தொண்ணூறு வயதை கடந்த என் நண்பரும் அவர் மனைவியும் திருமணம் செய்து 66 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர்கள் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் இனி வருகிற தலைமுறைகளுக்காக, தங்கள் குடும்ப வரலாற்றை, புத்தகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். “அம்மா அப்பாவிடமிருந்து ஓர் கடிதம்” என்னும் தலைப்பில் உள்ள அப்புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், அவர்கள் தங்கள் வாழ்வில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதில், “ஒருவேளை கிறிஸ்தவ மதத்தினால் உங்கள் பெலன் அனைத்தும் வற்றிப்போய், நீங்கள் துவண்டுபோய் உள்ளீர்கள் என்றால், இயேசு கிறிஸ்துவோடு ஐக்கியம் கொண்டு, அவ்வுறவிலே மகிழ்ந்திருப்பதற்கு பதில், நீங்கள் வெறும் மதத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், நீங்கள் தேவனோடு நடக்கும்போது சோர்ந்துபோக மாட்டீர்கள்; மாறாக நீங்கள் உற்சாகமடைந்து, பெலத்தின்மேல் பெலனடைந்து, புத்துயிர் பெறுவீர்கள்”, என்னும் கருத்து, என் வாழ்வை நான் சற்று ஆராய்ந்து பார்க்கத் தூண்டியது (மத். 11:28-29).

இயேசுவின் அழைப்பை, யூஜீன் பீடெர்சன் (Eugene Peterson) “நீங்கள் சோர்ந்துபோய் இருக்கிறீகளா? முற்றிலும் துவண்டுபோய் உள்ளீர்களா? மதத்தினால் வெறுமையாய் உணருகிறீர்களா?.. என்னோடு நடந்து என்னோடு சேர்ந்து பணிசெய்யுங்கள்… கிருபையின் இயல்பான தாளங்களை கற்றுக்கொள்ளுங்கள்”, என மொழியாக்கம் செய்துள்ளார்.

தேவனை சேவிப்பது முற்றிலும் என்னையே சார்ந்தது என நான் எண்ணினால், நான் அவரோடுகூட நடப்பதற்குப் பதில், அவருக்கு வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டேன் என்றே அர்த்தம். இவ்விரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. நான் கிறிஸ்துவோடு நடக்கவில்லை என்றால், என் ஆவி வறண்டு நொறுங்குண்டு காணப்படும். சக மனிதர்களை தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்களாய் காண்பதற்கு பதில், நமக்கு இடையூறு ஏற்படுத்துகிறவர்களாக, நம்மை நச்சரிப்பவர்களாக காணத்தோன்றும். ஒன்றும் சரியாக தோன்றாது.

இயேசுவோடுள்ள உறவிலே மகிழ்ந்து களிகூருவதற்கு பதில், நான் மதத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோன்றினால், அத்தருணமே, என்னுடைய பாரத்தை கீழே இறக்கிவைத்துவிட்டு, அவருடைய “இயல்பான கிருபையின் தாளங்களில்” அவருடன் நடக்க வேண்டும்.