Archives: ஜனவரி 2017

நீண்ட நிழல்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் இங்கிலாந்து தேசத்திலுள்ள யார்க்ஷைர் டேல்ஸ் (Yorkshine Dales) என்னும் மாகணத்தின் தொலைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்து விடுதியில் தங்கியிருந்தோம். அங்கு எங்களைத் தவிர இன்னும் நான்கு தம்பதியினர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்நாட்டை சேர்ந்த, ஆங்கிலேயர்கள். முன்பின் அறியாத அவர்களோடு இரவு உணவிற்கு பின் கொஞ்சம் காபி குடித்தவாறு விடுதியின் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய உரையாடல் ஒவ்வொருவருடைய தொழிலை குறித்து திசை மாறியபொழுது, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்ற கேள்வி எழும்பியது. அச்சமயத்தில் நான் சிக்காகோவில் (Chicago) உள்ள மூடி வேதாகம நிறுவனத்தின் (Moody Bible Institute) தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தைப் பற்றியோ அதன் நிறுவனர் டிவைட். எல். மூடியைப் (Dwight. L. Moody) பற்றியோ அவர்கள் ஒருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினேன். ஆனால் அக்கல்லூரியின் பெயரை சொன்ன மாத்திரத்தில் வந்த அவர்களுடைய பதில்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “மூடி மற்றும் சான்கி (Sankey) என்பவர்களா... அந்த மூடியா?” என்று ஒருவரும், “எங்களிடம் சான்கி தொகுத்த பாடல் புத்தகம் உள்ளது. அடிக்கடி நாங்கள் குடும்பமாக ஒன்று கூடி பியானோ (Piano) வாசிப்போடு அப்புத்தகத்தில் உள்ள பாடல்களை பாடுவோம்,” என்று மற்றொருவரும் கூறினார். அதைக்கேட்டு நான் மிகுந்த வியப்புற்றேன்! சுவிசேஷகரான டிவைட் மூடியும் இசைக் குழு நடத்துபவரான இரா சான்கியும் (Ira Sankey) 120 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய தாக்கத்தை, ஊழியத்தின் பயனை இன்றும் உணர முடிந்தது.

அன்று இரவு அவ்வறையை விட்டு கடந்து சென்ற பொழுது, தேவனுக்காக நம் வாழ்விலும் நீண்ட நிழல்களின் தாக்கத்தை எவ்வாறெல்லாம் வீசச் செய்ய முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன். அது, ஒரு ஜெபிக்கும் தாய் தன் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாகவும் இருக்கலாம், ஒரு ஆசிரியர் அல்லது வழிகாட்டியினுடைய தைரியப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம், அல்லது ஒரு நண்பனின் அன்பு நிறைந்த சீர்ப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

“அவருடைய கிருபை... தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங் 100:5) என்னும் அற்புதமான வாக்குத்தத்தத்தில் நாமும் பங்களிக்க முடியும் என்பது நமக்கு கிடைத்த மகிமையான சிலாக்கியம்.

ஜீவனைக் கண்டடைதல்

“நீ ஒரு உதவாக்கரை. உன்னால் குடும்பத்திற்கு அவமானம்தான்,” என்று ரவியின் தந்தை அவனைப் பார்த்து கூறிய வார்த்தைகள் அவன் இருதயத்தை ஊடுருவிக்குத்தியது. அவனுடைய உடன் பிறப்போடு ஒப்பிடும்பொழுது, அவனை இழிவாகவே கருதினார். அவன் விளையாட்டுத் துறையில் சிறந்திருக்க முயற்சித்து முன்னேறிய பொழுதும், தோல்வியுற்றவனாகவே உணர்ந்தான். “என் எதிர்காலம் எப்படி இருக்கும்? நான் முற்றிலும் தோல்வியுற்றவனா? ஏதாவது ஒரு வழியில் வலியில்லாமல், ஜீவனை விட முடியுமா?” என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான். இவ்வெண்ணங்கள் அவனை தொடர்ந்து தொந்தரவு செய்தன. ஆனாலும் அதைக் குறித்து அவன் யாரிடமும் பேசவில்லை. ஏனென்றால் அவன் கலாச்சாரத்தில் அப்படி பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இல்லை. “தனிப்பட்ட வேதனையை உன்னுடனேயே வைத்துக்கொள்; சிதைந்து கொண்டிருக்கும் உன் வாழ்வை நீயாகவே தூக்கி நிறுத்து,” என்றுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன.

