ஒரு விஷயத்திலே, எனக்கும் என் தோழிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக்குறித்து மின்னஞ்சல்(e-mail) மூலம் நான் வெளிப்படையாக அவளிடம் பேசிய பிறகு அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. ஒருவேளை நான் அப்படி பேசியிருக்கக்கூடாதோ என எண்ணத் தோன்றியது. அவளை கேள்விகள் கேட்டு பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அவள் வெளிநாட்டிற்கு பிரயாணப்படுமுன் இப்பிரச்சனையை தீர்த்துவிட எண்ணினேன். இதற்குமேல் என்ன செய்வது என தெரியாமல், என் மனதிலே அவள் தோன்றும் பொழுதெல்லாம் அவளுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். பின்பு ஒரு நாள், காலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்கு நான் சென்ற போது, அவளை அங்கு கண்டேன். அவள் என்னை பார்த்த மாத்திரத்தில், அவளுடைய முகத்தில் வலி படர்ந்ததையும் கண்டேன். ஆனால், “தேவனே, இன்று அவளோடு பேச எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நன்றி,” என்று தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, புன்னகையோடு அவளை அணுகினேன். பின்பு நாங்கள் இருவரும் மனந்திறந்து பேசி பிரச்சனையை சரிசெய்து கொண்டோம். 

சில சமயங்களில், நம்முடைய உறவுகளில் வேதனையோ மவுனமோ நுழைந்துவிட்டால் பிரச்சனையை சரிசெய்வது மிகக் கடினமாகிவிடுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது போல, நம்முடைய உறவுகளில் தேவசுகம் உண்டாகும் பொருட்டு, சாந்தகுணத்தையும், தாழ்மையையும் பொறுமையையும் அணிந்துகொண்டு, சமாதானமும் ஐக்கியமும் உண்டாக நாம் செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என தேவன் ஏங்குகிறார். பூங்காவிலே எதிர்பாராத சந்திப்பினால் சமாதானத்தை ஏற்படுத்திய தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் தம்முடைய ஜனத்தை ஒன்றிணைப்பார்.