Archives: ஜூன் 2017

மிகவும் நன்று!

சில நாட்களில், ஒரே கருப்பொருள் அதனூடாய் கடந்து வருவதை நாம் காணலாம். சமீபத்தில் அப்படிப்பட்டதான நாட்களை நான் எதிர்கொண்டேன். எங்கள் பாஸ்டர், ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திலிருந்து போதிக்க தொடங்கும் முன், பூக்கள் மலர்வதை, காலதாமதமற்ற 2 நிமிட பிரமிக்கத்தக்க தொடர் புகைப்பட தொகுப்பாக காட்டினார். அதன் பிறகு, நான் வீட்டிலே சமூக ஊடகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, பூக்களை பற்றின அநேக பதிவுகளை காண நேர்ந்தது. மேலும், நாங்கள் தோப்பிலே நடக்கையில், இளவேனிற் காலத்து வண்ணமயமான காட்டுப் பூக்கள் எங்கும் சூழ்ந்திருக்க கண்டோம்.

பூக்களையும், பலவகை தாவரங்களையும் (அவை வளர்வதற்கு நிலத்தையும்) சிருஷ்டிப்பின் மூன்றாம் நாளிலே தேவன் படைத்தார். மேலும் அந்நாளிலே, தேவன் இரண்டுமுறை அது “நல்லது” என அறிவித்தார் (வச:24,31). சொல்லப்போனால், தன்னுடைய தலைசிறந்த படைப்பாகிய மனுஷனை சிருஷ்டித்து முடித்தபின், தேவன் தான் படைத்த எல்லாவற்றையும் கண்டு, “அது மிகவும் நன்றாயிருக்கிறது,” என்றார்.

சிருஷ்டிப்புக் கதையிலே, தன் சிருஷ்டிப்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஓரு சிருஷ்டிகரையே நாம் காண்கிறோம். சிருஷ்டிப்புப் பணியை அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தார். அதன் பிரதிபலிப்பாகத்தான் வியப்பளிக்கும் வகைகளோடு கூடிய வண்ணமயமான இவ்வுலகை அவர் வடிவமைத்தார். மேலும், தன் சிருஷ்டிப்பின் தலைசிறந்த படைப்பை இறுதியாக சிருஷ்டித்தார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்” (வச. 27). அவருடைய சாயலை சுமக்கிற நாம், அவருடைய அழகிய கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டு ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளோம்.

தேவ வார்த்தையை கிரகித்து

எங்கள் மகன் சேவியர் பாலகனாய் இருந்தபோது, ‘மான்டெரி பே’ நீர்வாழ் உயிரினக் காட்சிசாலைக்கு குடும்பமாக சென்றிருந்தோம். நாங்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், உட் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய சிற்பத்தை என் மகனுக்கு காட்டி, “அதோ பார், முதுகில் கூன் உள்ள திமிங்கலம்,” எனக் கூறினேன்.

அப்பொழுது அவன் தன் கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “பிரமாண்டமானது,” எனக் கூறினான்.

உடனே என் கணவர் என்னை திரும்பிப் பார்த்து, “இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?” எனக் கேட்டார். எனக்கும் என்ன சொல்வதேன்று தெரியாமல், “ஒருவேளை நாம் அவ் வார்த்தையை பேசும்போது அவன் கவனித்திருக்கலாம்,” என பதிலளித்தேன். நாங்கள் திட்டமிட்டு என் மகனுக்கு கற்றுத்தராதபோதும், எங்கள் மகன் பல வார்த்தைகளை கிரகித்துள்ளான் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

இளைய தலைமுறையினர் வேதவசனத்தை அறிந்துகொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும், திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்களுக்கு அதை கற்றுத் தருமாறு தன் ஜனத்தை தேவன் ஊக்குவிப்பதை உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் காணலாம். இஸ்ரவேலர் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடையும்போது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பயபக்தியோடு தேவனை தொழுதுகொள்ள கற்றுக்கொள்வார்கள். மேலும் முழுமையாய் அவரை நேசிக்கவும், கீழ்ப்படியவும், அவரை அறிகிற அறிவினால் கிட்டிச்சேரும் பொழுது, அதற்குறிய நற்பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள் (வச. 2-5).

