இறந்துவிட்டதாக கருதி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது அவரை அடையாளம் காட்டும்படி, மிகுந்த அதிர்ச்சியோடும் துயரத்தோடும் அவருடைய பெற்றோர் அங்கு சென்றபோது, ஆழ்ந்த கோமாவிலிருந்து என் தந்தை சுயநினைவிற்கு திரும்பினார். அவர்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது.
நாம் “கிறிஸ்து அன்றி அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாய் இருந்தோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 2ஆம் அதிகாரத்தில் நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 1). ஆனால், “தேவனோ இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாய் இருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்” (வச. 4-5). இயேசு கிறிஸ்துவின் மூலம் மரணத்திலிருந்து நாம் உயிர்ப்பிக்கப்பட்டோம். அப்படியென்றால், ஒருவகையில் நம் அனைவருடைய வாழ்வும் பரம பிதாவிற்கு சொந்தமானதே. பாவத்தில் மரித்துப்போயிருந்த நமக்கு, தேவன் தம் அளவற்ற அன்பினால், தம்முடைய குமாரன் மூலம் நாம் ஜீவனையும் வாழ்வளிக்கும் நோக்கத்தையும் பெற்றுக்கொள்ள கிருபை அளித்துள்ளார்.
சமாதான பிணைப்பு!
ஒரு விஷயத்திலே, எனக்கும் என் தோழிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக்குறித்து மின்னஞ்சல்(e-mail) மூலம் நான் வெளிப்படையாக அவளிடம் பேசிய பிறகு அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. ஒருவேளை நான் அப்படி பேசியிருக்கக்கூடாதோ என எண்ணத் தோன்றியது. அவளை கேள்விகள் கேட்டு பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அவள் வெளிநாட்டிற்கு பிரயாணப்படுமுன் இப்பிரச்சனையை தீர்த்துவிட எண்ணினேன். இதற்குமேல் என்ன செய்வது என தெரியாமல், என் மனதிலே அவள் தோன்றும் பொழுதெல்லாம் அவளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு நாள், காலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்கு நான் சென்ற போது, அவளை அங்கு கண்டேன். அவள் என்னை பார்த்த மாத்திரத்தில், அவளுடைய முகத்தில் வலி படர்ந்ததையும் கண்டேன். ஆனால், “தேவனே, இன்று அவளோடு பேச எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நன்றி,” என்று தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, புன்னகையோடு அவளை அணுகினேன். பின்பு நாங்கள் இருவரும் மனந்திறந்து பேசி பிரச்சனையை சரிசெய்து கொண்டோம்.
சில சமயங்களில், நம்முடைய உறவுகளில் வேதனையோ மவுனமோ நுழைந்துவிட்டால் பிரச்சனையை சரிசெய்வது மிகக் கடினமாகிவிடுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது போல, நம்முடைய உறவுகளில் தேவசுகம் உண்டாகும் பொருட்டு, சாந்தகுணத்தையும், தாழ்மையையும் பொறுமையையும் அணிந்துகொண்டு, சமாதானமும் ஐக்கியமும் உண்டாக நாம் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என தேவன் ஏங்குகிறார். பூங்காவிலே எதிர்பாராத சந்திப்பினால் சமாதானத்தை ஏற்படுத்திய தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய ஜனத்தை ஒன்றிணைப்பார்.
கிருபையின் தாளங்கள்
தொண்ணூறு வயதை கடந்த என் நண்பரும் அவர் மனைவியும் திருமணம் செய்து 66 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர்கள் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் இனி வருகிற தலைமுறைகளுக்காக, தங்கள் குடும்ப வரலாற்றை, புத்தகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். “அம்மா அப்பாவிடமிருந்து ஓர் கடிதம்” என்னும் தலைப்பில் உள்ள அப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், அவர்கள் தங்கள் வாழ்வில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதில், “ஒருவேளை கிறிஸ்தவ மதத்தினால் உங்கள் பெலன் அனைத்தும் வற்றிப்போய், நீங்கள் துவண்டுபோய் உள்ளீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டு, அவ்வுறவிலே மகிழ்ந்திருப்பதற்கு பதில், நீங்கள் வெறும் மதத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் தேவனோடு நடக்கும்போது சோர்ந்துபோக மாட்டீர்கள்; மாறாக நீங்கள் உற்சாகமடைந்து, பெலத்தின்மேல் பெலனடைந்து, புத்துயிர் பெறுவீர்கள்”, என்னும் கருத்து, என் வாழ்வை நான் சற்று ஆராய்ந்து பார்க்கத் தூண்டியது (மத். 11:28-29).
இயேசுவின் அழைப்பை, யூஜீன் பீடெர்சன் (Eugene Peterson) “நீங்கள் சோர்ந்துபோய் இருக்கிறீகளா? முற்றிலும் துவண்டுபோய் உள்ளீர்களா? மதத்தினால் வெறுமையாய் உணருகிறீர்களா?.. என்னோடு நடந்து என்னோடு சேர்ந்து பணிசெய்யுங்கள்... கிருபையின் இயல்பான தாளங்களை கற்றுக்கொள்ளுங்கள்”, என மொழியாக்கம் செய்துள்ளார்.
தேவனை சேவிப்பது முற்றிலும் என்னையே சார்ந்தது என நான் எண்ணினால், நான் அவரோடுகூட நடப்பதற்குப் பதில், அவருக்கு வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டேன் என்றே அர்த்தம். இவ்விரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. நான் கிறிஸ்துவோடு நடக்கவில்லை என்றால், என் ஆவி வறண்டு நொறுங்குண்டு காணப்படும். சக மனிதர்களை தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களாய் காண்பதற்கு பதில், நமக்கு இடையூறு ஏற்படுத்துகிறவர்களாக, நம்மை நச்சரிப்பவர்களாக காணத்தோன்றும். ஒன்றும் சரியாக தோன்றாது.
இயேசுவோடுள்ள உறவிலே மகிழ்ந்து களிகூருவதற்கு பதில், நான் மதத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோன்றினால், அத்தருணமே, என்னுடைய பாரத்தை கீழே இறக்கிவைத்துவிட்டு, அவருடைய “இயல்பான கிருபையின் தாளங்களில்” அவருடன் நடக்க வேண்டும்.