ஆகவே ரவி தனியாகவே போராடினான். பின்பு அவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து தோல்வியடைந்து, மருத்துவமனையில் குணமடைந்து கொண்டிருந்த பொழுது, அவனைச் சந்திக்க வந்த ஒருவர், ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து யோவான் 14ஆம் அதிகாரத்தை அவன் தாயாரிடத்தில் வாசிக்கக் கொடுத்தார். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” (வச. 19) என அவன் தாயார் வாசித்தார். அதைக் கேட்டபொழுது “இதுதான் என்னுடைய ஒரே நம்பிக்கையாக இருக்கக்கூடும். ஜீவனின் அதிபதியினால் வகுக்கப்பட்ட ஒரு புதிய ஜீவவழி” என எண்ணி, “இயேசுவே நீர் கூறியது போல, நீரே ஜீவன் அளிக்கும் ஜீவ ஊற்றாக இருப்பின், எனக்கு அந்த ஜீவனைத் தாரும்” என் ஜெபித்தான்.

விரக்தியான தருணங்களை நம் வாழ்வில் நாம் காணக்கூடும். ஆனால் ரவியை போல நாமும் “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிற” இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோம் (வச. 6). வளமிக்க திருப்திகரமான வாழ்வை நமக்களிக்க தேவன் வாஞ்சிக்கிறார்.

ஆசீர்வாதங்களின் பள்ளத்தாக்கு

ஹென்றி மட்டீஸ் (Henry Matisse) என்னும் பிரான்ஸ் தேச கலைஞர் தன் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் தான் படைத்த படைப்புகளே தன்னை சிறப்பாக பிரதிபலிப்பதாக கருதினார். அக்காலக்கட்டத்தில், அவர் புதியதொரு பாணியை முயற்சி செய்து பார்த்தார். அதாவது, வண்ணம் தீட்டுவதற்கு பதில், காகிதங்களைக் கொண்டு பெரிய வண்ணமயமான படங்களை உருவாக்கினார். தன் அறையின் சுவர்களை இப்பிரகாசமான படங்களினால் அலங்கரித்தார். அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பெரும்பாலும் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்ததால், இது அவருக்கு மிக முக்கியமானதாயிற்று.

நோய்வாய்ப்படுதல், வேலையை இழந்து போதல் அல்லது தீராத மனவேதனையினால் அவதிப்படுத்தல் போன்றவை நம்மை அச்சத்தில் ஆழ்த்தும். இதை ‘பள்ளத்தாக்கின்’ அனுபவம் என சிலர் கூறுகின்றனர். தங்களை நோக்கி ஒரு சேனை படையெடுத்து வருகிற செய்தியை யூத ஜனங்கள் கேட்ட பொழுது இதை அனுபவித்தார்கள் (2 நாளா. 20:2-3). அப்பொழுது அந்த ராஜா, “எங்கள்மேல்.... தீமைகள் வந்தால்,... எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக்  கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்..,” என்று (வச. 9) ஜெபித்தார். அதற்க்கு தேவன் "நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றார்" (வச. 17).

யூதசேனை போர்க்களத்தை அடைந்த பொழுது, அவர்களுடைய எதிரிகள் ஒருவருக் கொருவர் வெட்டுண்டு மடிந்து போனதைக் கண்டார்கள். பின்பு, தேவ ஜனங்கள் கைவிடப்பட்ட பொருட்களை மூன்று நாட்களாக சேகரித்தார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்படும்முன், அவ்விடத்திலே ஒன்று கூடி தேவனைத் துதித்து, அவ்விடத்திற்கு “பெராக்கா பள்ளத்தாக்கு” என பெயரிட்டார்கள். ‘பெராக்கா’ என்றால் ‘ஆசீர்வாதம்’ என்று அர்த்தம்.

நம்முடைய வாழ்வின் தாழ்வான சமயங்களிலும் தேவன் நம்மோடு நடந்து வருகிறார். பள்ளத்தாக்குகளிலும் ஆசீர்வாதங்களை கண்டுகொள்ள தேவன் வழிசெய்வார்.

கண்டடையும்படியாக தொலைத்தல்

நான் இங்கிலாந்து தேசத்து மனிதரை திருமணம் செய்து கொண்டு அங்கு சென்றபொழுது, சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கு சுவாரஸ்யமாக கழிக்கக்கூடும் என எண்ணினேன். ஆனால் திரும்பிப் பார்ப்பதற்குள் 20 வருடங்கள் உருண்டோடி விட்டன. நான் இன்னும் இங்கிலாந்து தேசத்தில்தான் வசிக்கிறேன். சில சமயம், என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், நான் பார்த்த வேலை மற்றும் எனக்கு நன்கு பரிச்சயமான அனைத்தையும் எண்ணிப் பார்க்கும்பொழுது, என் வாழ்க்கையை தொலைத்தது போல இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் என் பழைய வாழ்க்கையை இழந்ததினால் அதைவிட சிறந்த புதிய வாழ்வை கண்டுகொண்டேன்.