திட்டமிட்டு நம்முடைய இருதயத்தையும் மனதையும் வேத வசனத்தினால் நிரப்பும்பொழுது (வச:6), நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியிலும் தேவனுடைய அன்பையும் சத்தியத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர நன்கு ஆயத்தமாயிருப்போம் (வச. 7). நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மாதிரியாக இருந்து, இன்றும் நமக்கு பொருந்தக்கூடிய தேவனுடைய நிலையான சத்தியத்தை, அதன் அதிகாரத்தை, அவர்கள் கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் கனப்படுத்தவும், அவர்களை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துவோமாக (வச 8-9).

நம்முடைய இருதயத்தின் நிறைவால், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களிலிருந்து இயல்பாக பொங்கி வழியும்பொழுது, நாம் ஒரு விசுவாச பாரம்பரியத்தை, தலைமுறை தலைமுறைதோறும் கடந்து செல்லும்படியாக விட்டுச் செல்லலாம் (4:9).

இங்கு பணிவிடை செய்திட

எங்கள் சபையில், புதிய தலைவர்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்தது. தலைவர்களாயினும், பணிவிடைக்காரர்களைப் போல பணி செய்வதே அவர்களுடைய பங்கு என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, ஒரு விசேஷ ‘பாதம் கழுவும்’ விழாவில் சபை மூப்பர் அனைவரும் பங்கேற்றனர். சபையார் கவனித்துக்கொண்டிருக்க, சபைபோதகர் உட்பட தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் பாதங்களை கழுவினர்.

அன்று அவர்கள் செய்ததை இயேசு கிறிஸ்துதாமே நமக்கு மாதிரியாக செய்து காட்டினார் என்பதை யோவான் 13ஆம் அதிகாரத்தில் காணலாம். ‘கடைசி இராபோஜனம்’ என அழைக்கப்படும் அச்சம்பவத்தின்போது இயேசு, “போஜனத்தை விட்டெழுந்து,...  பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களை கழுவ...   தொடங்கினார்” (யோ. 13:4-5). பின்பு இயேசு தன் சீஷர்களிடம் தான் செய்த செயலுக்குரிய விளக்கத்தை விளக்கிய போது, “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல” எனக் கூறினார் (வச. 16). மேலும், “நான் உங்கள் நடுவே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (லூக். 22:27).

ஒப்பற்ற கனம்பொருந்திய இயேசுவே மிகத் தாழ்மையான ஒரு பணியை செய்வாரானால், பணிவிடை செய்வது நம் ஒருவருக்கும் தாழ்வானதன்று. நமக்கு எப்பேர்பட்ட அற்புதமான தொரு மாதிரியை அவர் வைத்துள்ளார்! உண்மையாகவே, அவர் “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய,” வந்தார் (மா:1௦:45). ஒரு தலைவனாகவும் பணிவிடைக்காரனாகவும் இருப்பதென்றால் என்னவென்பதை அவர் வாழ்ந்து காட்டினார். அவர் தாமே இயேசு, பணிவிடை செய்யும் ஒப்பற்றவர்.

உங்களுக்கு நற்பெயர் கிடைக்கவில்லையா?

1950-1960களில் ஆட்ரி ஹெப்பர்ன், நட்டாலி வுட் மேலும் தெபோரா ஹெர் என்ற ஹாலிவுட் நடிகைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஆனால், இந்த நடிகைகளின் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம்; அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியான இசைக் குழுவினர் இயற்றிய மிக இனிமையான பாடல்கள்தான். அவை அந்த நடிகைகளின் திரைப்படங்கள் வெற்றி பெற உண்மையான காரணமாக இருந்தது. அந்த மூன்று பிரசித்திபெற்ற நடிகைகளுக்காக, திரைக்குப்பின்னால் ஒலி கொடுத்தது மார்னி நிக்சன்தான். ஆனால், அவளது முக்கியமான பங்களிப்பை நீண்ட காலமாக ஒருவரும் கண்டு கொள்ளவுமில்லை, அவளைப் புகழவுமில்லை.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிக முக்கியமான பணிகளை முன்னின்று செயல்படுத்துபவர்களை, அப்போஸ்தலனாகிய பவுல் தம் ஊழியத்தில் அதிகமாக சார்ந்திருந்தார். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் வல்லமையோடு தேவ செய்தி வெளிப்பட காரணமாக இருந்தவர் பவுலுடைய எழுத்தர் தெர்தியுவாகும் (ரோம. 16:22). பவுல் அப்போஸ்தலனுக்கும், ஆதித் திருச்சபைக்கும், எப்பாபிராவின் ஊக்கமான ஜெபம்தான் முக்கிய அஸ்திபாரமாக இருந்தது (கொலோ. 4:12-13). களைப்படைந்த பவுல் அப்போஸ்தலன் ஒய்வு எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீதியாள் அவளது வீட்டை திறந்து கொடுத்தாள். கிறிஸ்துவுக்குள் உடன் ஊழியர்களான இவர்களின் உதவி இல்லாமல் பவுல் திறம்பட உழியம் செய்திருக்க முடியாது (வச. 7-18).

தேவனுடைய ஊழியத் திட்டத்தில் நாம் செய்யும் பணி ஒருவேளை வெளிப்படையாக பிறர் பார்க்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், நாம் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து அவருடைய ஊழியத்தில் அமைதியாக பங்கெடுக்கும் பொழுது, தேவன் நம்மேல் பிரியமாய் இருக்கிறார் (1 கொரி. 15:58) அவ்வாறு நாம் செய்யும் பொழுது, அந்த ஊழியம் தேவனுக் மகிமையாகவும், பிறரை அவரண்டை வழிநடத்துவதாகவும் இருப்பதால், நமது ஊழியம் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

இசைந்து இசைத்து

எங்கள் பேத்தியின் பள்ளி இசைக்குழு நிகழ்ச்சியைக் கண்டு நாங்கள் வியந்து போனோம். வெறும் 11 மற்றும் 12 வயது நிரம்பிய சிறுபிள்ளைகள் ஒன்றாக இசைந்து, நேர்த்தியாக வாசித்தார்கள். ஒருவேளை அக்குழுவிலிருந்த ஒவ்வொரு பிள்ளையும் தான் தனியாக இசைக்க வேண்டும் என நினைத்திருந்தால், குழுவாக இவர்கள் சாதித்ததை தனி நபராக இவர்களால் அளித்திருக்க முடியாது. புல்லாங்குழல், சாக்ஸபோன்(saxaphone) போன்ற மர வாத்தியங்கள், டிரம்பெட்(Trumpet) போன்ற பித்தளை வாத்தியங்கள், மற்றும் தாள வாத்தியங்கள் அனைத்தும் ‘இசைந்து’ தந்த பங்களிப்பினால் ஓர் அற்புதமான இசை உண்டாயிற்று!

ரோமாபுரியில் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் எழுதும்பொழுது, “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்க[ள்],” எனக் கூறியுள்ளார் (ரோம. 12:5-6). மேலும், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஊழியம் செய்தல், புத்தி சொல்லுதல், பகிர்ந்தளித்தல், தலைமைத்துவம், இரக்கம் பாராட்டுதல் ஆகிய வரங்களை பவுல் குறிப்பிட்டுள்ளார் (வச 7-8). அதுமட்டுமன்றி, வரங்கள் அனைத்தும், அனைவருடைய பிரயோஜனத்திற்காகவும் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது (1 கொரி. 12:7).

‘இசைந்து’ என்றால் “திட்டம் அல்லது வடிவமைப்பில் ஒருமனதாய் இணைந்து செய்யும் செயல்; நல்லிணக்கம் அல்லது ஒற்றுமை,” ஆகும். இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு தேவன் வைத்துள்ள திட்டம் இதுவே. “சகோதரசிநேகத்திலே, ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (வச. 1௦). நம்முடைய இலக்கு ஒற்றுமையே; போட்டியன்று.

ஒரு வகையில் பார்த்தால், ஒவ்வொரு நாளும், இவ்வுலகம் நம்மை மிக நுட்பமாக கவனித்து கேட்கும்படியாக ஒரு “மேடையிலே” நாம் இருக்கிறோம். இம்மேடையிலே இருக்கும் தேவனுடைய இசைக்குழுவில், தனி நபர் இசைநிகழ்ச்சி ஏதும் இல்லை. மாறாக ஒவ்வொரு வாத்தியமும் இன்றியமையாதது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு இசைந்து பங்களிக்கும்பொழுது, சிறந்த இசை வெளிப்படும்.