நம்முடைய வாழ்வை இழக்கும்பொழுது, அதை திரும்ப பெற்றுக்கொள்வோம் என்கின்ற இந்த தலைகீழான ஈவை இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு வாக்குப் பண்ணினார். தன்னுடைய பன்னிரெண்டு சீஷர்களையும் சுவிசேஷம் அறிவிக்க அனுப்பும் பொழுது, தங்கள் தாய், தகப்பனாரை விட, பிள்ளைகளை விட தன்னை அதிகமாக நேசிக்கும்படி அவர்களிடம் கூறினார் (மத். 10:37). குடும்பங்களை சமூதாயத்தின் மூலைக் கல்லாகவும் விலையேறப்பெற்றதாகவும் கருதிய கலாச்சார சூழ்நிலையில் இவ்வார்த்தைகளை இயேசு கூறினார். ஆனால் தனக்காக அவர்கள் ஜீவனையும் கொடுத்தால், அதை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் என வாக்குப் பண்ணினார் (வச. 39).

வெளிநாட்டிற்கு சென்றுதான் கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. சீஷர்களைப் போல அர்ப்பணிப்புடன் சேவை செய்து பரலோக ராஜ்ஜியத்தின் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும் பொழுது, தேவன் தம்முடைய அளவற்ற அன்பை நம்மீது பொழிந்து, அதன் மூலம் நாம் கொடுத்ததைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொள்வதைக் காணலாம். ஆனால் நாம் செய்யும் ஊழியத்தைப் பொறுத்து அவர் நம்மை நேசிப்பதில்லை. அவர் எப்பொழுதும் நம்மை நேசிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் பிறருடைய நலனுக்காக நம்மையே அர்ப்பணிக்கும்பொழுது, ஓர் அர்த்தமுள்ள பூரண மனநிறைவை நாம் கண்டுகொள்கிறோம்.

காற்றில் வளருதல்

காற்று இல்லாத உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். குளங்கள் அமைதியாக இருக்கும். மரத்திலிருந்து கீழே விழும் இலைகள் தெருக்களில் பறக்காது. இப்படியிருக்க காற்று அசையாத இடத்தில் மரங்கள் தீடீரென விழக்கூடும் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஆனால் அது நடந்தது. அரிசோனா பாலைவனத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்த வட்டவடிவ கண்ணாடி கோபுர மண்டபத்தில் பல மரங்கள் இருந்தது. பையோஸ்பியர் 2 (Biosphere 2) என்று அழைக்கப்படும் இம்மண்டபத்தில் துளி காற்று கூட கிடையாது. அப்படியிருக்க, இயல்பை விட இங்கு அதி வேகமாக வளரும் மரங்கள், அதின் பாரம் தாங்கமுடியாமலே திடீரென கீழே விழுந்து விடுகின்றன. இதைக்குறித்து இத்திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் இறுதியாக ஒரு விளக்கமளித்தார்கள். அதாவது, மரங்கள் வலுவானதாக வளர காற்றின் அழுத்தும் விசை தேவை என்பதே.

இயேசு தம்முடைய சீஷர்கள் விசுவாசத்திலே பெலனடைய பலத்த காற்றின் தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள அனுமதித்தார் (மாற். 4:36-41). ஒரு இரவு நேரத்தில், அனுபவமிக்க மீனவர்கள் மிகவும் பழக்கப்பட்ட நீர் நிலையை கடக்கும் பொழுது, அவர்கள் எதிர்கொண்ட புயல்காற்றை சமாளிக்க முடியாமல் அஞ்சினார்கள். பலத்த காற்றும், அலைகளும் அவர்கள் சென்ற படகை அலைக்கழித்துக் கொண்டிருந்த பொழுது, இயேசுவோ படகின் பின் பகுதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். பீதியடைந்து அவரை எழுப்பினார்கள். அவர்கள் சாகப்போவதைக்குறித்து அவர்களுடைய போதகருக்கு கவலை ஏதும் இல்லையா? அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? அதை அவர்கள் பின்பு
அறிந்துகொண்டார்கள். இயேசு காற்றையும், கடலையும் அமைதியாய் இருக்கும்படி அதட்டிவிட்டு, தன் நண்பர்களை பார்த்து ஏன் அவர்களுக்கு அவர் மீது இன்னும் விசுவாசம் வரவில்லை எனக் கேட்டார்.

இக்காற்று வீசயிருக்கவில்லை என்றால் “இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” (மாற். 4:41) என்று அவரது சீஷர்கள் கேட்டிருக்க மாட்டார்கள்.

இன்று, ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வது என்பது கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது. ஆனால் பிரச்சனைகள் அலை கடலென எழும்பி சத்தமிடும் பொழுது, ‘அமைதாலாயிரு’ என்று நமக்கு நம்பிக்கையளிக்கும் அவருடைய சத்தத்தை நாமாகவே அறிந்து கொள்ளவில்லை என்றால், நம்முடைய விசுவாசம் எப்படி பெலனடையும்?